கருத்தரிக்க உதவும் ஹார்மோன் தெரியுமா?

அவள் நம்பிக்கைகள்-10
கருத்தரிக்க உதவும்  ஹார்மோன் தெரியுமா?

தைராய்டு சுரப்பிகள் ஆண் பெண் என இருபாலருக்கும் பொதுவானதுதான். இருந்தாலும் பெண்களுக்கு இதில் குறைபாடுகள் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது. அதிலும் தங்களுக்கு தைராய்டு பாதிப்பு உள்ளதை அறியாமலேதான் பெரும்பான்மையான பெண்கள் வாழ்ந்து வருகின்றனர்.

பொதுவாக தைராய்டு சுரப்பிகள் அதிகப் பணி செய்து அதிக தைராக்சின் சுரப்பது, ’ஹைப்பர்-தைராய்டிசம்’, அதாவது மிகை தைராய்டு எனப்படுகிறது. தைராக்சின் ஹார்மோன் குறைவாகச் சுரப்பது, ’ஹைப்போ-தைராய்டிசம்’ அதாவது, குறை தைராய்டு என்று சொல்லப்படுகிறது. இவற்றுள் மிகை தைராய்டு சற்று குறைவாகவே காணப்படுகிறது என்பது ஆறுதல் அளிக்கிறது.

அடிக்கடி பசித்தல், அதிக உணவு உண்ணுதல், அதிக வியர்வை, திரும்பத் திரும்ப மலம் சிறுநீர் கழித்தல், உடல் மெலிதல், நாடித்துடிப்பு அதிகரித்தல், தூக்கமின்மை, பதற்ற நிலை போன்றவை மிகை தைராய்டின் அறிகுறிகள். உடல் எடை கூடுதல், தோல் வறட்சி, பசியின்மை, ஞாபக மறதி, அதிகத் தூக்கம், குளிர் தாங்க முடியாமை, முடி கொட்டுதல் போன்றவற்றுடன் முறையற்ற மாதவிலக்கு, கருத்தரிப்பதில் சிக்கல்கள், கருச்சிதைவு ஆகியவற்றையெல்லாம் ஏற்படுத்துவது குறை தைராய்டு. இந்த இருநிலைகளிலும் கழுத்து வீக்கம் (goitre) காணப்படலாம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆக, ஒரு பெண் கருத்தரிப்பதற்குப் பெரிதும் உதவும் தைராய்டு ஹார்மோன்களின் அளவு கர்ப்பகாலத்தில் குறைந்தோ அல்லது அதிகரித்தோ காணப்படவும் வாய்ப்புள்ளது. அப்படி இவற்றின் அளவு குறையும்போது, கருத்தரித்த பெண்ணுக்குக் கருச்சிதைவு, குறைப்பிரசவம், சிசு இறப்பு போன்றவற்றை ஏற்படுத்தும்போதே, வளரும் கருவில் தைராய்டு பற்றாக்குறை இன்னும் பல பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது.

பொதுவாகக் கருவின் பதினோராவது வாரத்தில் தைராய்டு சுரப்பி உருவாகிவிடுகிறது. அது 16வது வாரத்தில்தான் முழுமையடைந்து செயல்படத் தொடங்குகிறது என்கிறார்கள் கருவியலாளர்கள் (embryologists). ஆனால், குழந்தையின் மூளை, நரம்புகள், இதயம் உள்ளிட்ட மிக முக்கிய உறுப்புகள் அனைத்தும், கருத்தரித்த 11-12 வாரங்களிலேயே உருவாகத் தொடங்கிவிடும். வளரும் கருவின் முதல் 16 வரையிலான வாரங்களில், அதன் வளர்ச்சிக்குத் தேவைக்கான தைராய்டு ஹார்மோன்களை வழங்குவது தாய்தான்.

இந்த சமயத்தில் தாயின் ஹார்மோன்கள் குறைபாடு, குழந்தையின் உறுப்புகள் வளர்ச்சியில் தாமதத்தை ஏற்படுத்திவிடும். அத்துடன் முழுமையான தைராய்டு குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளுக்குச் சுறுசுறுப்பின்மை, கண் பார்வைக் கோளாறு, காது கேளாமை, புத்தி கூர்மையின்மை, சோர்வு, கற்றல் குறைபாடு போன்றவற்றுடன் உடல் மன வளர்ச்சிக் குறைபாடுகளுடன் க்ரெடின் (Cretin) எனும் குள்ளர்களாகப் பிறக்கும் நிலைகூட ஏற்படுகிறது.

அதிலும் பெண் குழந்தையாக இருந்தால் பருவமடைவதில் தாமதம், மாதவிடாயில் சிக்கல்கள் போன்ற கர்ப்பப்பை பிரச்சினைகளையும் இது உருவாக்கக்கூடும். இப்படியான பாதிப்புகள் தாய்க்கும், சேய்க்கும் ஏற்படுவதை தவிர்க்கவே தைராய்டு பரிசோதனைகள் கருத்தரிப்புக்கு முன், கருத்தரித்தவுடன், பிறந்த குழந்தைக்கு என ஒரு முக்கியமான பரிசோதனையாகப் பரிந்துரைக்கப்படுகிறது.

ஆம்...நமது எதிர்கால சந்ததியின் அறிவு வளர்ச்சிக்கு ஆதாரமே தைராய்டுதான். கர்ப்பகாலத்தில் தைராய்டு பரிசோதனையை மேற்கொண்டு, தேவைப்படும்போது அதற்குப் பரிந்துரைக்கப்படும் சிகிச்சையையும் பெற்று நாமும் நமது அடுத்த தலைமுறையும் பலனடைவோம்.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
கருத்தரிக்க உதவும்  ஹார்மோன் தெரியுமா?
காதலைப் போலவே கர்ப்பத்திலும் வயிற்றுக்கும் தொண்டைக்கும் உறவு!

Related Stories

No stories found.