பாலூட்டும்வரை அடுத்த கருத்தரிப்பு நிகழாது!?: அவ(ள்) நம்பிக்கைகள்-35

பாலூட்டும்வரை அடுத்த கருத்தரிப்பு நிகழாது!?: அவ(ள்) நம்பிக்கைகள்-35

நம்பிக்கை:

"பாலூட்டும் தாய்க்குப் பாலூட்டும்வரை அடுத்துக் கருத்தரித்தல் என்பது நிகழாது."

உண்மை:

தற்காலிக மாதவிடாய் நிறுத்தம் (Lactational Amenorrhea), பாலூட்டும்போது சிலரில் இயல்பாகவே காணப்படும் நிகழ்வுதான். இருந்தாலும், அதுவே முழுமையான கருத்தடையாக விளங்குவதில்லை என்பதே உண்மை.

கொஞ்சம் மருத்துவ ரீதியாக இதைச் சொல்வோமேயானால், உண்மையில் பாலூட்டும்போது, மூளையில் ப்ரோலாக்டின் மற்றும் ஆக்சிடோசின் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும். அதேவேளையில் கருமுட்டை வளர்ச்சிக்கான பிட்யூட்டரி ஹார்மோன்களான FSH & LH எனப்படும் கொனேடோ-ட்ராப்பின்கள் பெரும்பாலும் குறைந்துவிடும். இதன் காரணமாக சினைப்பையின் ஈஸ்ட்ரோஜன்கள் மற்றும் ப்ரொஜெஸ்டிரோன்கள் அளவும் குறையும். இதன் விளைவாக சினைப்பையிலிருந்து கருமுட்டைகள் வெளியேறுவது தடைபடும். இதனால் கருத்தரிப்பு நிகழ்வு தற்காலிகமாகத் தள்ளிப் போய்விடும். என்றாலும், மீண்டும் இயல்பு நிலைக்கு இந்த ஹார்மோன்கள் எத்தனை நாட்களில் திரும்பும் என்பதை யாராலும் வரையறுக்க இயலாது.

இதன் காரணமாகவே, பாலூட்டும் காலத்திலும் கூட தாய் கருவுற வாய்ப்பிருக்கிறது. இந்நிலையில், தாயின் உடல்நிலைக்குத் தகுந்தவாறு, மற்றுமோர் கருத்தடை சாதனத்தை மருத்துவர்கள் நாங்கள் கட்டாயமாகப் பரிந்துரைக்கிறோம்.

ஆனால், பாலூட்டும் காலத்தில் தாய் கருவுற மாட்டாள் என்ற நம்பிக்கையுடன் உடலுறவு கொள்ளும் பெண்ணுக்கு, அது பொய்த்துப் போகக்கூடும். இதனால் பாலூட்டும்போதே 2-வது முறையாகக் கருத்தரிப்பும் நிகழ, மீண்டும் அவ(ள்) நம்பிக்கைகள் நமது தொடர் ஆரம்பித்த, "பப்பாளி சாப்ட்டா கரு கலைஞ்சிரும் தானே டாக்டர்..?" என்ற நமது தொடரின் முதல் கேள்விக்கு மறுபடியும் போய் நிற்கிறது.

அதையும் தாண்டி கர்ப்பத்தை அந்தப் பெண் தொடரும்போது, மசக்கை, உணவு முறைகள், பிறக்கப் போவது ஆணா, பெண்ணா, பிரசவ வலி என்ற கேள்விகள் மீண்டும் எழுகின்றன. வாழ்க்கை ஒரு வட்டம் என்பதைப் போலவே!

உண்மையில் தாய்மை என்பது வெறும் குழந்தைப்பேறு மட்டுமல்ல. ஒவ்வொரு பெண்ணும் இன்னொரு உயிரைப் பெற்றெடுக்கும் உன்னத நிகழ்வாகும். இந்த முக்கிய நிகழ்வில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிகழ்வும், ஒவ்வொரு உணர்வும் ஒவ்வொரு பாடம் என்பதே உண்மை. இந்த சமயத்தில் எழும் சந்தேகங்கள் மற்றும் நம்பிக்கைகளின் பின்னே இருக்கும் மூடநம்பிக்கைகளைக் களைந்து, அவற்றின் பின்னே இருக்கும் அறிவியலை உணர வைப்பதுதான் ஒரு மாதத்துக்கும் மேலாக உங்களோடு பயணித்த இந்த அவ(ள்) நம்பிக்கைகள் தொடரின் நோக்கம்.

இதுவரை கூறப்பட்டவை அனைத்தும், அவநம்பிக்கைகள் என்றிருக்க, இனிவரும் நாட்களில், அவளுக்குக் கர்ப்பகாலத்தில் நம்பிக்கை அளிக்கும் தொடராக, 'அவள் நம்பிக்கைகளாக' வாரம் ஒருமுறை சந்திப்போம்!

(அவநம்பிக்கைகள் முற்றுப்பெற்றது)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
பாலூட்டும்வரை அடுத்த கருத்தரிப்பு நிகழாது!?: அவ(ள்) நம்பிக்கைகள்-35
ஆட்டோவில் பயணம் செய்தால் சுகப்பிரசவம் நிச்சயம்!?: அவ(ள்) நம்பிக்கைகள்-34

Related Stories

No stories found.