5,000 பிரசவம் பார்த்த செவிலியருக்கு நேர்ந்த சோகம்

5,000 பிரசவம் பார்த்த செவிலியருக்கு நேர்ந்த சோகம்

ஜோதி காவ்லி ஒரு செவிலியர். மகாராஷ்டிராவின் ஹிங்கோலி சிவில் மருத்துவமனையில் பணியாற்றிய அவரை அப்பகுதியில் அறியாதவர்கள் குறைவு. அந்த மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் பல செவிலியர் இருந்தபோதும், பிரசவம் என்றால் ஜோதி காவ்லி நிச்சயம் உடனிருப்பார். பிரசவம் சார்ந்த சிக்கல்கள், சிகிச்சைகள், மருந்துகள் என அனைத்தும் அவருக்கு அத்துபடி.

38 வயதாகும் ஜோதி காவ்லி தனது 2-வது பிரசவத்துக்காக காத்திருந்தார். அவருக்கு நவம்பர் மத்தியில் பிரசவ நாள் குறிக்கப்பட்டிருந்தது. பணியாற்றுவது மருத்துவமனை என்பதால், வீட்டில் ஓய்வெடுக்காது கடமையே கதியாக இருந்தார். சராசரியாக தினசரி குறைந்தது 15 பிரசவங்கள் அரங்கேறும் அந்த மருத்துவமனைக்கும், ஜோதி போன்ற அனுபவமான செவிலியர் உதவி அவசியமாக இருந்தது.

ஜோதி காவ்லி
ஜோதி காவ்லி

நவ.2 அன்று பணியின் இடையே பிரசவ வலி எடுக்க, அதே மருத்துவமனையில் ஜோதி அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனைகள் அவரது பிரசவத்தையொட்டி பிரச்சினைகள் எழும் என்று எச்சரித்தன. ஜோதிக்கும் இது ஆச்சரியமாக இருந்தது. சுகப்பிரசவத்தை எதிர்பார்த்திருந்தவருக்கு சிசேரியன் நடந்தேறியது. பிரசவத்துக்குப் பின்னர் சேயின் நலம் உறுதிசெய்யப்பட்டது. ஆனால், தாயின் உடல்நிலையில் திடீர் சவால்கள் எழுந்தன.

கடந்த ஆண்டுகளில், அந்த மருத்துவமனையில் ஜோதி குறைந்தது 5,000 பிரசவங்களை கையாண்டிருப்பார் என்கிறார் தலைமை மருத்துவர். பிரசவங்களில் திடீரென்று எழும் சிக்கல்களை தனது அனுபவத்தின் அடிப்படையில், பதட்டமின்றி விரைந்து தீர்த்திருக்கிறார் ஜோதி. ஆனால், அவரது பிரசவத்தையொட்டி எழுந்த பிரச்சினையை அவரால் கணிக்க முடியாததோடு, அதற்கு தீர்வுகாண முடியாத நிலையில் ஆழ்ந்தார்.

ரத்தப்போக்கு, மூச்சுத் திணறல் என அடுத்தடுத்த பிரச்சினைகளால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஜோதி மாற்றப்பட்டார். ஆனால், ஜோதியைப் பாதித்த நிமோனியா அவரின் உயிரைப் பறித்தது. ஜோதியின் கைராசியால் பலனடைந்த தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை தந்து, ஹிங்கோலி மருத்துவமனையில் ஜோதியின் படத்துக்கு அஞ்சலி செலுத்திப் போகிறார்கள்.

Related Stories

No stories found.