முதல்வரைச் சந்திச்சா என் கஷ்டமெல்லாம் போயிரும்!

விடியலுக்கு வழிதேடும் வனக் காப்பாளர் இந்திரா காந்தி
இந்திரா காந்தி
இந்திரா காந்தி

செங்கல்பட்டு வனச்சரகத்தில் வனக் காப்பாளராக பணிபுரிபவர் இந்திரா காந்தி. நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இவர் தான் அந்த சமூகத்தில் எம்.ஏ., பட்டம் பெற்ற முதல் பெண்மணி. நரிக்குறவர் சமூகத்தில் இந்திய அளவில் அரசுப் பணியைத் தொட்டவர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. சிறுவயது தொட்டு இன்று வரை பொதுவாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும் போராடிக் கொண்டிருப்பதே இவரின் அடையாளம்.

செல்லப் பிராணிகளுடன் கொஞ்சிக் கொண்டிருந்த இந்திரா காந்தியை அவரது செங்கல்பட்டு வீட்டில் சந்தித்துப் பேசினோம். “ரெட்ஹில்ஸ் பக்கத்துல இருக்குற ஒரக்காடுதான் என்னோட சொந்த ஊர். எங்கப்பா பார்த்தசாரதி தமிழ்நாடு நரிக்குறவர் சங்கத்தின் தலைவரா இருந்தார். பிள்ளைகளோட முடியை வெட்டி, படிக்க வெச்சதால அவரை ஊரைவிட்டே ஒதுக்கி வெச்சாங்க. எங்கம்மா ஊசிமணி வியாபாரம் செய்வாங்க. என்னையும் சேர்த்து அஞ்சு பிள்ளைங்க எங்க வீட்ல. பல நேரங்கள்ல... பக்கத்து பள்ளிக்கூடத்துல சத்துணவு சாப்பாட்டோட மிச்சம் தான் எங்களுக்கு பசியாத்தி இருக்கு. அந்த சாப்பாட்ட வாங்கப் போறப்ப ஜன்னல் ஓரத்துல நின்னு பாடத்தைக் கவனிப்பேன்.

ஒரு நாள், ‘நானும் படிக்க வரலாமா டீச்சர்?’னு வாய்விட்டுக் கேட்டுட்டேன். ஆனா, என்னைய ஸ்கூல்ல சேர்த்தா மற்ற பிள்ளைகளுக்கு சிக்கல் வரும்னு சொல்லி, சேர்க்க மறுத்துட்டாங்க. அதுக்காக நான் விட்டுடல. ஜன்னல் பக்கத்துல நின்னு பாத்துட்டே இருந்தேன். அதனால வேற வழியே இல்லாம, என்னைய ஸ்கூல்ல சேர்த்துக்கிட்டாங்க.

அப்பா அம்மா எனக்கு லட்சுமின்னு தான் பேரு வெச்சிருந்தாங்க. ஆனா, என்னோட வகுப்புல ஏற்கெனவே நான்கு லட்சுமிகள் இருந்ததால என்னோட பெயரை மாத்தச் சொன்னேன். இந்திரா காந்தி அம்மான்னா எனக்கு ரொம்ப இஷ்டம். அதனால அந்தப் பெயரையே எனக்கு வெச்சிருங்கன்னு சொன்னேன். இதெல்லாமே எங்க வீட்டுக்குத் தெரியாது. ஒருகட்டத்துல, நான் ஸ்கூலுக்குப் போறேன்னு தெரிஞ்சு எங்கப்பா எனக்கு கல்யாண ஏற்பாடு செஞ்சுட்டாரு.

அதனால ஒரு நாள் ராத்திரி வீட்டைவிட்டுக் கிளம்பிட்டேன். என்ன பண்றது எங்க போறதுன்னு தெரியாம அன்னைக்கி ராத்திரி முழுசும் சுடுகாட்டுல படுத்துருந்துட்டு விடிஞ்சும் விடியாமையும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்ட்டேன். விஷயத்தைக் கேட்ட போலீஸ்காரங்க, எங்கப்பாவக் கூப்பிட்டு அட்வைஸ் பண்ணாங்க. அதுக்கப்புறம்தான் எங்க வீட்ல என்னைய படிக்க அனுமதிச்சாங்க.

படிக்கிற காலத்துலயே ஏகப்பட்ட சவால்களைச் சந்திக்க வேண்டி இருந்துச்சு. அம்புஜம் வெங்கட்ராமன் என்ற ஐயங்கார் அம்மா தான் என்னைய தத்தெடுத்து வளர்த்தார். ‘நீ நல்லா படிச்சு உங்க சமுதாயத்துக்கு சேவை செய்யணும்’னு அவங்க அடிக்கடி சொல்லுவங்க.

பத்தாவது முடிச்ச எனக்கு 1982-ல் சமூக வன நலக் காடுகள் வளர்ப்பு திட்டத்துல சமூக வன ஊழியர் வேலை கிடைச்சுது. மாசம் 150 ரூபாய் சம்பளம். தினமும் சைக்கிளில் பத்திருபது கிராமங்களுக்குப் போய் மக்களை மரக்கன்று நடச் சொல்லி பிரச்சாரம் பண்ணணும். அந்த சமயத்துல மலைவாழ் மக்களோட முன்னேற்றத்துக்காக இந்தியா முழுக்க கலைநிகழ்ச்சிகள் நடத்தப் போவோம். அப்படி ஒரு தடவ டெல்லிக்குப் போயிருந்தப்ப இந்திரா காந்தி பிரதமரா இருந்தார். எங்களோட பணிகளைப் பாராட்டி சான்றிதழ் குடுத்த அவங்க, என்னோட பெயர் இந்திரா காந்தி என்றதும் கட்டித் தழுவிக்கிட்டாங்க. இன்னிக்கும் மறக்கமுடியாத நிகழ்ச்சி அது.

வன ஊழியர் பணியில் எனக்குத் துணை ஒரு நாயும், ரேடியோவும் தான். என்னுடைய பணியைப் பாராட்டிய அதிகாரிங்க, என்னை வனக்காப்பாளராக நியமிக்க பரிந்துரை செஞ்சாங்க. தற்காலிக பணியில இருந்துட்டே பி.ஏ., வரைக்கும் படிச்சுட்டேன். இதுக்கு நடுவுல, என் மனசுக்குப் பிடிச்ச ஒருவரை நானே கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். சாதிவிட்டு போனதால எங்கள எங்க வீட்ல சேர்க்கல. என்னோட வேலைய நிரந்தரம் பண்ணச் சொல்லி பத்து வருசம் போராடுனேன். 1993-ல் ஜெயலலிதாம்மாட்ட மனு கொடுக்க கோட்டைக்குப் போனேன். கூட்ட நெரிசலில் சிக்கித் தவிச்சு ஒருவழியா அவங்க கையில மனுவச் சேர்த்துட்டேன். என்னைப்பத்தி விசாரிச்சுட்டு, எனக்காக விதிமுறைகளை தளர்த்தி நிரந்தர வனக்காப்பாளர் வேலை குடுத்தாங்க ஜெயலலிதாம்மா.

அதுக்கப்புறம் என்னோட வேலையில இன்னும் தீவிரமாகிட்டேன். இந்திராகாந்தி எல்லைக்குள்ள யாரும் நுழையமுடியாதுன்னு இப்பவும் அதிகாரிங்க சொல்லுவாங்க. எங்க குடியிருப்புக்கு ஒதுக்கப்பட்ட இடத்துல சில பேரு திருட்டு மண் எடுத்தாங்க. அதைத் தடுக்க போராடுன என்னைய முடக்கிப்போட நினைச்சவங்க, என் மகனை அடிச்சே கொன்னுட்டாங்க. அந்த சமயத்துல மீடியாக்கள்ல இது பெருசா பேசப்பட்டாலும் எனக்கு எந்தத் தீர்வும் கிடைக்கல. ஆனா, மகனை இழந்துட்டாலும் என் இன மக்களுக்காகப் போராடுறத என்னால நிறுத்த முடியல” எனச் சொல்லும் போதே இந்திரா காந்தியின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.

சேலைத் தலைப்பால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தொடர்ந்து பேசினார். “மகனைப் பறிகொடுத்த அந்த நேரத்துலதான் எனக்கு வனத்துறையில ட்ரெய்னிங் போட்டிருந்தாங்க. என்னால அதில் கலந்துக்க முடியல. அதனால எனக்கு வனவர் பதவி கிடைகாமலே போச்சு. இருந்தாலும் என்னோட பணி அனுபவத்தையும், பொறுப்பையும் கவனத்தில் வெச்சு வனவர் பதவி கொடுக்கலாம்னு பத்து வருசத்துக்கு முந்தியே மாவட்ட வன அலுவலர் பரிந்துரை செஞ்சார். ஆனாலும் இதுவரை எனக்குப் பதவி உயர்வு கிடைக்கல. 22 வருஷமா வனக்காப்பாளராவே போராடிக்கிட்டு இருக்கேன்.

யாரையும் நான் குறை சொல்ல விரும்பல. முதல்வர் ஸ்டாலின் எங்க மக்களோட குறையையும் காதுகுடுத்துக் கேட்கிறார். எங்க சமுதாய மக்களைக் கீழே உட்கார வச்சு சாப்பாடு போட்டதைக் கேள்விப்பட்டு நேரடியாகவே அங்க வந்து பார்த்து ஆறுதல் சொன்னார். தவறு செஞ்சவங்க மேலயும் நடவடிக்கை எடுத்தார். ஆவடியில எங்க இனமக்களைச் சந்திச்சு, அவங்க பசங்க படிக்க உதவிகளைச் செய்தார். அவங்களோட வீட்லயும் சாப்பிட்டார். எனக்கும் அவரை சந்திக்கணும். ஒருவேளை, எனக்கு முதல்வரைச் சந்திக்க வாய்ப்புக் கிடைச்சுதுன்னா அவருக்கிட்ட என்னோட கஷ்டத்தைச் சொல்வேன். நிச்சயம் அவரு என்னோட கஷ்டத்தை தீர்த்து வைப்பாருன்னு நம்பிக்கை இருக்கு” என்று முடித்தார் இந்திரா காந்தி.

இந்திரா காந்தியின் இன்னல் தீர இனியாவது ஒரு வழி பிறக்கட்டும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in