லென்ஸ் சிமிட்டும் நேரம்

1, நகர்ந்து வந்த நத்தை
லென்ஸ் சிமிட்டும் நேரம்
Vanila Balaji

ஓராயிரம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத விஷயத்தையும் ஒரே ஒரு புகைப்படம் சொல்லிப் புரியவைத்துவிடும் என்பார்கள். அப்படி பேசும்படியான புகைப்படங்களை எடுத்து தனக்கென ஒரு தனித்துவத்தைத் தக்கவைத்துக்கொண்டிக்கும் ஒரு புகைப்படக் கலைஞர் வனிலா பாலாஜி. பிறந்து வளர்ந்தது மதுரையில். திருமணத்திற்கு பிறகு பெங்களூருவில் வசிக்கிறார்.

வண்ணங்களின் மீதிருக்கும் காதலால், ஓவியம் மற்றும் புகைப்படக் கலைத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டு இயங்குபவர் இவர். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான வனிலா, கடந்த 9 வருடங்களாகக் கண்ணில் படும் காட்சிகளை எல்லாம் தனது கேமரா மூலம் கலை நேர்த்தியுடன் பதிவுசெய்து வருகிறார். கணவர் கொடுக்கும் உற்சாகமும் தனது படைப்பூக்கத்துக்கு முக்கியக் காரணம் என்கிறார். பயணங்களின் மீது இருக்கும் ஆர்வத்தால், தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் பல்வேறு இடங்களுக்கும் பயணித்து அரிய படங்களை எடுத்து வருகிறார் வனிலா.

படங்கள் பல கதைகளைச் சொல்லும் என்றாலும், அதனுடன் சில விளக்கங்களும் இருந்தால், அந்த இடங்களைப் பற்றி இன்னும் நிறைய விஷயங்களை அறிந்துகொள்ளலாம் என்பதால், தான் க்ளிக் செய்த படங்களை வைத்தே கட்டுரைகளையும் எழுதி வருகிறார் வனிலா. ‘காமதேனு’ வாசகர்களும் இனி வாரத்தில் இரண்டு நாட்கள், வனிலாவின் ‘லென்ஸ் சிமிட்டும் நேரம்’ புகைப்படத் தொடர் வழியே புதிய கோணங்களில் உலகை தரிசிக்கலாம்!

Vanila Balaji

க்டோபர் மாதம் 2017-ம் வருஷம். இப்போது இருப்பது போல் சமூக இடைவெளி, மாஸ்க், சானிடைசர் இதையெல்லாம் பற்றி எந்தவொரு கவலையும் இல்லாமல் சுற்றித்திரிந்த காலம். கர்நாடகத்தில் விமரிசையாகக் கொண்டாடப்படும் விழாவான தசரா நேரம். ஒவ்வொரு வருடமும், தசரா விடுமுறையில், அம்மா வீடான மதுரைக்குச் சென்று வருவது வழக்கம். இந்த வருடம், ஒரு மாறுதலுக்காக வேறு எங்காவது செல்லலாம் என யோசித்துக்கொண்டிருந்தோம். அப்போது, என் சித்தி மகள், அவளது அலுவலக நண்பர்களுடன், சிக்மகளூர் செல்லப் போவதாகக் கூறினாள். “நண்பர்களுடன் நான் மட்டும் சென்றால் போரடிக்கும். நீங்களும் என்னுடன் வாங்களேன்...” என அழைத்தாள் தங்கை. நமக்கு இந்த ஒரு வார்த்தை போதாதா... சரி, என்று கிளம்பிவிட்டேன். நானும், எனது மூத்த மகனும் அவளுடன் சிக்மகளூர் கிளம்பினோம்.

பெங்களூருவில் இருந்து அர்சிகரே எனும் ஊர் வரை ரயிலில் பயணம். பின் ஒரு டெம்போவில் சிக்மகளூர் வரை செல்லலாம் என முன்னரே திட்டமிட்டு, தக்க ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். சிக்மகளூர் செல்லும் வழியில்தான் பேளூர் மற்றும் ஹளபேடு ஆகிய இரண்டு ஊர்களும் இருக்கின்றன. ஆகவே அவற்றையும் பார்த்துவிட்டுச் செல்லலாம் என ஏற்பாடு. பேளூர் மற்றும் ஹளபேட்டில் உள்ள ஹொய்சாள மன்னர்களின் கோயில்களின் அழகிய சிற்பங்களைப் பார்த்து ரசித்துவிட்டு சிக்மகளூர் செல்வதற்குள் இருட்டிவிட்டிருந்தது.

அடுத்த நாள், முல்லையங்கிரி மலைக்குச் செல்ல திட்டம். அதனால் சீக்கிரமே அனைவரும் உறங்கச் சென்றோம். அடுத்த நாள் அதிகாலை 5 மணிக்கே எங்களைச் சுமந்துகொண்டு முல்லையங்கிரிக்குப் புறப்பட்டது டெம்போ டிராவலர். விடுமுறை தினம் என்பதால் மலைப் பாதை முழுக்க சுற்றுலாப் பயணிகளின் கார்கள், எறும்பு போல ஊர்ந்தன. இடையில் எங்கள் டெம்போ சற்றே சண்டித்தனம் செய்ததால் வேறு வண்டியை ஏற்பாடு செய்து கிளம்ப சற்று தாமதம் ஆகிவிட்டது. நல்ல வேளையாக இன்னுமொரு டெம்போ கிடைத்ததால் பயணம் பெரிதாகச் சிரமம் தரவில்லை.

மலை உச்சியைத் தொடுவதற்கு 3 கி.மீ. இருக்கும் சமயம், பாதை குறுகலாக இருந்ததால் வண்டியை நிறுத்திய போலீஸ், “இதற்கு மேல், சிறிய வண்டிகளுக்கு மட்டுமே அனுமதி” என எங்களுக்கு தடைபோட்டது. எவ்வளவோ பேசிப் பார்த்தும் அவர்கள் எங்களை அனுமதிக்கவில்லை. சரி, அப்படியே பொடிநடையாகவே மலை உச்சிக்குச் சென்றுவிடலாம் என அனைவரும் நடக்க ஆரம்பித்தோம்.

அதிகாலை நேரமாதலால், சாலையோரத்து சிறு சிறு செடி கொடிகளெல்லாம், அழகான பனித்துளிகளை அணிகலன் தரித்து நின்றன. ஆங்காங்கே சிலந்திகளும் தாங்கள் கட்டிய வலைகளைச் செல்லமாகக் சிலுப்பிக் காட்டின. இந்த அழகை எல்லாம் கேமராவில் படமெடுத்துக்கொண்டும், நண்பர்களுடன் பேசிக்கொண்டும் சென்றதால் மலை ஏறிய களைப்பே தெரியவில்லை.

மலை உச்சியில் இருந்த மூலப்ப ஸ்வாமியை தரிசித்துவிட்டு, அங்கிருந்த ஒரு மேட்டில் அமர்ந்து சற்று இளைப்பாறிக்கொண்டிருந்தோம். அங்கு எங்கள் கால்களைத் தழுவி ஓடிக்கொண்டிருந்த மேகங்களின் அழகை ரசித்துக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. அப்போதுதான் கவனித்தேன், கோயிலைச் சுற்றி சிறியதொரு சுவரை எழுப்பி இருந்தனர். அடிக்கடி மழையில் நனைந்ததால் சுவர் முழுக்க பாசி படர்ந்தும், சிறிய புற்கள் முளைத்தும் இருந்தது. எனது கண்களுக்கு அதுவும் ஓர் அழகுதான். திடீரென்று அங்கே ஏதோ அசைவது போல் தெரிந்ததும், என்னவென்று ஆர்வத்துடன் பார்த்தேன்.

அப்போதுதா இந்த அழகிய நத்தை, தன் வீடென்னும் ஓட்டைத் தூக்கிக்கொண்டு மெதுவாக ஊர்ந்துகொண்டிருந்தது. நேர மேலாண்மையைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் மெதுவாக ஊர்ந்து சென்றுகொண்டிருந்த அந்த நத்தை, ‘சுற்றியுள்ள இயற்கை அழகை ரசிக்காமல் ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கு, அனைத்தையும் ரசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்’ என்று பாடமெடுப்பது போல் தோன்றியது எனக்கு. கையில் கேமரா இருக்கும் போது படமெடுக்காமல் இருக்க முடியுமா..? அப்படி எடுத்ததுதான் இந்தப் படம். பூக்களை அதிகமாக விரும்பிப் படமெடுக்கும் நான் இதுவரை நத்தைகளைப் படமெடுத்ததில்லை. இதுதான் முதன் முறை.

அன்றைய பயணத்தில் நல்ல படங்கள் நிறைய எடுத்ததில் மனம் மகிழ்வின் உச்சிக்கே சென்றுவிட்டது. அதே மகிழ்வுடன் மெதுவாக மலையிலிருந்து கீழிறங்கி வந்தோம். அறைக்குப் போனதும் அன்றைய நிகழ்வுகளை மெதுவாக அசைபோட்டேன். அதில் பிரதானமாக இருந்தது இந்த நத்தை!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in