மகனை மீட்க தனியாளாய் சிறுத்தையுடன் போரிட்ட பெண்மணி

வீரத்தாயை மாநிலம் கொண்டாடுகிறது
மகனை மீட்க தனியாளாய் சிறுத்தையுடன் போரிட்ட பெண்மணி
சிறுத்தை- மாதிரிப் படம்

முறத்தால் புலியை அடித்துத் துரத்திய வீரத் தமிழச்சியை அறிவோம். அதுபோல, மகனின் உயிரை மீட்க சிறுத்தையுடன் போராடி வென்ற வீரப் பெண்மணி ஒருவரை மத்திய பிரதேச மாநிலம் கொண்டாடி வருகிறது.

மாநிலத்தின் சித்தி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது பாடி ஜாரியா கிராமம். இங்குள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை ஒட்டி பைகா பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். வனமும் வனம் சார்ந்த வாழ்க்கையுமாக இவர்கள் தங்களது அன்றாடங்களை கழித்து வருகின்றனர்.

இந்த மக்களில் ஒருவரான கிரண் என்ற பெண்மணி, அன்றைய தினம் தனது 3 குழந்தைகளுடன், குடிசைக்கு வெளியே அனல் மூட்டி குளிர்காய்ந்து வந்தார். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அருகிலிருந்தாலும் மிகவும் அரிதாக மட்டுமே வனவிலங்குகள் காட்டை விட்டு எட்டிப்பார்க்கும். ஆளரவமோ, நெருப்போ தென்பட்டால் அவை மீண்டும் காட்டுக்குள் பதுங்கிக்கொள்ளும்.

மாறாக அன்றைய தினம், சிறுத்தை ஒன்று வனத்திலிருந்து வெளிப்பட்டு கிரணின் குழந்தைகள் மீது கண் வைத்திருந்தது. இரவு குளிருக்கு இதமாக குளிர்காய்ந்து கொண்டிருந்த கிரண் குடும்பம், நடக்கப்போகும் விபரீதத்தை சற்றும் எதிர்பார்க்கவில்லை. பதுங்கி முன்னேறி வந்த சிறுத்தை கண நேரத்தில் கிரணின் 6 வயது மகன் ராகுலை கவர்ந்து சென்றது.

இரண்டொரு விநாடிகள் உறைந்திருந்த கிரண், சுதாரித்துக்கொண்டவராய், மற்ற 2 குழந்தைகளையும் குடிசைக்குள் பத்திரப்படுத்தினார். கையில் கிடைத்த கழியை எடுத்துக்கொண்டு, சிறுத்தையின் தடம் தேடிப் பாய்ந்து ஓடினார். இரவு நேரமும், அடர்ந்த புதர்களும் கண்களை மறைத்தாலும், தாய்ப் பாசம் அவருக்கு உள்ளிருந்து வழிகாட்டியது. மகனின் அபயக்குரல், விரைந்தோடும் சிறுத்தையின் சலசலப்பு ஆகியவற்றைப் பின்தொடர்ந்து ஓடினார் கிரண்.

சுமார் 1 கி.மீ தொலைவுக்கும் அப்பால் இந்த விரட்டல் தொடர்ந்தது. சிறுவனை வேட்டையாடும் முடிவில் அவனை ஒரு புதர் மறைவுக்கு, சிறுத்தை இழுத்துச் சென்றபோது கிரண் வழிமறித்தார். மகனின் உயிரைக் காக்க, தனியாளாய் சிறுத்தையுடன் போரிட ஆயத்தமானார். இருவருக்கும் இடையிலான சீறல்களின் முடிவாக, சிறுவனை விட்டுவிட்டு கிரண் மீது சிறுத்தை பாய்ந்தது. மகனை மீட்ட தெம்பும் சேர்ந்துகொள்ள, சற்று நேரம் சிறுத்தையுடன் ஒற்றையாளாய் போராடினார் கிரண்.

மகன் ராகுலுடன் கிரண்
மகன் ராகுலுடன் கிரண்

அதற்குள் கிராமத்து மக்கள் கையில் விளக்குகளுடன் திரள, கிரணையும் அவரது மகனையும் விட்டுவிட்டு சிறுத்தை ஓடி மறைந்தது. ஞாயிறு இரவு நடந்த சம்பவம், மாநில முதல்வர் காதுகளுக்குப் போனது. தாய்மைக்கே உரிய வீரத்துக்கு இவர்தான் இலக்கணம் என்று மெச்சிய முதல்வர் சிவ்ராஜ் சௌகான், கிரண் மற்றும் ராகுல் மருத்துவ செலவினத்தை அரசே பொறுப்பேற்கும் என நேற்று(டிச.1) உத்தரவிட்டார்.

சிறுத்தை இழுத்துச் சென்றதில் ராகுல் முதுகிலும், கன்னங்களிலும் காயங்கள் அதிகம். சிறுத்தையுடன் தனியாளாய் போரிட்டதில் ஏற்பட்ட காயங்களுக்காக கிரணும் சிகிச்சை பெற்று வருகிறார். மாநிலம் முழுக்க சிறுத்தையைத் துரத்திச் சென்று மகனை மீட்ட தாய் பற்றிய பேச்சாகவே இருக்கிறது.

Related Stories

No stories found.