மைனர் பெண்கள் கர்ப்பம் தரிக்கவில்லை என அரசுக்கு எப்படி தெரியும்?

அவள் நம்பிக்கைகள்-16
மைனர் பெண்கள் கர்ப்பம் தரிக்கவில்லை என அரசுக்கு எப்படி தெரியும்?

பெண்ணின் கர்ப்பகாலம், பேறுகாலம், பேறுகாலத்திற்குப் பின்னான முதல் ஆறு வாரங்கள் மற்றும் கருச்சிதைவின் போது ஏற்படும் தாயின் மரணத்தைக் குறிக்கும் எம்.எம்.ஆர். எனும் தாய் இறப்பு விகிதம், ஒரு குடும்பத்தின் சந்ததியை மட்டுமே பாதிப்பதில்லை. அது ஒரு சமுதாயத்தையும், நாட்டின் வளர்ச்சியையும் சேர்த்தே பாதிக்கிறது. ஆகையால், எம்.எம்.ஆர். ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அளவிடும் முக்கிய அளவுகோலாகவே உள்ளது எனலாம்.

இதன் காரணமாகவே ஒவ்வொரு நாடும், அதன் எம்.எம்.ஆர். விகிதத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று உலக அமைப்புகள் தொடர்ந்து அழைப்பு விடுத்துக் கொண்டே இருக்கின்றன. மேலும் ஒவ்வொரு நாட்டிலும், கர்ப்பகால தாய் இறப்பு விகிதத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவது போலவே, பிறந்த குழந்தை இறப்பு விகிதம் என்ற Neonatal Mortality Rate-க்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

முன்பெல்லாம் பிரசவங்கள் வீட்டிலேயே பார்க்கப்பட்டபோது, தாய்- சேய் இறப்புகள் பதிவு செய்யப்படவே இல்லை என்பதால், அதன் பாதிப்புகளும் நமக்குத் தெரியாமலே இருந்தது. ஆனால், பிரசவத்திற்குப் பெண்கள் மருத்துவமனைகளுக்கு வரத் தொடங்கி, அதற்கான புள்ளிவிவரங்களும் பதிவு செய்யத் தொடங்கிய பிறகுதான் இந்த இறப்புகள் பற்றித் தெரியவே தொடங்கியது.

இந்தியாவில், 1980களின் ஆரம்பத்தில் லட்சம் பிரசவத்திற்கு 500-க்கும் மேற்பட்ட தாய்கள் இறப்பது வாடிக்கையாக இருந்தது. அதுவே, 2019-ல், 113 என்ற நிலைக்குக் குறைந்தது. அதேசமயம் தமிழகத்தில் 2019-2020-ல் இந்த MMR வெறும் 53.3 தான். அதாவது, தமிழகத்தில் ஒரு லட்சம் பிரசவம் நடந்தால் அதில் 53.3 தாய்மார்கள் இறக்கிறார்கள் என்பதுடன், தமிழகத்தில் நடைபெறும் பிரசவங்களில், 99 சதவீதம் மருத்துவமனைகளில் மட்டுமே நடக்கிறது என்பதும் ஒரு தேசிய சாதனையாகவே உள்ளது.

அதிலும், ஐக்கிய நாடுகள் சபையின் ’மில்லினியம் டெவலப்மெண்ட் கோல்’ (MDG) எனும் இலக்கான, 4 அல்லது 5 எனும் மிகக் குறைந்த தாய் சேய் இறப்பு விகிதத்தை இந்தியாவின் தென்மாநிலங்களான கேரளா மற்றும் தமிழ்நாடு 2015-லேயே அடைந்து விட்டதுடன், மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவேத் திகழ்கின்றன எனலாம்.

தமிழகத்தில் இந்த நிலையை அடைவதற்கு முக்கியக் காரணமாக விளங்குவது, நமது சுகாதாரத் துறையின் திட்டங்களும் கட்டமைப்பும். அதேநேரம் இது தடங்கலின்றி நடப்பதற்கான முதுகெலும்பே நமது பிக்மி முன்பதிவும் அதற்குத் துணையாக நிற்கும் கிராம மற்றும் நகர்ப்புற செவிலியர்களின் பங்களிப்பும்தான்.

உண்மையில், இப்படிப் பதிவு செய்வதன் மூலம் 18 வயதிற்குக் கீழே உள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்கவில்லை என்பது உறுதி செய்யப்படுகிறது. குறைந்த வருமானம் உள்ள தாய்மார்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படக் கூடாது என்று உணவு மற்றும் மருந்துகளுடன் நிதியுதவியும் சேர்த்தே அளித்து, அவர்களுக்கு ஆரோக்கியமான சந்ததி கிடைக்க அரசாங்கம் உதவுகிறது. மேலும், கருவுற்ற பெண்ணின் ஆரோக்கியத்தையும் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் ஒருங்கே கண்காணிப்பதுடன், இவர்களில் high risk pregnancy எனப்படும் சிக்கலான கர்ப்பம் மற்றும் சிக்கலான பிரசவத்தின்போது அரசு தலைமை மருத்துவமனைகள் அல்லது அனைத்து வசதிகளும் நிரம்பிய தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் மேற்கொள்ள வழிகாட்டி, தாய்-சேய் நோய்மை மற்றும் மரணங்களைப் பெருமளவில் தவிர்க்க இந்த பிக்மி பதிவு முறை பெரிதும் உதவுகிறது.

சரி, தமிழகத்தில் கர்ப்பம் தரித்தவர்களுக்கு இது பொருந்தும். ஆனால், திருமணமாகி வெளிமாநிலத்திலோ வெளியூரிலோ வசிக்கும் கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்துக்குத் தமிழகம் வந்தால் என்ன செய்வது என்று அடுத்த கேள்வி எழுகிறதல்லவா? அவர்களும் நிச்சயம் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவர்களது குழந்தைகளுக்குப் பிறப்பு சான்றிதழ் கிடைக்காது என்பதுதான் பதில்.

ஆறு மாதங்களுக்கு மேலாகப் பிரசவத்துக்கு, தாய்வீட்டில் இருப்பவர்கள் தாய் வீட்டு முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதேசமயம் வெளி மாநிலங்கள் அல்லது வெளிநாட்டிலிருந்து கடைசி மாதங்களில் தமிழகம் வருபவர்கள், அவர்கள் பரிசோதனை மேற்கொள்ளும் மருத்துவமனையின் அருகில் உள்ள சுகாதார செவிலியரை அணுகி இந்தப் பதிவைச் செய்து கொள்ளலாம். அப்படியும் பிரசவ காலம்வரை முன்பதிவு மேற்கொள்ளாதவர்கள், பிரசவத்தின் போதாவது பதிவு செய்தால் மட்டுமே அவர்களது குழந்தைகளுக்குப் பிறப்பு சான்றிதழ் கிடைக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.

முன்பதிவு செய்த எண் தொலைந்து போகும் சமயங்களில், https://picme.tn.gov.in/picme_public என்ற இணையதளத்தின் உதவியுடன் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

இதேபோல பல சந்தேகங்களுக்கு picme help deskgmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும், https://picme.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் கேட்டுத் தெளியலாம்.

பிக்மி பதிவு என்பது ஒரு சிறிய செயல்தான். ஆனால், அது நிகழ்த்தும் செயல்பாடுகளும், அதன் இலக்குகள் தரும் வெகுமானங்களும் ஒரு தேசத்திற்கானது என்பதால், கர்ப்பிணிப் பெண்களே, உங்கள் பிக்மி முன்பதிவை மறவாமல் மேற்கொள்ளுங்கள்.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
மைனர் பெண்கள் கர்ப்பம் தரிக்கவில்லை என அரசுக்கு எப்படி தெரியும்?
தமிழக அரசு என்றுமே கர்ப்பிணிப் பெண்கள் மீது காட்டிவரும் அக்கறை தெரியுமா?

Related Stories

No stories found.