பேரு வச்சீங்களே... சோறு வச்சீங்களா?

மகளிர் கோணத்தில் மத்திய பட்ஜெட் 2022-23 அலசல்
பேரு வச்சீங்களே... சோறு வச்சீங்களா?
’தி இந்து’ கோப்புப் படம்

பெண்கள், விவசாயிகள், பட்டியலின மக்கள் ஆகியோரின் நலனுக்கான நிதி நிலை அறிக்கை என்று ஆட்சி அமைத்ததிலிருந்து ஆண்டுதோறும் உரைக்க பாஜகவின் நிதியமைச்சர்கள் தவறியதே இல்லை. 2022-23 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரை நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜனவரி 31-ல் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது, அவரும் நாட்டின் வளர்ச்சிக்கு மகளிரின் பங்கு அத்தியாவசியம் என குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி பெண்களின் வளர்ச்சியே அரசாங்கத்துக்குப் பிரதானம் என்றும் வலியுறுத்தினார்.

இம்முறை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்யத் தொடங்கியதுமே, மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட் என்று திட்டவட்டமாக அறிவித்தார். வருமான வரி பற்றி குறிப்பிடும்போது, பெண் பாலினத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான, ‘she’ என்பதை உச்சரித்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களுக்கு முக்கியப் பங்கிருப்பதாகப் பெருமைப்படுத்திப் பேசினார். ஆனாலும் மகளிர் நலத்திட்டங்களுக்கு 2020-ல் ஒதுக்கப்பட்டதைவிடவும் 2021-ல் 26 சதவீதம் குறைவான நிதியொதுக்கீடு செய்த அரசென்பதால், இந்தாண்டுக்கான பட்ஜெட் நமக்குப் பதற்றத்தையும் கூடுதல் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

எகிறும் வீட்டுவேலை

பல்வேறு தரப்பினரை கரோனா பெருந்தொற்று காலகட்டம் பாதித்திருந்தாலும் பெண்களின் வாழ்க்கையில் சுனாமியாகச் சுழற்றி அடித்தது. இந்தியச் சமூகத்தில் ஏற்கெனவே வேரூன்றியிருக்கும் பாலினப் பாகுபாட்டை, கரோனா காலகட்டம் கூடுதலாக அதிகப்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் வாழ்வாதாரம் நிலைகொள்வதற்கும் இக்காலகட்டம் பெருந்தடையாக மாறியிருக்கிறது.

’இந்தியர்கள் வேலையின் நிலைமை 2021’ ஆய்வறிக்கையின்படி, 47 சதவீத பெண்கள் கரோனா காலத்தில் வேலையிழந்துள்ளனர். ஆண்களில் 7 சதவீதத்தினர் மட்டுமே வேலையிழந்தனர். அதிலும் 2021-ம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மட்டும், அமைப்புசாரா கிராமப்புறப் பெண் தொழிலாளர்களில் 80 சதவீதத்தினர் வேலையிழந்திருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

நிதர்சனம் இப்படி இருக்க, பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடங்கிவைத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசும்போது, ”கிராமப்புறப் பொருளாதார மேம்பாட்டில் பெண்களின் பங்களிப்பு உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 65,000 கோடி ரூபாய் வங்கிகளால் வழங்கப்பட்டது” என்றார். முத்ரா கடன் போன்ற திட்டங்களின் மூலமாக இதுவரை 15 கோடிக்கும் அதிகமான பெண்கள் பலனடைந்திருப்பதாகவும் தெரிவித்தார். 4 கோடி பெண் தொழில்முனைவோர் உருவாகியிருப்பதாகப் பெருமையுடன் குறிப்பிட்டார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துக்கு இம்முறை 25,172.28 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார். இது கடந்த நிதியாண்டைவிடவும் 3 சதவீதம் மட்டுமே அதிகம். 2021-ம் ஆண்டில் குறைக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு எந்தவிதத்திலும் ஈடுசெய்யப்படவில்லை.

’தி இந்து’ கோப்புப் படம்

வீட்டுவேலைக்கான ஊதியம் எப்போது?

சொல்லப்போனால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மகளிருக்கான பட்ஜெட் கடந்த ஆண்டு 0.71 சதவீதமாக ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் 2022-23 நிதியாண்டில் 0.66 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அதிலும், சிறுசேமிப்பை ஊக்கப்படுத்துவதற்குச் சிறுசேமிப்பில் கூடுதல் வரிச்சலுகைகளுக்கான எந்த அறிவிப்பும் வரவில்லை. குறிப்பாகப் பெண் தொழில்முனைவோருக்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இதுதவிர, தங்களது வீடுகளில் மகளிர் செய்துகொண்டிருக்கும் ஊதியமில்லா பணி கரோனா காலத்துக்குப் பல மடங்காக அதிகரித்துள்ளது. சமைத்தல், நீர் இறைத்தல், விறகு சேகரித்தல், வீடு சார்ந்த துப்புரவு பணிகளைச் செய்தல், குழந்தை பராமரிப்பு போன்றவை இந்தியாவின் நடுத்தர, கீழ் நடுத்தர மற்றும் அடித்தட்டுப் பெண்களின் கடமையாகப் பார்க்கப்பட்டுவருகிறது. நாள்தோறும் 6 மணிநேரம்வரை இத்தகைய குடும்பப் பொறுப்புகளை இந்தியப் பெண்கள் சுமக்கிறார்கள். அதிலும் கரோனா காலத்தில் அநேக பெண்கள் வேலையிழந்த பிறகு, கூடுதலாக வீட்டு வேலைகள் அவர்களை அழுத்திக்கொண்டிருக்கின்றன. மீண்டும், வீட்டைவிட்டு வெளியே பணிக்குச் செல்ல முடியாதபடி முட்டுக்கட்டையாகவும் குடும்பப் பொறுப்புகள் பெண்களைப் பின்னுக்கு இழுக்கின்றன.

ஒருவேளை பெண்கள் தங்களது வீடுகளில் செய்யும் பணிகளுக்குக் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டால், உலகின் ஜிடிபியில் 9 சதவீதமாக அது மாறும் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு கணித்துள்ளது. இந்நிலையில், பெண்ணின் திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்த தீர்மானித்திருக்கும் பாஜக அரசு, திருமணமான பெண்களின்மீது திணிக்கப்படும் குடும்ப பாரத்துக்குக் குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது குறித்து இதுவரை வாய்திறக்கவில்லை. அதேபோன்று குறைந்தபட்ச ஊதியம் உறுதிசெய்யப்பட வேண்டிப் போராடிவரும், முன்களப்பணியாளர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு இந்த பட்ஜெட்டிலும் செவி சாய்க்கப்படவில்லை.

குழந்தைகளை எப்படிக் காப்பீர்கள்?

நிர்மலா சீதாராமன் பெருமிதத்துடன் அறிவித்த பெண்கள் மேம்பாட்டுக்கான மூன்று திட்டங்களில் ஒன்றான, சக்தி இயக்கத்துக்கு 3,184 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மகளிர் பாதுகாப்பு மற்றும் அதிகாரப்படுத்துதல் என்பதாக இந்த திட்டத்துக்கு 2021-22 நிதி ஆண்டில் 3,109 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களுக்கான வாத்சல்யா இயக்கத்துக்கு 1,472 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிடவும் இத்திட்டத்துக்கு 900 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இருந்தபோதும் ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ என்ற பிரச்சாரத்தை முன்னிறுத்திவரும் பாஜக இவற்றுக்கான ஒதுக்கீட்டையும் 587 கோடி ரூபாயிலிருந்து 562 கோடி ரூபாயாகக் குறைத்துவிட்டது. தேசிய மகளிர் ஆணையம், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீட்டை, 188 கோடி ரூபாயிலிருந்து இந்த ஆண்டு 152 கோடி ரூபாயாகக் குறைத்திருப்பது விமர்சனத்துக்குரியது.

100 நாள் வேலைத் திட்டத்தில் ஈடுபடும் மகளிர்
100 நாள் வேலைத் திட்டத்தில் ஈடுபடும் மகளிர்

சத்தில்லாத ஊட்டச்சத்து 2.0!

100 நாள் வேலைத் திட்டம், தேசிய சமூக உதவித் திட்டம், பட்டியலின / பழங்குடி சிறுபான்மையினர் மற்றும் நலிவடைந்தோருக்கான நலத்திட்டங்கள் ஆகியவற்றால் பெரிதும் பலனடைபவர்கள் பெண்களே. அப்படியிருக்க, கடந்த ஆண்டைவிடவும் குறைவாக பட்ஜெட் இதற்கும் ஒதுக்கப்பட்டிருப்பது பெருத்த அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது.

ஆறுதல் அளிக்கும்விதமாக நாடு முழுவதும் 3.8 கோடி குடும்பங்களுக்குச் சுத்தமான குடிநீர் வழங்க 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மகளிர் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டுக்காக நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் நிமித்தமாக சாக்‌ஷம் அங்கன்வாடி மற்றும் ஊட்டச்சத்து 2.0 இயக்கத்துக்கு 20,263 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டைவிடவும் 158 கோடி ரூபாய் மட்டுமே கூடுதல் என்பது கவனத்துக்குரியது.

இவ்வளவு குறைவான தொகையைக் கொண்டு நிதியமைச்சர் உறுதியளித்தபடி, “புதிய தலைமுறை அங்கன்வாடிகள் உருவாக்கப்படும். சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளும் ஒலி-ஒளி வசதிகளும் செய்து தரப்படும். சூழலியல் நண்பனான தூய்மையான ஆற்றல் பயன்படுத்தப்பட்டு குழந்தைகளின் தொடக்கக் கால வளர்ச்சிக்கான சூழல் உருவாக்கப்படும்” போன்ற வசதிகளை எப்படி உருவாக்க முடியும்? அதிலும் ஊட்டச்சத்து 2.0 என்று பெயரிட்டுவிட்டு அதற்கென பிரத்யேக நிதி ஒதுக்கீடு எதுவும் அறிவிக்கப்படவில்லை. மொத்தத்தில், ‘பேரு வச்சீங்களே சோறு வச்சீங்களா?’ என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in