பணிக்குத்தான் ஓய்வு... பாட்டுக்கில்லை!

பயணிகளை பாட்டு மழையில் நனையவைத்த பரிசோதகர் வள்ளி
பணிக்குத்தான் ஓய்வு... பாட்டுக்கில்லை!

சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து தப்பித்து குளுகுளுவென குளிர் காற்று வீசும் நீலகிரி மலையோரம் சென்றால் எப்படி இருக்கும்! நம்மை மடியில் ஏந்தி அன்பு செலுத்த இயற்கை அன்னை அங்கு காத்திருக்கிறாள். கூடவே, பயணத்தின்போது மனதுக்கு இதமான இசை பாடி தாலாட்ட இதுநாள் வரை வள்ளியும் இருந்தார்.

காலை 7:10-க்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயிலில் ஏறிவிட்டால் 10 மணிக்கு குன்னூர் ரயில் நிலையத்தில் கால் பதிக்கலாம். மூன்று மணிநேர சுகமான ரயில் பயணத்தின்போது சுற்றுலாவாசிகளுக்கு அணுக்கமான அக்காவாக, அம்மாவாக, தங்கையாக பாடிப்பறந்த கிளிதான் டிக்கெட் பரிசோதகர் வள்ளி.

கடந்த ஆறு ஆண்டுகளாக கல்லார் முதல் ரன்னிமேடு ரயில்நிலையம் வரை மேற்குத் தொடர்ச்சி மலை ரயிலில் பயணச்சீட்டை மட்டும் சோதனை செய்யவில்லை வள்ளி, தனது இனிமையான குரலால் லட்சக்கணக்கானோரின் மனதை வருடியிருக்கிறார்.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, நீலகிரி மக்களின் படுக மொழியில்கூட நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியிருக்கிறார் பரிசோதகர் வள்ளி. இந்திய ரயில்வே துறை பாடும் நிலா வள்ளிக்கு 2018-ல், ’அன்றாட கதாநாயகர்‘ விருதளித்துக் கவுரவித்தது. அன்றாடம் இவரது பாடலை ரயிலில் கேட்டு ரசித்த பயணிகள் இவருக்குக் கொடுத்த பட்டம், ‘நைட்டிங்கேல் பறவை’.

37 ஆண்டுக்கால ரயில்வே பணி வாழ்க்கையை இந்த ஏப்ரல் மாதத்துடன் நிறைவுசெய்த வள்ளிக்கு சக ஊழியர்களும், சுற்றுலாப் பயணிகளும் ரோஜா பூங்கொத்துடன் பிரியாவிடை கொடுத்தனர். பணியிலிருந்து ஓய்வுபெறும் வயதை எட்டிய பிறகும் குரலில் அத்தனை இனிமையும் இளமையும் தாங்கி நிற்கும் வள்ளியிடம் பேசினோம். கேரள மாநிலம் பாலக்காடு அருகிலுள்ள சொர்ணூரில் பிறந்தவர் ஊட்டி மலை ரயிலின் கானக்குயிலான கதையை மேட்டுப்பாளையத்திலிருந்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

ரயில் வரும்போது சிக்னல் காட்டும் பணியை செய்துவந்த தந்தை ஆஸ்துமாவால் அவதிப்பட்டு மரணமடைந்தபோது வள்ளி ஒன்பதாம் வகுப்பு சிறுமி. 7 பிள்ளைகளையும் மனைவியையும் பரிதவிக்கவிட்டு அந்த மனிதர் அகால மரணமடைய, குடும்ப பாரத்தைச் சுமப்பதற்காக பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்டு தந்தையின் வேலையை வள்ளி ஏற்றார். ரயில்வேயில் நடைமேடையைக் கூட்டிப் பெருக்கும் கடைநிலை ஊழியராக 1985-ல் பணியில் சேர்ந்தார். பிறகு தேர்வுகளை எழுதி படிப்படியாக முன்னேறி பதவி உயர்வு பெற்று 2012-ல் கோவை தகவல் மையத்துக்கு மாற்றமானார். பிறகு, 2016-ல் தேர்வெழுதி டிக்கெட் பரிசோதகரானார். வள்ளியின் கணவர் சசிதரன் ஆரம்பத்தில் கூலித் தொழிலாளி. தற்போது பரதநாட்டிய கலைஞர்கள் அணியும் சலங்கைகளை வடிவமைத்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள்; ஒரு மகன். மூன்று பிள்ளைகளுக்கும் திருமணம் செய்துகொடுத்துவிட்டு குடும்பத் தலைவியாக வள்ளி கம்பீரமாக வீற்றிருக்கிறார்.

டிக்கெட் பரிசோதகர் என்றதும், டிக்கெட்டையும் அத்தாட்சியையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு மறு வார்த்தை பேசாமல் சென்றுவிடும் கறாரான உருவம்தான் கண்முன் வரும். ஆனால், இவர்களிலிருந்து வள்ளி முற்றிலும் வித்தியாசமானவர். எப்படி? அதுகுறித்து அவரே சொல்கிறார் கேளுங்கள்.

“நீங்க சொல்றது நூறு சதவீதம் உண்மை. டிக்கெட்டை சரிபார்க்கிறது தவிற வேறெதுவும் டிடிஐயின் கடமை இல்ல. நானோ சுற்றுலாத்தலமான மேட்டுப்பாளையம் - ஊட்டி ரயிலில் வேலை செஞ்சேன். அந்த ரயிலில் பயணிகளுக்கென நாலு பெட்டிதான். காலை ரயில் புறப்பட்டதும் நாலு பெட்டிகளையும் சரிபார்த்துட்டா பிறகு சும்மாதான் உடகார்ந்திருக்கணும். சின்ன வயசுல ஆசை ஆசையா கர்நாடக இசை கத்துக்கிட்டவள் நான். அதனால நான் படித்த பாட்டை எல்லாம் பாடணுங்கிற உந்துதல் உள்ளுக்குள்ள இருந்தது.

அது மட்டுமில்லாம மலைப் பாதைங்கிறதால ரயில் இஞ்ஜின் சில நேரம் பழுதாகி நின்னுடும். பழுது பார்க்க அரை மணிநேரத்துல இருந்து ஒரு மணிநேரம்வரைகூட ஆகும். அந்த மாதிரி நேரத்துல சுற்றுலாப் பயணிகள் சோர்வடையாம இருக்க பாட ஆரம்பிச்சேன். அப்படியே பயணம் முழுக்க தினமும் சினிமா பாடல்களைப் பாடி மகிழ்விப்பது தொடர்ந்தது. அந்தந்த மாநிலத்திலிருந்து வருகிற பயணிகளுக்காக அவங்க மொழி பாடல்கள், சிலருக்கு பக்தி பாடல்கள், முதியவர்களுக்கு பழைய பாடல்கள், இளைஞர்களுக்கு புதிய பாடல்கள்னு பாடுவேன்.

தமிழ் சினிமா பாடல்கள்னு எடுத்துகிட்டா 'நினைக்கத் தெரிந்த மனமே...,’ உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல...’, ’ஊரு சனம் தூங்கிருச்சு...’, ’யமுனை ஆற்றிலே...’, ‘நேற்று இல்லாத மாற்றம்...’, ’கண்ணுக்கு மையழகு...’, ‘தென்றல் வந்து தீண்டும்போது...’, ‘மாங்குயிலே பூங்குயிலே...’ இப்படி நிறைய பாடல்கள் ரயில் பயணிகளுக்காக பாடியிருக்கேன். என்னுடைய பாடல்களை கேட்டு ரசிக்கவே மறுபடியும் மறுபடியும் வந்த பயணிகள் உண்டு. நான் ஓய்வுபெறுகிறேனு சொன்னதும் ஏக்கத்தோட கடைசி பயணத்தில பாடச் சொல்லி கேட்டவங்களும் உண்டு” என்றார் வள்ளி.

இவ்வளவு சொன்ன பிறகும் பேசிக் கொண்டிருப்பதா! வள்ளியின் கான மழையில் நனையும் ஆசை துளிர்க்க அவரிடம் நேயர் விருப்பத்தை முன்வைத்தோம். ’ஊரு சனம் தூங்கிருச்சு... ஊதக்காத்தும் அடிச்சிடுச்சு’ என்று குழலினும் இனிய குரலில் பாட்டெடுத்ததும் தகிக்கும் சென்னையில்கூட ஒரு கணம் சில்லென்று மழை பெய்ததுபோன்று சிலிர்ப்பு உண்டானது.

பேசும்போது மலையாளம் கலந்த தமிழ் உச்சரிப்பில் பாடகி ஜென்சியின் சாயல் வள்ளியிடம் தொனித்தது. பாடத் தொடங்கியதும் எஸ்.ஜானகியாக உருமாறிவிட்டார். ஜானகி அம்மா என்றே வாஞ்சையோடு விளிக்கும் வள்ளியின் உடை, பாவனை, பின்கழுத்தையும் சேர்த்து மூடும் ரவிக்கை, நெற்றி திலகம் அத்தனையும் பாடகி ஜானகியை நினைவூட்டுகின்றன.

தமிழ், மலையாளம், போன்ற பிராந்திய மொழிகளோடு படுக மொழியிலும் பாடியது எப்படி என அவரிடம் கேட்டபோது, “கேரளாவிலிருந்து 91-லேயே பணியிட மாற்றம் செய்யபட்டு குன்னூருக்குப் போயிட்டேன். குன்னூர்ல கிட்டத்தட்ட 16 வருஷம் வசித்த காலத்தில படுக மொழியை நல்லா பேசக் கத்துக் கிட்டேன். அப்படியே அந்த மொழி இசை, அவங்க பழக்க வழக்கம்னு எல்லாமும் என்னோடு கலந்துடுச்சு.

டிடிஐ ஆகுறதுக்கு முன்பே நான் பல இடங்களில் பாடியிருக்கேன். மேட்டுப்பாளையும், ஊட்டி, ஈரோடு, சேலம், பாலக்காட்டு, சென்னை என பல ஊர்களுக்கு போய் பாடியிருக்கேன். சில நாட்கள் வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக்கிட்டுக்கூட மேடை கச்சேரிலயும், கல்யாண நிகழ்ச்சிகள்லயும் பாடியிருக்கேன். அந்த அளவுக்கு இசை என்கூட பிறந்தது. அதை மறக்க முடியாதே பணிக்குத்தான் ஓய்வு; பாட்டுக்கில்லை” என்று நமக்கும் பிரியாவிடை கொடுத்தார் கானமழை வள்ளி.

வேலையைக் காதலி என்று எல்லோரும் உபதேசம் சொல்லி விடலாம். ஆனால், உண்மையில் இத்தகைய எளிய மனிதர்கள்தான் வேலையோடு வாழ்க்கையையும் காதலிப்பதெப்படி என்று வாழ்ந்து காட்டுகிறார்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in