தாய்க்கும் சேய்க்கும் நோயெதிர்ப்பு சக்தி!

அவள் நம்பிக்கைகள்-18
தாய்க்கும் சேய்க்கும் நோயெதிர்ப்பு சக்தி!

தாய்க்கும் சேய்க்கும் டெட்டனஸ் நோயைத் தடுக்கும் டிடி தடுப்பூசிகள் பொதுவாக கர்ப்பகாலத்தில் இரண்டு முறை வழங்கப்படுகிறது. பிக்மி பதிவுடன் முதல் தடுப்பூசியும், நான்கு வார இடைவெளியில் இரண்டாவது ஊசியும் வழங்கப்படுகிறது.

பிரவசத் தேதிக்கு நான்கு வாரங்கள் முன்னர் மீண்டும் ஒருமுறை வழங்குவதும் ஆங்காங்கே நடைமுறையில் உள்ளது. ஏற்கனவே இரண்டு தடுப்பூசிகளை முறையாகச் செலுத்திக் கொண்ட ஒரு பெண், மூன்று வருடங்களுக்குள் இரண்டாவது முறை கருத்தரித்தால், டிடி தடுப்பூசி ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது. அதேபோல், சிறுவயதில் நான்கு முறை டிபிடி தடுப்பூசி செலுத்தியிருக்கும் பெண்களுக்கும் கருத்தரிக்கும்போது ஒரே ஒரு டிடி தடுப்பூசியே போதுமானதாய் இருக்கிறது.

இந்த டிடி தடுப்பூசிகளை டிஃப்த்ரீயா எனும் தொண்டை அடைப்பான் நோய்க்கான தடுப்பூசியுடன் சேர்த்து வழங்குவது சிறந்தது என்று 1998-ல் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்க, ஏறத்தாழ 133 நாடுகள் அதைப் பின்பற்றி வருகின்றன. 2016-ல் கேரளாவில் ஏற்பட்ட டிஃப்த்ரீயா பரவலுக்குப் பின் நமது நாட்டிலும் TT எனப்படும் டெட்டனஸ் டோக்ஸாய்டு தடுப்பூசிக்குப் பதிலாக, மேம்பட்ட DT எனப்படும் டிப்தீரியா & டெட்டனஸ் தடுப்பூசிகள் கர்ப்பகாலத்தில் சமீபகாலமாக வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், இதே சமயத்தில் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் தமது நாட்டில் டெட்டனஸ் என்பதே இல்லாத நிலையில், 27 முதல் 36 வாரங்கள் அதாவது ஏழு மாதம் தொடங்கி, ஒன்பதாவது மாதத்திற்கு முன்னர் ஒரே ஒருமுறை Tdap என்ற ஒற்றைத் தடுப்பூசியைக் கர்ப்பிணிகளுக்கு வழங்கி வருகிறது. இந்த Tdap என்ற தடுப்பூசி பிறந்த குழந்தையின் டெட்டனஸ், டிஃப்த்ரீயா மற்றும் பெர்ட்யூசிஸ் (கக்குவான் இருமல்) ஆகிய மூன்று நோய்களையும் ஒன்றாகத் தடுக்கும் என்பதுடன், இந்த முத்தடுப்பு ஊசி இந்தியாவிலும் தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும் என்பது விரும்புவோருக்கான கூடுதல் தகவல் ஆகும்.

மண் மற்றும் தூசிகளில் வாழும் டெட்டனஸ் பாக்டீரியாக்கள், பிரசவத்தின் காயத்தின் போதோ அறுவை சிகிச்சையின் போதோ உடலுக்குள் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தாமல் இருக்க வழங்கப்படும் டிடி தடுப்பூசியானது, தாயின் உடலில் நோயெதிர்ப்பு ஆன்டிபாடிகளை உருவாக்கி, தாய்க்கு மட்டுமன்றி கருவிலிருக்கும் சேய்க்கும், அது தனது முதல் டிபிடி தடுப்பூசியைப் பெறும் எட்டு வாரங்கள்வரை டெட்டனஸ் நோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

இந்த தடுப்பூசி மருந்தினை உறையும் குளிரில் வைக்கக்கூடாது. நன்கு குலுக்கிய பிறகு தோள்பட்டை தசையில்தான் செலுத்த வேண்டும். தடுப்பூசி போட்ட இடத்தில் ஓரிரு நாட்கள் வலி, வீக்கம் இருப்பதுடன், உடல் வலி, சோர்வு மற்றும் லேசான காய்ச்சலும் வரலாம் போன்ற முக்கியமான அறிவுரைகளை இதற்கு வழங்குகிறார்கள் மருத்துவர்கள்.

ஆக, டிடி என்றாலும், டிடேப் என்றாலும் அது தாய்க்கும், சேய்க்கும் ஒருசேர நோயெதிர்ப்பைத் தந்து நோயற்ற நிலைக்கு சமுதாயத்தை முன்னேற்றுகிறது இந்த கர்ப்பகால தடுப்பூசி என்ற புரிதலுடன் இவைகளை முறையாக ஏற்றுக்கொள்வோம்.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
தாய்க்கும் சேய்க்கும் நோயெதிர்ப்பு சக்தி!
வீட்டுப் பிரசவம் எதனால் ஆபத்து?

Related Stories

No stories found.