இரும்புச்சத்து மாத்திரை தேவைதானா?

அவள் நம்பிக்கைகள்-13
இரும்புச்சத்து மாத்திரை தேவைதானா?

கர்ப்பகாலத்தில் மூன்றாவது மாதத்திற்குப் பிறகு பரிந்துரைக்கப்படும் மருந்துகளில் மிக முக்கியமானது, இரும்புச்சத்து மாத்திரைகள். அதுவும் கர்ப்பகாலம் மட்டுமன்றி, பிரசவத்திலும், பிரசவத்திற்குப் பின்பு பாலூட்டும் போதும் இரும்புச்சத்து மருந்துகள் தொடர்ந்து பரிந்துரைக்கப்படுகின்றன. உண்மையிலேயே இந்த இரும்புச்சத்து மாத்திரைகள் எதற்கு என்பதைத் தெரிந்து கொள்ளும் முன், இந்த இரும்புச்சத்து நம் உடலுக்குள் என்ன மேஜிக் நிகழ்த்துகிறது என்பதைத் தெரிந்து கொள்வது நமக்கு அவசியமாகிறதல்லவா!

நாம் உயிர் வாழ அத்தியாவசியமானது ஆக்சிஜன். இந்த ஆக்சிஜனை நுரையீரலில் இருந்து மூளை, பல்வேறு திசுக்கள், உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லுக்கும் கொண்டு சேர்த்து, அவற்றுக்கு உயிர்ச்சத்தைக் கொடுப்பதுடன், நம்மைச் சோர்வின்றி ஆற்றலோடும் ஊக்கத்தோடும் இயங்க வைப்பது உடல் இரத்தத்தின் சிவப்பணுக்களில் உள்ள ஹீமோக்ளோபின் ஆகும். இந்த ஹீமோக்ளோபின் சீரான அளவில் இருக்கும்வரைதான் உடலின் ஆரோக்கியமும் குறைவில்லாமல் இருக்கும். அதற்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். ’ஹீம்’ எனும் இரும்புச்சத்து மற்றும் ’க்ளோபின்’ எனும் புரதச்சத்து சேர்ந்து உருவான நிறமிதான் ஹீமோக்ளோபின்.

இரும்புச் சத்து குறையும்போது ஹீமோக்ளோபின் உற்பத்தியும், ரத்தத்தில் அதன் அளவும் குறைந்துவிடும். பொதுவாக ஹீமோக்ளோபின் அளவு ஆண்களுக்கு 14- 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12- 16 கிராம் அளவிலும் இருக்க வேண்டும். ஆனால், வயது வந்த பெண்கள் மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கைச் சந்திப்பதால் இயல்பாகவே பெண்களுக்கு இதன் அளவு குறைவாக இருக்கும். இரும்புச்சத்தின் தேவையும் இங்கு அதிகமாகக் காணப்படுகிறது.

இப்படி ஆக்சிஜனை உடலுக்குள் கொண்டு சேர்க்கும் ஹீமோக்ளோபினில் மட்டுமல்லாமல், தசைகளுக்கு வலிமை சேர்க்கும் மையோ-க்ளோபினிலும், உடல் வளர்ச்சி மற்றும் அதன் இயக்கத்திற்குத் தேவையான ஹார்மோன்களிலும், உணவு செரிமானத்திற்குத் தேவையான என்சைம்களிலும், என எல்லாவற்றிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது இந்த மேஜிக்கல் அயர்ன் எனும் இரும்புச்சத்து.

இவற்றைக் காட்டிலும் இன்னும் முக்கியமாக, கர்ப்பகாலத்தில் கருவின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சிக்கும், அதற்குத் தேவையான ரத்த சுழற்சிக்கும், அதன் எடை கூடுதலுக்கும், வளரும் கருவின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் அயர்ன் இன்றியமையாதது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரும்புச்சத்து இயற்கை தரும் பேரீச்சை, அத்தி, மாம்பழம், பப்பாளி, பீட்ரூட் மற்றும் முருங்கை உள்ளிட்ட கீரை வகைகள், பாதாம், பிஸ்தா போன்ற கொட்டை வகைகள், மீன், முட்டை, இறைச்சி என நம் அன்றாட உணவிலேயே சுலபமாக கிடைக்கிறது. இருப்பினும் இவை மட்டுமே நமது அன்றாடத் தேவையை முற்றிலும் நிறைவு செய்வதில்லை. செரிமானக் குறைபாடுகள், குடலில் புழுக்கள், இரைப்பை அழற்சி போன்றவை ஒருபுறம் இருக்க, ஏற்கனவே மாதவிலக்கின் போது பெரும்பான்மையான பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்த இழப்பு மற்றும் அடுத்தடுத்து உண்டாகும் கர்ப்பங்கள், முந்தைய கர்ப்பத்தில் ஏற்பட்ட ரத்த சோகை ஆகியவற்றாலும் பெண்களுக்கு இரும்புச்சத்தின் தேவை அதிகமாகிறது. அது கர்ப்பகாலத்தில் இன்னமும் கூடுதலாகிறது.

அதாவது சாதாரணமாகக் குறைந்தது 9 மில்லிகிராம் இரும்புச்சத்து தேவைப்படுகிறது என்றால், கர்ப்பகாலத்தில் அதன் தேவை மூன்று மடங்காக 27 மில்லிகிராம் அளவுவரை உயர்கிறது. இதன் காரணமாகவே, கர்ப்பகாலத்தில் மூன்றாவது மாதத்திற்குப் பிறகு, அதாவது வாந்தி மற்றும் மசக்கை சற்று குறைந்தவுடன் இரும்புச்சத்து மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது.

அத்துடன் பிரசவத்தின் போது ஏற்படும் ரத்த இழப்பை ஈடுசெய்யவும், பாலூட்டும்போது அதிகரிக்கும் தேவையை ஈடுசெய்யவும், பிரசவத்திற்குப் பின்னும் இரும்புச்சத்து மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்ளவும் வலியுறுத்தப்படுகிறது. இரும்புச்சத்து மருந்து தொடர்பாக நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை மேலும் பல உள்ளன.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
இரும்புச்சத்து மாத்திரை தேவைதானா?
குழந்தை குறையின்றி பிறக்கும் வரம் வேண்டுமா?

Related Stories

No stories found.