யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் குற்றமா!? : அவ(ள்) நம்பிக்கைகள்-17

யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் குற்றமா!? : அவ(ள்) நம்பிக்கைகள்-17

நம்பிக்கை :

"அந்தக் காலத்துல பத்துப் பிரசவம்னாலும் வீட்டிலயே பாத்துடுவாங்க. இப்பெல்லாம் தொட்டதுக்கும், தொண்ணூறுக்கும் ஹாஸ்பிடல்தான்..!"

உண்மை :

தாய்மையையும், பிரசவத்தையும், மக்கள் பல்வேறு விதமாக அணுகுவதை ஒவ்வொரு நாளும் காணமுடிகிறது. ஒருபக்கம்,"குறிப்பிட்ட நேரத்தில்தான் குழந்தை வேண்டும்" என்று சிசேரியன் அறுவை சிகிச்சையைக் கேட்டுச் செய்யும் on demand பிரசவங்கள். இன்னொரு பக்கம், "ஹாஸ்பிடலே வேண்டாம். நாங்களே பார்த்துக் கொள்கிறோம்" எனும் இயற்கைப் பிரசவ முறைகளும், இயற்கைப் பிரசவ இயலாளர்களும்.

இதில் பெரிதும் அச்சமூட்டுபவை இந்த இயற்கை முறைப் பிரசவங்கள்தான். தொழில்நுட்பம் ஒரு வரமாகப் பார்க்கப்படும் இன்றைய நவீன காலகட்டத்தில், சில சமயங்களில் அந்தத் தொழில்நுட்பமே, அறிவியலுக்கும், மருத்துவத்துக்கும் எதிராக இயங்குவதையும் பார்க்க நேரிடுகிறது.

ஆம்! யூட்யூப் வீடியோக்களைப் பார்த்து, வீட்டிலேயே பிரசவம் செய்து கொள்கிறேன் என்று, உயிர்களைப் பறித்துக் கொள்வதும், கொல்வதும் சமீப கால வேதனையாகவே மாறியுள்ளது. உண்மையில், அந்தக் காலத்தில், இயற்கையாகப் பிரசவம் பார்த்தோம் என்று சொல்பவர்கள், பிரசவத்தின்போது எத்தனை தாயும் சேயும் இறந்தனர் என்று உங்களுக்குச் சொன்னதில்லை. அதற்கான புள்ளிவிவரங்களும் இல்லை.

உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, மன அழுத்தம் என பல காரணங்களால் இன்று இயற்கை முறையில் குழந்தை பெறுவது என்பது சிரமமான ஒன்றாக இருந்தாலும் இயற்கை பிரசவம் என்பது, மருத்துவமனையில் மட்டுமே சாத்தியம் என்பதுதான் உண்மை.

மேலும், வீட்டில் குழந்தை பெற்றுக்கொள்வது குற்றம் இல்லை என்றாலும் அரசின் பதிவுபெறாத நபர்கள், அவர்கள் குடும்ப நபர்களாகவே இருந்தாலும் பிரசவம் பார்ப்பது குற்றம். உண்மைக்கு மாறான தகவல்களை மருத்துவம் என்று கூறிப் பிரச்சாரம் செய்வதும், சமூக ஊடகங்களைப் பார்த்துப் பாதுகாப்பற்ற சிகிச்சை அளிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

வீட்டில் பிரசவம் நடந்தால், உடனடி மருத்துவ உதவிகள் கிடைக்காது. அது மட்டுமல்லாமல் ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் அதை சரிசெய்ய முடியாது என்பதால், பிரசவத்துக்கு மருத்துவமனை மட்டுமே ஏற்புடையதாகும். இன்றைய சூழ்நிலையில், மகப்பேறு மற்றும் பிறந்த குழந்தையின் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதில் மருத்துவமனைப் பிரசவங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. அதிலும் இந்தியாவிலேயே பிரசவத்தில் இறக்கும் தாய்மார்கள், தமிழகத்திலும், கேரளாவிலும்தான் குறைவு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மற்ற சிகிச்சைகள் போலன்றி, பிரசவத்தில் தாய் சேய் என இரு உயிர்கள் சம்பந்தப்படும் நிலையில், உலகெங்கும் உள்ள மருத்துவர்கள் அனைவரின் கோரிக்கையும் ஒன்றுதான்.

"நீங்க யூட்யூப் பாத்து சமைங்க, வரைங்க, படிங்க, வேற என்ன வேணா செய்யுங்க. ஆனா மருத்துவம் பார்க்காதீங்க. அதிலும் முக்கியமா பிரசவம் மட்டும் பாக்காதீங்க..!"

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in