கீரையும், கருவாடும்!: அவ(ள்) நம்பிக்கைகள்-20

கீரையும், கருவாடும்!: அவ(ள்) நம்பிக்கைகள்-20

நம்பிக்கை :

"கீரை சாப்ட்டா குழந்தைக்கு பச்சையாப் போகும்..."

உண்மை :

கர்ப்பகாலம் முழுதும் பயணிக்கும் பல நம்பிக்கைகளில், உணவின் மீதான பல நம்பிக்கைகள் விசித்திரமானவை. அது, பிரசவத்துக்குப் பின்னும் தாயின் உணவுப் பழக்கங்களில் காணப்படுவது சற்று அதிகம் என்பது, இன்னொரு ஆச்சரியம். அதில் ஒன்றுதான் இது.

பொதுவாக, meconium என அழைக்கப்படும் பிறந்த குழந்தையின் மலம், முதல் 4 அல்லது 5 நாட்களுக்கு, கருப்பு நிறத்துடனும், தொடர்ந்து பச்சை நிறமாகவும், அதன்பின் மஞ்சள் நிறமாகவும் மாறும்.

Transitional stools எனும் இந்த நிற மாற்றங்கள், பிறந்த குழந்தையின் ஹீமோகுளோபினின் தன்மை மாறுவதால் நிகழும் இயற்கை நிகழ்வாகும்.

அதாவது, தாயின் வயிற்றுக்குள் இருக்கும்போது, குழந்தைக்கு HbF அதிகம் காணப்படுகிறது, அதுவே பிறந்தபின், ஓரிரு நாட்களில் HbA என மாறும். இந்த மாற்றங்களுடன் சேர்ந்தே நிகழக்கூடியதுதான், குழந்தையின் இந்த மல நிற மாற்றங்களும்.

ஆக, அம்மா கீரையே உண்ணாவிட்டாலும் குழந்தை பச்சை நிறத்தில் மலம் கழிக்கும் என்பதே, இதில் பச்சையான உண்மை.

நம்பிக்கை :

"கருவாடு சாப்ட்டா, தாய்ப்பால் நல்லா சுரக்கும்"

உண்மை :

தாய்ப்பால் சுரப்பதற்கு, மிக முக்கியமான தேவைகள், தாய் பாலூட்டுவதும், குழந்தை பால் குடிப்பதும்தான் ஆகும்.

தாய் தன் சேய்க்கு பால் புகட்டும்போது குழந்தையின் மீது அவளுக்கு பாசமும் பந்தமும் அதிகரிப்பதைப் போலவே, அவள் உடலில் புரோலாக்டின், ஆக்சிடோசின் ஆகிய ஹார்மோன்கள் அதிகம் சுரந்து, பாலூட்டுவதை எளிதாக்குகின்றன. அத்துடன் பாலூட்டுதலுக்குத் தாய் உட்கொள்ளும் சத்தான உணவு வகைகளும், அதன் இணை உணவுகளும் நிச்சயம் உதவி செய்கின்றன என்பதும் உண்மைதான்.

புரதங்கள், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் சேர்ந்த உணவு வகைகள் பாலூட்டுதலுக்கு ஏற்புடையனவே என்றாலும், அதில் நிச்சயம் கருவாடு இல்லை.

உண்மையில், உப்பில் ஊற வைத்த கருவாடு, அசைவ உணவுகளில் சத்துகள் குறைவாக உள்ள உணவாகும். கூடவே வயிற்று அழற்சி, செரிமானமின்மை ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடும். ஏற்கனவே, கர்ப்பகால ரத்த அழுத்தம் உள்ள பெண்களுக்கு அந்த அழுத்தத்தை இன்னும் அதிகமாக்கிவிடும் அபாயமும் உள்ளது.

மருத்துவர் அல்லது தகுந்த டயட்டீஷியனிடம் அறிவுரை பெற்றுக் கொண்டு, உணவு உண்ணுதல் நலம். என்றாலும் கர்ப்பகால ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ள பெண்கள் கருவாட்டை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
கீரையும், கருவாடும்!: அவ(ள்) நம்பிக்கைகள்-20
பிறந்த குழந்தைக்கு தேன் தருவது நல்லது!: அவ(ள்) நம்பிக்கைகள்-19

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in