‘என் உடம்பு...’ : எல்லோரும் அவசியம் பார்க்க வேண்டிய குறும்படம்

 ‘என் உடம்பு...’ : எல்லோரும் அவசியம் பார்க்க வேண்டிய குறும்படம்

‘என் உடம்பு...’ என்ற 17 நிமிட குறும்படம் நேற்று யூடியூபில் வெளியாகியிருக்கிறது. மிக அருமையான முயற்சி! இயக்குநர் எர்த்லிங்க் கவுசல்யா, முக்கிய பாத்திரத்தில் நுணுக்கமாக பெண் உணர்வுகளை வெளிப்படுத்திச் சிறப்பாக நடித்திருக்கும் செம்மலர் அன்னம், காத்திரமான கவிதையை எழுதியிருக்கும் கவிஞர் மனுஷி, இணைந்து நடித்திருப்போர், தயாரிப்புக் குழுவினர் அனைவருக்கும் உளம் நிறைந்த பாராட்டுகளும், நிறைய அன்பும்!

நாம் வாழும் இந்த ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண் உடல் என்பது அவளுக்குச் சொந்தமல்ல. இப்படிச் சொல்வது பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், இதுதான் கசப்பான உண்மை. பெண் குழந்தை எப்படி நடந்துகொள்ள வேண்டும், யாரைக் கல்யாணம் செய்ய வேண்டும், எப்போது குழந்தை பெற வேண்டும், என்ன குழந்தை பெற வேண்டும், எப்போது குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்று அவள் உடலுடன், கருப்பையுடன் தொடர்புடைய எல்லாவற்றையும் குடும்பமும், ஜாதியும், மதமும், அரசாங்கமுமே தீர்மானிக்கின்றன.

பெண் குழந்தை பிறந்தது முதல், கறுப்பாக இருக்கா; மூக்கு சப்பையா இருக்கு என்று ஆரம்பித்து, வளரவளர குண்டா இருக்கா, ரொம்ப ஒல்லியா இருக்கா, குள்ளமா இருக்கா, ரொம்ப உசரமா இருக்கா, பல்லு தூக்கியிருக்கு, முடி கம்மியா இருக்கு, கண்ணு சின்னதா இருக்கு, காது பெரிசா இருக்கு என்றெல்லாம், பொதுபுத்தி விமர்சித்துக் கொண்டே இருக்கிறது. இந்த விமர்சனங்கள் அவள் தன் உடலைப் பற்றிப் பெருமைப்பட எதுவுமில்லாமல் காலி பண்ணிவிடுகிறது. இன்னும் சொல்லப்போனால், அவளுக்கு தன் உடல்மீது குற்றவுணர்வை உண்டாக்கிவிடுகிறது. அவள் வயதுக்கு வந்தபிறகு, இந்த குற்றவுணர்வுடன் கோபமும் சேர்ந்து கொள்கிறது.

உடலில் ஏற்படும் மாற்றங்களை அறிவியல்பூர்வமாக புரிய வைக்காதது, அவள் பருவமடைந்ததை காரணம்காட்டி அவள் சுதந்திரத்தைத் தடை செய்வது, மாதவிடாயை அருவெறுப்பாக, தொந்தரவாக நினைக்கச் செய்வது, பாலியல் சீண்டல்கள் என்றெல்லாம் பெண்ணை, தன்னுடலையே வெறுக்க வைக்கிறது இந்த ஆணாதிக்கச் சமூகம். இதனுடன், “உன் உடலை உன்னைக் கல்யாணம் செய்துகொள்பவன்தான் பார்க்க வேண்டும், தப்பித்தவறி வேறொருவன் பார்த்துவிட்டால் மிகப் பெரிய அவமானம்” என்ற மிகத்தவறான கருத்தாக்கத்தைப் பெண்களிடம் மூளைச்சலவை செய்துகொண்டே இருக்கிறது.

எர்த்லிங் கவுசல்யா
எர்த்லிங் கவுசல்யா தி இந்து

இதைத் திரும்பத்திரும்ப மீடியாவும், திரைப்படங்களும் உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. பெண்ணின் உடலை, நிர்வாணத்தை அவள் அறியாமல் ஒருவன் படம்பிடித்துவிட்டால், அதை வைத்து பிளாக்மெயில் செய்தால், “அய்யய்யோ, குடும்ப மானமே போச்சு, அவனைக் கொன்றாலும் தப்பில்லை” என்று சொல்லும் பாபநாசமும், தீவிபத்தில் பலர் முன்னிலையில் நிர்வாணமாகக் காப்பாற்றப்படும் பெண் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று கூறும் எந்திரனும் நம் பெண் குழந்தைகளிடம் திணித்துக் கொண்டிருப்பது மிகக்கொடிய விஷம் !

இதற்கு மாற்றாக, தன் உடலை தனக்குத் தெரியாமல் கேவலமான புத்தியுள்ள ஆண் வீடியோ எடுத்து தன்னிடம் பேரம்பேசினால் அதை எப்படிக் கையாள வேண்டும் என்று மிகச்சரியாக சொல்லியிருக்கிறது ‘என் உடம்பு...’ குறும்படம். பெண் உடலோ, நிர்வாணமோ அவளின் ஆளுமை அல்ல என்று பொட்டில் அடித்துச் சொல்லியிருக்கிறது. எவனோ வக்கிரம் பிடித்தவன் செய்யும் செயலுக்கு பெண் பொறுப்பாக முடியாது என்பதையும், அதைத் துணிவுடன் எதிர்கொள்வதுதான் அவள் ஆளுமை என்றும் மிகத்தெளிவாகக் கூறியிருக்கிறார் எர்த்லிங்க் கவுசல்யா. மிக அருமை தோழி ! இதைத்தான், நமது பெண் குழந்தைகளுக்கு இப்போது நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

பெண் தன் உடலை நேசிக்க வேண்டும் என்பதைக் கவிஞர் மனுசியின் உயிர்ப்பான, வீரியமான கவிதை வரிகளில் சித்தரித்துள்ளது அழகு. செம்மலர் அன்னம், தனது அற்புதமான நடிப்பால் படத்தைத் தூக்கி நிறுத்துகிறார். பதற்றத்தையும், அழுகையையும், துணிவையும் தன் உடல்மொழியில் வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு. ஆரம்பக் காட்சியில், பிளீவ் இன் யுவர்செல்ப் (Believe in yourself) என்று அவர் செல்போன் கவரில் பளிச்சிடும் வாசகமே, அவரது கதாபத்திரத்தைக் கோடிட்டுக் காட்டிவிடுகிறது.

ஒரு வீடியோ எங்கெல்லாம் போகும், அதை, தான் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற பெண்ணின் எண்ணவோட்டத்தை, ட்ரோன் காட்சியில் விரியும் பரந்த உலகம், மொட்டை மாடியில் படுத்திருக்கும் செம்மலரிடம் முடிவது அருமை. படத்தின் முடிவில், தன்னுடலை நேசிக்கும் நிஜப் பெண்களின் புகைப்படத் தொகுப்பு நிறைவளிக்கிறது. இது படத்தைப் பார்க்கும் பெண்களுக்கு, அவர்கள் நம்முடன் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை அளிக்கும்.

செம்மலர்
செம்மலர்

பெண்ணை அவள் அறியாமல் வீடியோ எடுக்கும் கடையைப் பற்றி புகார் அளிப்பதாக ஒரு சிறுகாட்சியை, படத்தில் சேர்த்திருக்கலாம். பெண் செல்லும் பொது இடங்களை யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வீடியோ எடுக்கலாம் என்பது யதார்த்தமாக இருந்தாலும், அது நமக்கு தெரியவரும்போது புகார் அளித்து, வெளிக்கொண்டுவர வேண்டும் என்பது என் கருத்து.

மொத்தத்தில், பெண்ணை, அவள் உடலை, ஆளுமையை எப்படிப் பார்க்க வேண்டும் என்ற பாடமே ‘என் உடம்பு...’ என்ற இந்தக் குறும்படம். இதை நிச்சயம் எல்லோரும் பார்க்க வேண்டும், ஆண்கள், ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகள், பெண்கள் எல்லோரும்!

குறும்படத்தைக் காண:

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in