தடுப்பூசியிலிருப்பது அதே தொற்றுநோய்க் கிருமிகளே!?

அவள் நம்பிக்கைகள்-19
தடுப்பூசியிலிருப்பது அதே தொற்றுநோய்க் கிருமிகளே!?

கரோனா பெருந்தொற்று காலத்தில் சிறுவர்களுக்கும் குழந்தைகளுக்கும் தடுப்பூசி தேவையில்லை. அவர்களுக்கு இயல்பாகவே நோயெதிர்ப்பு சக்தி இருக்கிறது என்று கூறப்பட்டது நமக்கு நினைவிருக்கும்.

ஆனால், கர்ப்பகாலத்தில் ஒரு குழந்தை பிறக்கும் முன்னரே, அந்தக் குழந்தைக்குப் பாதிப்புகள் ஏற்படாமலிருக்க, சில தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. இதில் எது சரி என்ற கேள்வி எழுகிறதல்லவா?

எது சரி, எது தவறு என்பதைத் தெரிந்து கொள்வதற்கு, இந்தத் தடுப்பூசிகளை அதன் தயாரிப்பு முறைகளை வைத்து எப்படி மூன்று வகைகளாகப் பிரிக்கின்றனர் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஒரு தொற்றுநோய் வருவதைத் தடுக்கவோ அல்லது நோயின் பாதிப்புகளைக் குறைக்கவோ உதவுபவைதான் தடுப்பூசிகள். பொதுவாக ஒரு நோயை நம் உடல் எதிர்கொண்டு, அதற்கெதிரான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்ள, அந்தத் தொற்றுநோய்க் கிருமிகளைத்தான் தடுப்பூசிகளில் பயன்படுத்துகின்றனர் என்றாலும், அந்தக் கிருமிகளைப் பயன்படுத்தும் விதம் உண்மையில் மூன்று விதமாக உள்ளது.

முதலாவது Killed vaccines. அதாவது உயிரற்ற கிருமிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் தடுப்பூசிகள். இதில் நோய்க்கிருமிகளைக் கொன்று அவற்றை நம் உடலில் செலுத்துவதன் மூலம் நம் உடல் எதிர்காலத்தில் இந்தக் கிருமிகளை உணர்ந்து, அதை எதிர்கொள்ள தயார்ப்படுத்தும் முறையாகும். இந்தக் கில்ட் வேக்சின்களுக்கு ஃப்ளூ, போலியோ, ரேபீஸ், காமாலை ஏ போன்ற தடுப்பூசிகளை உதாரணமாகச் சொல்லலாம்.

இரண்டாவது, Live attenuated vaccines. இந்தவகை தடுப்பூசிகளில் கிருமிகள் உயிருடன் இருக்கும். ஆனால், அதன் வீரியம் முற்றிலும் குறைக்கப்பட்டிருக்கும். இந்த வகை தடுப்பூசிகள் நம் உடலில் மிகமிகச் சிறிய அளவில் நோய்மைக் கூறுகளை உண்டாக்கி, அவற்றை நம் உடல் நினைவு கொள்வதன் மூலம் எதிர்ப்பு சக்தியை உருவாக்குபவை. சிக்கன் பாக்ஸ், சின்ன அம்மை, எம்.எம்.ஆர்., ரோட்டா வைரஸ் தடுப்பூசிகளை இவற்றுக்கு உதாரணமாகச் சொல்லலாம்.

மூன்றாவதாக, Subunit/ component vaccines. இந்த வகைத் தடுப்பூசிகளில் முந்தைய வகைகள் போல நோய்க்கிருமியை உயிருடனோ கொன்றோ முழுமையாகச் செலுத்துவதை விடுத்து, நோய்க்கிருமியின் ஏதாவது ஒரு பகுதியை மட்டும் உடலுக்குள் செலுத்துவதன் மூலம் உடல் தடுப்பாற்றலை அதிகரிக்கும் முறையாகும். காமாலை பி, கோவிட், கக்குவான் இருமல் போன்ற தடுப்பூசிகளை இவ்வகை தடுப்பூசிகளுக்கு உதாரணமாகச் சொல்லலாம்.

இவற்றுள் உயிரற்ற கிருமிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் முதல் வகைத் தடுப்பூசிகளும், கிருமியின் ஏதாவது ஒரு பாகத்தை அல்லது அவற்றின் புரதத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் மூன்றாவது வகைத் தடுப்பூசிகளும் உடலில் நேரடியாக நோயை உண்டாக்காது. மாறாக அவற்றிலுள்ள ஆண்டிஜென்களால் வினை மற்றும் எதிர்மவினைகளை மட்டுமே உருவாக்கி நோயெதிர்ப்புத் திறனை உருவாக்கும்.

ஆனால், இரண்டாவது வகை லைவ் வேக்சின்களில் வீரியத்தன்மை குறைந்த கிருமிகள்தான் உள்ளது என்றாலும் அவை நம் உடலில் அந்தத் தொற்றைக் குறைந்த அளவில் ஏற்படுத்தி, அதன் மூலமாகத்தான் நோயெதிர்ப்பை ஏற்படுத்துகிறது. இதனால் தாய்-சேய் என இரு உயிர்களின் பாதுகாப்பு கருதி கர்ப்பகாலத்தில் இந்த இரண்டாம் வகை லைவ் வேக்சின்களை கருவுற்ற தாய்மார்களுக்குச் செலுத்த மருத்துவம் முற்றிலும் மறுக்கிறது.

ஒருவிதத்தில் கர்ப்பகாலத்தில் பாதுகாப்பானவை என்று மேற்கூறப்பட்ட killed மற்றும் component வகையைச் சார்ந்த முதல் மூன்றாம் வகை தடுப்பூசிகளை மருத்துவ அறிவியல் ஒப்புக்கொள்கிறது என்றாலும், இவற்றிலும் ஹெபடைடிஸ் பி, கோவிட் தடுப்பூசி மற்றும் ஃப்ளூ தடுப்பூசி ஆகிய மூன்று தடுப்பூசிகளை மட்டுமே உலகெங்கும் பரிந்துரைக்க அனுமதிக்கிறது. மற்ற தடுப்பூசிகள் கருவுற்ற தாய்க்கு அவசியம் என்றால் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது.

ஏற்கெனவே டி.டி தடுப்பூசியின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பார்த்திருந்த நமக்கு, தடுப்பூசிகள் தயாரிப்பு குறித்த இந்தப் புரிதலுடன் கர்ப்பகாலத்தில் வழங்கப்படும் இதர தடுப்பூசிகளின் முக்கியத்துவத்தை அறிவதும் இங்கு அவசியமாகிறது.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
தடுப்பூசியிலிருப்பது அதே தொற்றுநோய்க் கிருமிகளே!?
தாய்க்கும் சேய்க்கும் நோயெதிர்ப்பு சக்தி!

Related Stories

No stories found.