பெண்ணின் அழகை அல்ல... அறிவைப் பாருங்கள்!

சசி தரூரின் ட்விட்டர் பதிவில் வெளிப்படும் ஆணாதிக்கச் சிந்தனை
பெண்ணின் அழகை அல்ல... அறிவைப் பாருங்கள்!

சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் போட்ட ட்விட்டர் பதிவு, சராசரி இந்திய ஆணின் மனப்போக்கைப் பிரதிபலிக்கிறது. ‘யார் சொன்னது நாடாளுமன்றம் கவர்ந்திழுக்கும் பணியிடம் இல்லை என்று? எனது சக எம்பிக்கள் சுப்ரியா சுலே, பிரனீத் கவுர், தமிழச்சி, மிமி சக்ரபர்த்தி, நுஸ்ரத் ஜஹான், ஜோதிமணி ஆகியோருடன்' என்ற ட்வீட்டுடன் பெண் எம்பிக்கள் 6 பேருடன் அவர் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார். இது பெண்ணை அழகுப் பதுமையாக பார்க்கும் ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடே.

ஒரு பெண், நாடாளுமன்ற உறுப்பினராவது சாதாரண காரியமல்ல. இதற்காக, ஆண்கள் கோலோச்சும் அரசியல் தளத்தில், பெண்கள் கடுமையாக உழைக்கிறார்கள். பல போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தலைமைப் பண்பு, பரந்துபட்ட அறிவு, பேச்சாற்றல், பலதரப்பட்ட மக்களை தொடர்புகொள்ளும் திறன், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் புத்திசாலித்தனம், அன்றாடம் செய்திகளை, தகவல்களை அறிந்து தங்களைப் புதுப்பித்துக்கொள்ளும் தன்மை உள்ளிட்ட ஏகப்பட்ட திறமைகளை வளர்த்துக்கொள்கிறார்கள்.

அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, பொதுவெளியில் இவர்களைப் பார்க்கும் பொதுப்புத்தி, 'அழகு' என்ற ஒற்றைக் கண்ணோட்டத்தில் அடைப்பதற்கு ஆணாதிக்கச் சிந்தனைதான் காரணம். லண்டனில் பிறந்த, வெளியுறவுத் துறை அதிகாரியாக அயல்நாடுகளிலும், ஐ.நாவிலும் பணியாற்றிய, வெளியுறவுத் துறை இணையமைச்சராக உலகெங்கும் சுற்றிய, எழுத்தாளர், அறிவுஜீவி என்று அறியப்பட்ட சசி தரூரும் இதற்கு விதிவிலக்கு அல்ல. எனில், எப்போதுதான் பெண்ணைப் பற்றிய பார்வை மாறும் என்ற கேள்வி எழுகிறது.

சசி தரூருடன் புகைப்படத்தில் உள்ள அந்தப் பெண் எம்பிக்கள் அறிவுக்கூர்மை நிறைந்தவர்கள். பல நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்றுள்ளார்கள். தமது தொகுதி, மாநில நலன் குறித்தும், நாட்டு மக்களின் நிலை தொடர்பாகவும் பல காத்திரமான கேள்விகளை எழுப்பி உள்ளார்கள். இவை எதையும் பொருட்படுத்தாமல், அவர்களின் பங்களிப்பை ஒதுக்கிவிட்டு, 'அழகான' இவர்கள் இருப்பதால் 'கவர்ந்திழுக்கும் இடமாக' நாடாளுமன்றம் உள்ளது என்ற பொருள்படும் சசிதரூரின் ட்வீட் கண்டனத்துக்குரியது. 'ஆற்றல்மிக்க, வலுவான, புத்திசாலிப் பெண்களுடன் நான்' என்று ஏன் அவரால் சொல்ல முடியவில்லை.

ஏனென்றால், இன்னும் இந்தச் சமுதாயமும், ஊடகங்களும் ஆணாதிக்கச் சிந்தனையுடன்தான் உள்ளன. ஒரு பெண் பொதுவெளியில் பேசும்போது, அவர் எப்படி தோற்றமளிக்கிறார், அழகாக இருக்கிறாரா, என்ன உடை அணிந்திருக்கிறார்... இவையெல்லாம்தான் முதலில் கவனிக்கப்படுகின்றன. பிறகுதான் அவர் என்ன பேசுகிறார் என்று கேட்க ஆரம்பிக்கிறார்கள். 'வெளிர் நீல காட்டன் புடவையில் பளிச்சென்று வந்து அமர்ந்தார்' என்று பெண் அரசியல்வாதிகளை, எம்எல்ஏ, எம்பிக்களைப் பற்றி எழுதுகிறார்கள். 'நீலச்சட்டை, கறுப்பு கோட், கறுப்பு பேன்ட்டில் ஜம்மென்று உட்கார்ந்திருந்தார்' என்று ஆண் அரசியல்வாதிகளைப் பற்றி பொதுவாக யாரும் எழுதுவதில்லை. 'நாட்டுப் பொருளாதாரத்தை அவர் புட்டுப்புட்டு வைத்த விதத்தை' சிலாகிப்பார்கள். சுருக்கமாகச் சொன்னால், பெண் என்றால் அழகு, ஆண் என்றால் அறிவு என்ற பிற்போக்குவாதம் எழுத்தில் பெரிதும் வெளிப்படும்.

இதே சசி தரூர், முன்னதாக ஞாயிற்றுக்கிழமையன்று போட்ட ட்வீட்டில், 'நாளை நாடாளுமன்ற அமர்வையொட்டி திட்டமிடுவதற்காக, டெல்லியில் சக எம்பிக்களான மணீஷ் திவாரி, பிரதியுத் போர்டோலி, கார்த்தி அனைவரும் சந்தித்து உரையாடியது சிறப்பு. டீ, காபி பக்கோடா சாப்பிட்டுக்கொண்டே, வீரியமிக்க செயல்திட்டத்தை விவாதித்தோம்' என்று குறிப்பிட்டுள்ளார். அழகான ஆண் எம்பிக்களுடனான சந்திப்பு என்று சொல்லவில்லை, ‘வீரியமிக்க செயல் திட்டத்தை' கவனியுங்கள்.

காலங்காலமாகப் பெண்ணை அழகுப் பதுமையாக மட்டுமே பார்க்கும் ஆணாதிக்கச் சிந்தனையை மாற்ற, இதைப்பற்றி உரையாடிக்கொண்டே இருக்க வேண்டும். சசி தரூரின் கமென்ட் அவ்வளவு பெரிய குற்றமா என்ன என்று சிலர் கேட்கிறார்கள். அவர் அதற்காக வருத்தம் தெரிவித்துவிட்டாரே என்றும் சிலர் வாதிடுகிறார்கள். என்னுடைய பதில், பெண்களைத் தலைமைப் பண்புடைய, அறிவான அரசியல்வாதிகளாக எப்போது பார்க்கப் போகிறீர்கள் என்பதுதான். அவர்களின் தோற்றத்தை ஒதுக்கிவிட்டு, அறிவை மட்டுமே பார்ப்பது என்பது செயற்கையாக இருந்தாலும், இருக்கட்டுமே. சில காலத்துக்குத் தொடர்ந்து அவ்வாறு செய்வோம். அப்படியாவது பெண்ணின் பிம்பத்தை மாற்ற முடிகிறதா, அறிவும், ஆளுமையும் அங்கீகரிக்கப்படுகிறதா என்று பார்ப்போம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in