பெண் குழந்தை விஷயத்தில் புரட்சியை எட்டிவிட்டோமா?

பெண் குழந்தை விஷயத்தில் புரட்சியை எட்டிவிட்டோமா?

“என்னம்மா... நீ பாட்டுக்குக் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு ஓகேன்னு கையெழுத்து போட்டு அனுப்பறே... மோகனைக் கேட்க வேண்டாமா?" மிரட்டாத குறையாக வந்து நின்றார், எங்கள் குடும்ப நண்பரான மருத்துவ அதிகாரி. இரண்டாவதும் ஆண் குழந்தை பிறந்திருந்தது. 'பெண் குழந்தை வேண்டாமா... உன் கணவர் ஆசைப்பட்டாரே' என்பது அவர் வாதம்.

ஸ்கேன் வசதி வந்த புதிது. ஆவலுடன் பேசிக்கொண்டிருந்தபோது (அவர் பாலினம் சொல்லவேயில்லை என்பது வேறு விஷயம்) மருத்துவர் கண்டுபிடிப்புபோல.

எனக்கு மட்டும் பெண் குழந்தை மேல் ஆசையில்லையா என்ன? ஆனால், இரண்டுக்குமேல் எப்போதும் தேசத்துரோகம் என்று தோன்றியதால் குடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சை விண்ணப்பம் கேட்டிருந்தேன். குழந்தைப்பேறு முதலில் என் உரிமை என்பதை மருத்துவர் (அந்தக்கால மனுஷி) மனம் நோகாமல் சொல்லி அனுப்பினேன்.

கணவரும் என் முடிவை ஆதரித்தார்.

நம்முடைய குடும்ப அமைப்பு, தொடர்ந்துவரும் பழக்கங்கள் பெண்ணை உடைமையாகப் பார்ப்பதிலிருந்து முற்றிலுமாக மாறிவிடவில்லை. சார்ந்து வாழ்பவளாகவே அவள் பார்க்கப்படுகிறாள்.

இதுவே, இரண்டும் பெண் என்றால் இப்படியே நடந்திருக்குமா என்றார் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்த என் அம்மா. நடந்திருக்கலாம் என்றுதான் சொல்ல முடிந்தது.

எங்கள் நெருங்கிய உறவினர் வீட்டில் இரண்டாவதும் பெண் என்றதும் அடுத்த குழந்தை வேண்டும் என முடிவெடுத்தார்கள். “அதுவும் பொண்ணா இருந்தா என்ன பண்ணுவாங்க...” என்று வீட்டில் கேட்டு, "கொழுப்பு...கொழுப்பு” எனத் திட்டு வாங்கியிருந்தேன். “நா சொன்னேன்ல" என்று பெருமையடித்துக்கொள்ள மனம் வரவில்லை. இன்னொன்று என்று யோசித்து விடுவார்களோ என்ற அச்சம் ஓடியது. நல்லவேளை விஷப்பரீட்சை வேண்டாம் என்று அவர்கள் முடிவெடுத்தார்கள். அம்மாவுக்கும் இதெல்லாம் நினைவு வந்திருக்கலாம்.

அதன்பின்னரான காலங்கள், ‘இரண்டும் பெண்ணாயிருந்தாலும் பரவாயில்லை’, ‘ஒரே குழந்தை போதும் - பெண்ணாயிருந்தாலும்’ என்றெல்லாம் மாறி வந்திருந்தாலும் இப்போதும் போதும் பொண்ணுகள் இருக்கிறார்கள்.

ஏன், பெண்குழந்தைகளைப் பற்றி இந்தப் 'பரவாயில்லை' என்ற நிலையே புரட்சி மாதிரித் தோன்றுகிறது?

நம்முடைய குடும்ப அமைப்பு, தொடர்ந்துவரும் பழக்கங்கள் பெண்ணை உடைமையாகப் பார்ப்பதிலிருந்து முற்றிலுமாக மாறிவிடவில்லை. சார்ந்து வாழ்பவளாகவே அவள் பார்க்கப்படுகிறாள். கூலி வேலையோ, பன்னாட்டு நிறுவனமோ வேறுபாடின்றிப் பொருளீட்டும் இந்தக் காலத்திலும் இதுதான் உண்மை. அவளுடைய திருமணம் என்பதை நோக்கி, பிறந்தவுடனேயே திட்டமிடல் தொடங்கிவிடும். மணமகன் தேர்வு, சீர்வரிசை, திருமண நிகழ்வுவரை மட்டுமல்ல... அவள் சகித்து வாழ்வதிலும் குடும்பத்தின் கவுரவத்தை ஒட்டி வைத்திருக்கிறார்கள்.

தன் தேர்வாக வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் பெண்ணும்கூட, இந்தப் போக்குக்குள் புகுந்து விடுதலே சீரான வாழ்வுக்கு உத்தரவாதம் தரும். ஏனெனில், ஆண், பெண் வேறுபாடின்றி நம் மரபணுக்களில் பச்சை குத்தப்பட்டிருக்கிறது இந்த மரபான விஷயங்கள்.

இவற்றின் அடிப்படையில் பெண் குழந்தை 'செலவு ஐட்டம்' (குழந்தை பிறந்தவுடன் இப்படிக் குறிப்பிடுவதைக் கேட்டிருப்பீர்கள்), பிறந்தவீட்டுப் பொருளாதாரத்தை சுரண்டிச் செல்பவள், ஒருவாய் கஞ்சி ஊற்ற வழியில்லாதவள் என்றெல்லாம் நினைக்கப்பட்டதன் விளைவுதான் கருக்கலைப்புகள், சிசுக்கொலை, தொட்டில் குழந்தை (இப்போது திட்டம் உண்டா?) எல்லாம்!

பெண்கல்வி பெரிய மாற்றம் தந்திருக்கிறது. ஓரளவு உயர்கல்வி வரை போகிறார்கள். தொழில்நுட்பம் பயிலுகிறார்கள். முதல் தலைமுறையாகப் பள்ளியிறுதிவரை சென்றவர்கள் நிச்சயமாக ஆணோ, பெண்ணோ உயர்கல்வி, வேலை என்று செல்ல வழிவகுக்கிறார்கள்.

ஒற்றைப் பெண் குழந்தையைக் கொண்டாடி வளர்க்கும் பெற்றோர் பெருகியிருக்கிறார்கள். முன்போல் திண்ணையில் உட்கார்ந்து மகள் பாசத்தையும் வெற்றிலைச்சாற்றோடு விழுங்கிய தலைமுறை இல்லை. ஸ்கூட்டிகளிலும், ஏன்... மோட்டார்சைக்கிளிலும் மகள் பின்னால் அமர்ந்துபோகும் தகப்பன்கள் இன்றைக்கு அதிகம்.

எட்டோ, பத்தோ படித்துவிட்டு கடைகள், பெட்ரோல் பங்குகள், சிறு நிறுவனங்கள், தொழிற்பேட்டைகள் என்று செல்லும் பதினெட்டையே எட்டாத பெண்களின் வாழ்க்கையை வேறு தளத்தில் அணுக வேண்டும்.

அப்புறம் இருக்கவே இருக்கு கஷ்டமெல்லாம்! இப்போ சுகமா இருக்கட்டும் என்று தலைமாட்டுக்கு பூஸ்ட் கொண்டுபோகும் தாய்மார்கள் ஒருபக்கம். இளவரசர்கள் உள்ள ராஜ்ஜியத்திலும் இளவரசிகளுக்கே செல்வாக்கு அதிகம்.

வரதட்சணை என்ற பேச்சு குறைந்திருக்கிறது என்று குறிப்பிட்டேன் ஒரு உரையாடலில். அதற்கு ஒரு தோழி, “அதை இயல்பாக ஏற்றுக்கொண்டுவிட்டதால் புகாராக வரவில்லை. முன்பைவிட இப்போதுதான் திருமணம் சார்ந்த செலவுகள் அதிகரித்து சுமை கூடிவிட்டது" என்று பதில் சொன்னார். இன்னொருவரோ, “கரோனா ஒருவகையில் நல்லது. சிக்கனமாகத் திருமணங்கள் நடந்து முடிகின்றன" என்றார்.

ஆனால், கரோனாவில் வருத்தமான உண்மை, வறுமை, வேலையின்மை, வருமானத் தட்டுப்பாடு, இடப்பெயர்வு, கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது போன்ற காரணங்களால் அடித்தட்டுக் குடும்பங்களில் பெண் குழந்தைகளை உரிய வயதுக்கு முன்னரே திருமணம் செய்வித்த கொடுமை. இவர்கள் மதில்மேல் பூனை நிலையில் இருக்கும் குடும்பங்கள். எல்லாம் சரியாக இருந்திருந்தால் ஒருவேளை அந்தப் பெண்களுக்கும் கல்வி கிடைத்திருக்கும். வாழ்க்கை சற்றே மாறியிருக்கும்.

இந்த 'சற்றே' என்பதில்கூட ஒரு சந்தேகக்கோடு உண்டு. எட்டோ, பத்தோ படித்துவிட்டு கடைகள், பெட்ரோல் பங்குகள், சிறு நிறுவனங்கள், தொழிற்பேட்டைகள் என்று செல்லும் பதினெட்டையே எட்டாத பெண்களின் வாழ்க்கையை வேறு தளத்தில் அணுக வேண்டும். குறைந்த சம்பளம், அதிக வேலை நேரம், அடிப்படை வசதிகள்கூட இல்லா நிலையில் வளரிளம் பருவத்தைக் கழிக்கும் கூட்டம் இது.

டிஜிட்டல் யுகமானாலும், ஒரு லட்ச ரூபாய் சேலையை அணிந்துபார்க்க விரும்பும் ஜீன்ஸ் அணிந்த செல்லக்கிளிகளுக்கு மடிப்பு வைத்து கண்ணாடியில் காட்டி, "சூப்பரா இருக்கு பாருங்க' என்கிறாள் சீருடைச் சேலைக்காரி.

ஆப்பிளில் படம் பிடித்து அப்பாவுக்கு அனுப்பி அபிப்ராயம் கேட்கிறது செல்லக்கிளி.

கவுன்ட்டருக்கடியில் குனிந்துகொண்டு, “வைம்மா... நான் வர லேட்டாவும். அப்பா குட்சிருந்தா தயவுசெஞ்சு என்னைக் கூட்டிப்போக அவரை அனுப்பிடாதே” என்று அவசரமாக பட்டன்ஃபோனை வைக்கிறது சீருடைக்கிளி!

அக்டோபர் 11 – சர்வதேசப் பெண் குழந்தைகள் தினம்

கட்டுரையாளர்: கவிஞர், புதுச்சேரி வானொலி நிலைய மூத்த அறிவிப்பாளர்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in