தொப்புள் கொடியை தாயத்தில் கோத்து குழந்தைக்கு கட்டணும்! : அவ(ள்) நம்பிக்கைகள்-22

தொப்புள் கொடியை தாயத்தில் கோத்து குழந்தைக்கு கட்டணும்! : அவ(ள்) நம்பிக்கைகள்-22

நம்பிக்கை :

"குழந்தையின் தொப்புள் கொடியில் உள்ள குருத்தணுக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளதால், அதை தாயத்தில் கோத்து குழந்தைக்கு அணிவிப்பது நல்லது!"

உண்மை :

மற்ற உயிரணுக்கள் அனைத்துக்கும் மூலாதாரமாக விளங்கும் stem cells எனப்படும் குருத்தணுக்கள், தொப்புள் கொடி வழியாகப் பாய்வது உண்மைதான். ஆனால், நாம் புரிந்துகொள்ள வேண்டியது, இந்தக் குருத்தணுக்களைப் பிரித்தெடுப்பது என்பது, அந்தத் தொப்புள் கொடி வழியாக உள்ளே ஓடும் ரத்தம் சம்பந்தப்பட்டது தானே தவிர, தொப்புள் கொடிக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

உண்மையில் தொப்புள் கொடி என்பது, தாய்க்கும் சேய்க்கும் இடையேயான ரத்த ஓட்டத்தைச் சரிவர இயங்கச் செய்யும் ஒரு குழாய்ச் சுவர் மட்டும்தான். ஒரு குழந்தை பிறக்கும்போது, குருத்தணுக்களைப் பிரித்துச் சேமிப்பது என்பது தொப்புள் கொடி வழியாக ஓடும் ரத்தத்திலிருந்துதானே ஒழிய, அதற்கும் தொப்புள் கொடிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

அப்படி குழந்தை பிறக்கும்போதே பிரித்தெடுக்கப்படும் குருத்தணுக்களை, அதற்கான ’ஸ்டெம் செல்’ (stem cell) பேங்க்-ல் பிரத்தியேகமாகச் சேமித்து வைக்கலாம். அவ்வாறு செய்யும் பட்சத்தில், குழந்தையின் குடும்பத்தைச் சேர்ந்த யாரேனும் ஒருவருக்குத் தேவை ஏற்பட்டால் இதைப் பயன்படுத்தலாம். அதை பயன்படுத்திச் செய்யும் சிறப்புச் சிகிச்சைதான் ’ஸ்டெம் செல் தெரபி’.

அதுவும் இன்றைய சூழ்நிலையில் எலும்பு மஜ்ஜை மாற்று, புற்றுநோய், மரபணுக்கள் சார்ந்த நோய்கள் போன்ற வெகுசில நோய்களுக்கு, வெகுசிலருக்கு மட்டுமே இந்த குருத்தணுக்கள் சிகிச்சை பயன்படுத்தப்படுவதால், இதன் பயன்பாடும் வெகு குறைவே.

இப்படியிருக்க, குழந்தையின் காய்ந்து உதிரும் தொப்புள் கொடியுடன் இந்த குருத்தணுக்களை சம்பந்தப்படுத்திக் கொள்ளும் கதை, எங்கிருந்து ஆரம்பித்தது என்பது தெரியவில்லை.

மேலும், எவ்வளவு அறிவியல் காரணங்களைச் சொன்ன பிறகும், தொப்புள் கொடியைத் தாயத்தாகக் கட்டுவதும், தேவை என்று பெற்றோர்கள் முடிவெடுக்கும்போது அதை அரைத்து, குழந்தைக்குக் கொடுப்பது போன்ற அபாயகரமான செயல்களும் ஒரு நம்பிக்கைபோல இன்றும் தொடரத்தான் செய்கிறது.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
தொப்புள் கொடியை தாயத்தில் கோத்து குழந்தைக்கு கட்டணும்! : அவ(ள்) நம்பிக்கைகள்-22
பிரசவத்துக்குப் பிறகு இந்திய கழிப்பறை அபாயம்!?: அவ(ள்) நம்பிக்கைகள்-21

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in