பிறக்கும்போதே பல் தெரிந்தால் துரதிர்ஷ்டம்!: அவ(ள்) நம்பிக்கைகள்-29

பிறக்கும்போதே பல் தெரிந்தால் துரதிர்ஷ்டம்!: அவ(ள்) நம்பிக்கைகள்-29

நம்பிக்கை:

”சில பிறவி மச்சங்கள், பிறவித் தழும்புகள், பிறக்கும்போதே பல் போன்றவை துரதிர்ஷ்டம் மிக்கவை!?”

உண்மை:

அதிர்ஷ்டக் குறியீடுகளைக் கொண்டாடும் அதேசமயத்தில், சில பிறவி மச்சங்கள், பிறவித் தழும்புகள், பிறக்கும்போதே பல் போன்றவை துரதிர்ஷ்டக் குறிகளாகக் கருதப்படுவதும் உண்டு.

மச்சங்களின் பலன்கள் எனும் நம்பிக்கை உலகெங்கிலும் நாடு, மொழி, இனம் வித்தியாசமின்றி ஒரு என்சைக்ளோபீடியா போடும் அளவுக்கு காணப்படுகிறது. உண்மையில், மச்சங்கள் என்பது தோலில் மெலனின் அதிக அளவு சேர்வதால் ஏற்படும் நிற மாறுதல்கள்தான்.

மச்சங்கள் அதிர்ஷ்டத்தைத் தருகிறதோ இல்லையோ, கண்டிப்பாக பாதிப்புகளை உருவாக்காது. ஆனாலும் மச்சங்களின் அளவு, நிறம், அடர்த்தி ஆகியவை திடீரென மாறுமேயானால் மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வது நலம்.

கிரகணத்தின் கதிர்கள் ஏற்படுத்தியது என்றும், கர்ப்பகாலத்தில் தாயின் நிறைவேறாத ஆசைகள் தழும்புகளாக உருவெடுக்கின்றன என்றும் நம்பப்படும் இன்னொரு வகை பிறவி மச்சங்கள்தான், ஹிமேஞ்சியோமா வகைக் கட்டிகள்.

உண்மையில், ஹிமேஞ்சியோமா (Hemangioma) என்பது ரத்த நாளங்களில் காணப்படும் புற்றில்லாக் கட்டிகள் ஆகும். இவற்றில் சில தானே மறைந்துவிடும் என்றாலும், சில வகைக் கட்டிகளுக்குச் சீரமைப்பு அறுவை சிகிச்சைக் கூட தேவைப்படலாம்.

அடுத்ததாக, பிறவிப் பல். Natal tooth என்ற பிறவிப் பல் என்பது அரக்கர்களின் அம்சம் என்றும், குழந்தையிடம் இது காணப்பட்டால் இல்லத்தில் துர்நிகழ்வுகள் ஏற்படக்கூடும் என்றும் நம்பப்படுகிறது. உண்மையில் இவ்வகை பிறவிப் பல்லானது பெரும்பாலும் கீழ்த்தாடையில் ஒற்றைப் பல்லாகத்தான் இருக்கும்.

சிலசமயங்களில் முழுமையாக உருவாகாத பற்கள் காணப்படும்போது, இடைஞ்சல் தந்த 6-வது விரல்போல இவற்றையும் அகற்ற நேரிடுவதும் உண்டு.

இதேபோல, நெற்றியில் சுழி, முதுகில் மச்சம் என பிறவிக் குறியீடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை நிலவுகிறது. இவற்றில் சிலவற்றை மருத்துவ ரீதியாக கவனிக்க வேண்டும். அதைத் தவிர அறிவியல்பூர்வமாக இவற்றுக்கு எந்தப் பெரிய முக்கியத்துவமும் இல்லை என்பதே உண்மை.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
பிறக்கும்போதே பல் தெரிந்தால் துரதிர்ஷ்டம்!: அவ(ள்) நம்பிக்கைகள்-29
கன்னத்தில் குழி அதிர்ஷ்டம்!? : அவ(ள்) நம்பிக்கைகள்-28

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in