காதலைப் போலவே கர்ப்பத்திலும் வயிற்றுக்கும் தொண்டைக்கும் உறவு!

அவள் நம்பிக்கைகள்-9
காதலைப் போலவே கர்ப்பத்திலும் வயிற்றுக்கும் தொண்டைக்கும் உறவு!

”வயித்துல இருக்கற குழந்தைய டெஸ்ட் பண்ணச் சொன்னா, கழுத்துல இருக்கற தைராய்டை டெஸ்ட் பண்ணச் சொல்றாங்க டாக்டர். மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடறதுனு சொல்வாங்களே...அது இதுதான்போல…” என்று அலுத்துக் கொண்டிருந்தார் கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் ஒருவர்.

ஆனால், காதலில் மட்டுமல்ல, கர்ப்பத்திலும் வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாமல் ஓர் உறவு இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டுமல்லவா?

நம் எல்லோருக்கும் கழுத்தின் முன்புறத்தில் மூச்சுக்குழாய்க்கு முன்பாக, குரல்வளையின் கீழே, இரு பக்கமும் நீண்டு பட்டாம்பூச்சி வடிவத்தில் தைராய்டு சுரப்பி இருக்கும். இதுவே நமது உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கான தலைமைச் செயலகம் (master metabolic control center) எனலாம். கிரேக்க மொழியில் Thyreos என்றால் கேடயம். உடலின் ஆரோக்கியத்துக்குக் கேடயம்போல செயல்படும் இந்த நாளமில்லா சுரப்பிக்கும், தைராய்டு என்றே பெயர் வைத்ததே அப்படித்தான் என இதன் செயல்பாடுகள் நினைக்க வைக்கின்றன.

இதில் 'தைராக்சின்' மற்றும் 'டிரை அயடோ தைரோனின்' (T3, T4) எனும் முக்கியமான ஹார்மோன்கள் சுரக்கிறது. இவைதான் நமது உடலின் வளர்சிதை மாற்றங்களையும், இன்ன பிற முக்கியப் பணிகளையும் கட்டுப்படுத்துவதுடன் கர்ப்பகாலத்தில் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

உண்மையில் குழந்தையின் மூளை மற்றும் உடல் உறுப்புகள் உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கும் தைராய்டு ஹார்மோன்கள், கரு உருவான 14-16 வாரங்களில் தமது பணியைத் தொடங்குகின்றன. கருவில் வளரும் குழந்தையின் மூளை மற்றும் நரம்புகளின் வளர்ச்சி மட்டுமன்றி, இதயம், நுரையீரல், உடல் தசைகள், எலும்புகள், ஜீரண மண்டலம் போன்றவற்றின் வளர்ச்சியையும், செயல்திறனையும் உறுதி செய்வதும் இதே தைராய்டு ஹார்மோன்கள்தான்.

உணவிலிருந்து பெறப்படும் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகள் போன்றவற்றின் செரிமானத்தைக் கட்டுப்படுத்தி, அவற்றிலிருந்து பெறப்படும் ஏடிபி என்ற சக்தியை உடல் முழுவதும் கொண்டு செல்வதன் மூலம், நாம் ஒவ்வொரு நாளும் உயிர்ப்புடன் இருக்க உதவுவது தைராய்டு சுரப்பிகள்தான். அத்துடன், நமது இதய தசைகள் சுருங்கி விரிதல், நுரையீரல்களின் செயல்பாடு, மற்ற நாளமில்லா சுரப்பிகளின் இயக்கம், உடலின் தட்பவெப்ப கட்டுப்பாடு, கொழுப்புத் திசுக்களின் பகிர்வு, நோயெதிர்ப்புத் திறன் என பலவற்றையும் கட்டுப்படுத்தி நிர்வகிப்பதும் இவைதான்.

எல்லாவற்றுக்கும் மேலாக, மனித இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளைப் பெருமளவு கட்டுப்படுத்துவதும் இதே தைராய்டு ஹார்மோன்கள்தான். இப்படி, பிறக்கும் முன்னரே ஆரம்பித்து, குழந்தை வளர்தல், பருவமடைதல், கருத்தரித்தல், மறுபடியும் கருவளர்தல் என மனித வாழ்க்கையின் ஒரு முழுச்சுற்றையும் முடிவு செய்கிறது தைராய்டு. அத்துடன் நாம் தினமும் மேற்கொள்ளும் முப்பத்து முக்கோடி வேலைகளையும் செய்ய உதவுவது, வெறும் முப்பது கிராம் எடைகூட இல்லாத இந்த தைராய்டு சுரப்பிதான் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!

இப்படிப்பட்ட தைராய்டு சுரப்பிகள் ஆண் பெண் என இருபாலருக்கும் பொதுவானதுதான் என்றாலும், பொதுவாகப் பெண்களுக்கு இதில் குறைபாடுகள் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது. அதிலும் தங்களுக்கு தைராய்டு பாதிப்பு உள்ளதை அறியாமல்தான் பெரும்பாலான பெண்கள் வாழ்ந்து வருகின்றனர். ஏன் என்பதை தொடர்ந்து பேசுவோம்...

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
காதலைப் போலவே கர்ப்பத்திலும் வயிற்றுக்கும் தொண்டைக்கும் உறவு!
பிறந்த குழந்தைக்கும் சர்க்கரை நோய் வருமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in