'ஒரு குழந்தை இறந்தாலும் மனசு ஒடிஞ்சுடும்!'

மனம் திறக்கும் சேவை மருத்துவர் சத்யா
பணி ஓய்வுபெறும் சத்யா...
பணி ஓய்வுபெறும் சத்யா...

ஒரே நாளில் சுமார் 7 ஆயிரம் அரசுப் பணியாளர்கள் தமிழகத்தில் ஓய்வு பெற்றுள்ளனர். அதில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர் சத்யாவும் ஒருவர். தலைச்சிறந்த போராளிகளின் வளர்ப்பில் வார்த்தெடுக்கப்பட்டவர் சத்யா. பணி ஓய்வு பெற்றதையடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் சக மருத்துவர்கள் அவருக்கு விழா எடுத்து கௌரவித்தார்கள்.

இந்திய விடுதலைப் போராட்டங்களிலும், வினோபாபாவின் பூமிதான இயக்கத்திலும் பங்குகொண்ட தலைச்சிறந்த சமூக சேவகர்களான ஜெகந்நாதன்-கிருஷ்ணம்மாள் தம்பதியின் மகள் சத்யா. இவரின் சகோதரர் பூமிகுமார் குழந்தைகள் மனநல மருத்துவர். புதுவாழ்க்கைக்குத் தடையாக இல்லற வாழ்க்கை இருந்துவிடக் கூடாது என்பதற்காக இவரும் சத்யாவைப் போலத் திருமணம் செய்து கொள்ளவில்லை. கம்போடியாவில் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவச் சேவை செய்து வருகிறார் பூமிகுமார். அம்மா கிருஷ்ணம்மாளுடன் தற்போது செங்கல்பட்டில் வசிக்கிறார் சத்யா.

சத்யா
சத்யா

மதுரை மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவப் படிப்பை முடித்த சத்யா, சென்னை மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் மருத்துவப்பிரிவில் எம்.டி பட்டம் பெற்றார். கூடுதலாக, இத்தாலியில் பச்சிளம் குழந்தைகளுக்கான பயிற்சி, அமெரிக்காவில் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் தாய்சேய் நலப்பிரிவில் பொது சுகாதாரம் ஆகிய பயிற்சிகளையும் முடித்துள்ளார்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்த சத்யா, பச்சிளம் குழந்தைகளின் மொழி அறிந்து சிகிச்சை அளிப்பவர். திருநெல்வேலி, திருச்சி என பணிமாறுதல் பெற்று மீண்டும் செங்கல்பட்டிலேயே பணியைத் தொடர்ந்தவருக்கு இப்போது ஓய்வு. 2013-ல் தமிழகத்தில் தலைச்சிறந்த மருத்துவருக்கான விருது, எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றவர் சத்யா.

சத்யாவின் சேவை குறித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வட்டாரத்தில் பேசினோம். “குழந்தைக்கு உடம்பு சரியில்லைன்னு போன் வந்துட்டா நேரம் காலம் பார்க்காம ஹாஸ்பிட்டல் வந்துருவாங்க. சத்யாவின் முயற்சியால்தான் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பச்சிளம் குழந்தைகளுக்கான வார்டு கிடைத்தது. தெருநாய்க்கு உடம்பு சரியில்லைன்னாலும் அவங்க மனசு இளகிடும். பல நேரங்களில் உள்நோயாளியாக உள்ள ஏழைகளுக்குத் தன்னோட வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வந்து கொடுத்திருக்காங்க. தீபாவளி, பொங்கல்னு நாள் கிழமை பார்க்காம ஹாஸ்பிட்டலுக்கு வந்திடுவாங்க.

அம்மாவுடன்...
அம்மாவுடன்...

தனக்குன்னு சொத்து ஏதும் சேர்த்து வெச்சிக்காத சத்யா, படிப்புக்குப் பணம் தடையா இருக்கக்கூடாதுன்னு நினைப்பாங்க. அதனால் தான் சுற்றுவட்டாரத்துல பல ஏழைக் குழந்தைகள தன்னோட செலவுல படிக்கவைக்கிறாங்க. கழுத்து, காதுலகூட எந்த நகையும் போட்டுக்கமாட்டாங்க. அத்தனை எளிமையா ஏழைகளுக்கு சேவை செஞ்சுட்டு இருந்த அவங்க இனிமே இந்த ஹாஸ்பிட்டல் பக்கம் வரமாட்டாங்கங்கிறத நினைச்சா மனசுக்கு கஷ்டமா இருக்கு” என்கிறார்கள் மருத்துவமனையோடு தொடர்பில் இருப்பவர்கள்.

டாக்டர் சத்யாவிடம் பேசினோம். “சின்ன வயசுல இருந்தே அண்ணனும் நானும் அப்பா, அம்மாவை பிரிந்துதான் தனியாகவே தான் வளர்ந்தோம். அப்பாவைச் சந்திக்க நேரும் போதெல்லாம் ‘எப்பப்பா என்னோட இருப்பீங்க?’ன்னு கேட்பேன். ‘ஏழைங்களோட கஷ்டம் எப்ப தீருமோ அப்ப உன்கூட இருப்பேன்’ என்று சொல்லுவார். இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள ஏழைங்க பிரச்சினையெல்லாம் தீரணும், அப்பா என்கூட இருக்கணும்னு சாமிக்கிட்ட வேண்டிக்குவேன். ஆனாலும், அன்றைக்கு அப்பா என்கூட இருக்கமாட்டார். இன்னும் ஏழைங்க பிரச்சினை தீரவில்லை. அதனாலதான் அப்பா என்கூட இல்லைன்னு நெனச்சுக்குவேன். இதே போலத் தினமும் சாமிக்கிட்ட வேண்டிக்குவேன். ‘நம்ம நாலு பேர் மட்டும் குடும்பம் கிடையாது. இந்த உலகமே நம்ம குடும்பம்தான்’ என்று அப்பா அடிக்கடி சொல்வார். சின்னவயசுல அதெல்லாம் எனக்குப் புரியாது. என்னோட அனுபவத்தில்தான் அத்தனையையும் உணர்ந்தேன்.

செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் முதன்முதலாக பச்சிளம் குழந்தை மருத்துவராக பணியில் சேர்ந்த போது குழந்தைகளைப் பாதுகாக்கச் சரியான உபகரணங்கள் இல்லை. எவ்வித அடிப்படை வசதியும் இல்லாததால் எனக்கு அங்க வேலை செய்ய விருப்பமில்லை. ஆனால், இப்படியான இடங்களில்தான் நமது சேவை இருக்கணும்னு அப்பா சொன்னதால் செங்கல்பட்டிலேயே பணியைத் தொடர்ந்தேன்.

அன்றைய சூழலில் குழந்தைகள் பிறப்பு ,இறப்பு விகிதம் ஆயிரத்துக்கு 40 என இருந்தது. பச்சிளம் குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் போதிய இங்குபேட்டர்கள் இல்லை. அரசாங்கத்திடம் நிதியுதவி பெறமுடியாததால், படாக் மர பலகைகளால் செய்யப்பட்ட பெட்டியில் பல்பு வைத்து இன்ஃபேன்ட் வார்மர் என்ற உபகரணத்தைச் செய்தேன். அதே பெட்டியில் டியூப் லைட் பயன்படுத்தி, மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு போட்டோதெரபி சிகிச்சையும் அளித்தோம். இப்படி 40 வார்மர்களை கொண்டு அப்போது குழந்தைகளைக் காப்பாற்றினோம்.

திடீர்னு ஒரு நாள் நள்ளிரவில் எனக்கு ஒரு போன் வந்தது. ‘பில் கிளிண்டனின் குளோபல் ஹெல்த் ஃபவுன்டேஷனில் இருந்து பேசுகிறோம். ‘பில்கிளிண்டன் இன்வைட்ஸ் யு’ எனப் பேசினார்கள். நான் செங்கல்பட்டில் இருக்கிறேன். என்னை எப்படி பில் கிளிண்டனுக்குத் தெரியும்? யாரோ கேலி செய்யறாங்கன்னு விட்டுவிட்டேன். எனது மெயிலிலும் ஏர் டிக்கெட் அனுப்புவதாக அறிவித்திருந்தார்கள். ரூரல் ஏரியாவில் பணிசெய்பவர்களைக் கண்டுபிடித்து விசாரித்த பிறகே உங்களை அழைத்திருக்கிறோம் என மெயிலில் குறிப்பிட்டிருந்தார்கள். நான் அமெரிக்கா சென்ற போது பராக் ஒபாமா அதிபராக இருந்தார். ஒபாமாவையும், அவர் குடும்பத்தினரையும் சந்தித்தேன். அழைப்பு விடுத்த பில் கிளிண்டனையும் சந்தித்தேன். மேலும் அங்கு நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றிலும் கலந்து கொண்டேன்.

தினமும் இரவு 11 மணிக்கு பச்சிளம் குழந்தைகள் வார்டில் ரவுண்ட்ஸ் வந்தால்தான் எனக்குத் தூக்கம் வரும். அப்படி வீட்டிற்கு வந்தாலும் அடிக்கடி பாப்பாவுக்கு உடம்பு சரியில்லை என நள்ளிரவில் போன் வரும். இந்த நேரத்துல தனியா போக வேணாம்னு அம்மா சொல்வாங்க. அவங்க தூங்கினதும் அவங்களுக்கு தெரியாம ஹாஸ்பிட்டல் கிளம்பிடுவேன். தாயும், சேயும் நலமா இருந்தால்தான் எனக்குத் தூக்கமே வரும். ஒரு குழந்தை இறந்தாலும் அன்றைக்கு மனுசு ஒடிஞ்சுடும். சாப்பிடவே பிடிக்காது. அப்பா சொல்லிக் கொடுத்த சிவயோக தியானம்தான் இன்றுவரை மனதை ஒருமுகப்படுத்துது. காதிற்கு நல்ல அணிகலன் என்பது நல்லவற்றைக் கேட்பது. நல்ல அணிகலன் இருக்க ஆபரணம் தேவையில்லைன்னு ஆபரணங்கள் அணிவதைத் தவிர்த்துட்டேன்.

அப்பாவுடன்...
அப்பாவுடன்...

கரோனா காலத்தில் பணியாற்றியதில் பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்பும், அதிக அளவில் மக்கள் தொடர்பும் கிடைச்சுது. அதன் மூலமா இந்த மருத்துவமனைக்குத் தொடர்ந்து சேவை செய்ய விரும்புறேன். அம்மாவுக்கு 96 வயதாகிட்டதால அவங்க எந்த வேலையும் செய்ய முடியாம சிரமப்படுறாங்க. கொஞ்ச நாளைக்கு அவங்க பக்கத்துல இருந்து கவனிச்சுக்கணும்னு நினைக்கிறேன். அதுக்கப்புறம் பழையபடி பொது மருத்துவ சேவைக்கு திரும்பவேண்டியது தான்” என்று சொன்னார் சத்யா

வயது, ஓய்வு காலத்தை நோக்கி நகர்த்திவிட்டாலும் இப்படியான சேவை மனிதர்களை அரசு உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளும் என்று நம்புவோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in