கன்னத்தில் குழி அதிர்ஷ்டம்!? : அவ(ள்) நம்பிக்கைகள்-28

கன்னத்தில் குழி அதிர்ஷ்டம்!? : அவ(ள்) நம்பிக்கைகள்-28

நம்பிக்கை:

”மச்சங்கள், கன்னத்தில் குழி, 6-ம் விரல் போன்றவை அதிர்ஷ்டம் மிக்கவை!”

உண்மை:

வாழ்க்கையை நாளும் சுவாரசியமாக்கும் சில நம்பிக்கைகளில் ஒன்று நம் உடலில் காணப்படும் கன்னத்தில் குழி, நெற்றியில் சுழி, 6-ம் விரல் ஆகியவை.

பெரும்பாலும் இவை எல்லாமே அதிர்ஷ்டத்தின் அம்சமாகக் கருதப்பட்டாலும், இவற்றுள் முக்கியமாகக் கன்னத்தில் குழியைத்தான் சிலாகித்துக் கூறுவார்கள்.

"பாரு! ரெண்டு கன்னத்திலயும் அத்தனை பெரிய குழி விழுது... பிறக்கும்போதே அப்பனுக்கு அத்தனை அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்திருக்கா குழந்தை" என்று கன்னக்குழி குழந்தைகளைக் கொஞ்சாத இல்லமே இருக்காது.

நமது முகத்தில் இருக்கும் தசைகளில் முக்கியமான தசை Zygomaticus major எனும் சிரிப்புத் தசை ஆகும். உண்மையில், இத்தசையில் சேர்ந்து இருக்க வேண்டிய 2 பகுதிகள் சேராமல் விரிந்து காணப்படும் பிறழ்வு நிலைதான் ‘டிம்பிள்’ எனும் கன்னக்குழிக்குக் காரணமாக அமைகிறது.

கன்னத்தின் ஒருபக்கமோ அல்லது இருபக்கங்களிலுமோ காணப்படும் இந்த கன்னக்குழிகள் சிலருக்கு பிறவியிலிருந்தும் சிலருக்கு வளரும்போது இடையிலும் வரலாம். அதேபோல, மரபணுக்கள் வாயிலாகச் சிலருக்கு குடும்பத்தில் பலரிடம் காணப்படலாம்.

உண்மையில் அதிர்ஷ்டத்தை இவை தருகின்றனவா என்பது தெரியாது என்றாலும், நிச்சயமாக அழகைத் தருவதுடன், "கன்னக்குழி அழகி" என்று பாடவும் வைக்கின்றன இந்த அதிர்ஷ்டக் குழிகள்.

அடுத்து, 6-ம் விரல்.

உலகெங்கும் பெரும் அதிர்ஷ்டத்தின் குறியீடு என நம்பப்படும் இந்த 6-ம் விரல் என்ற Hexadactyly உண்மையில் ஒரு பிறவிக் குறைபாடு ஆகும். பெரும்பாலும் வெறும் ஒரு அதிகப்படி விரல் மட்டும்தான் என்று கருதப்பட்டாலும், சில சமயங்களில் இதய மற்றும் சிறுநீரக பிறவி நோய்களுடன் சேர்ந்தே காணப்படலாம் என்பதால், 6-ம் விரலை ஒரு எச்சரிக்கை மணியாகவே மருத்துவர்கள் கவனிக்கின்றனர்.

பொதுவாக இது அதிர்ஷ்ட விரலாக இருந்தாலும், அன்றாடப் பணிகளுக்கு இடையூறாக இருக்கும்பட்சத்தில், சிறு அறுவை சிகிச்சை மூலம் இது அகற்றப்படுவதும் உண்டு.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
கன்னத்தில் குழி அதிர்ஷ்டம்!? : அவ(ள்) நம்பிக்கைகள்-28
அழுத்தித் தேய்த்தால் வீக்கம் போய்விடும்!: அவ(ள்) நம்பிக்கைகள்-27

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in