மாணவி ராகவி மரணம் நிறுவனப்படுத்தப்பட்ட சாதிய பாகுபாட்டின் விளைவா?

வேல்ஸ் பல்கலைக்கு எதிராக உண்மை அறியும் குழு எழுப்பும் கேள்விகள்
மாணவி ராகவி மரணம் நிறுவனப்படுத்தப்பட்ட சாதிய பாகுபாட்டின் விளைவா?

”நல்லா சந்தோசமாதான் தேவதை மாதிரி காலேஜுக்கு கிளம்பிப் போனாள்... அடுத்த ஒரு மணிநேரத்துல, ’என்னால் இங்க இருக்க முடியல; கிண்டல் பண்றாங்க. அப்பாவை கூபிட்டு உடனே வா’னு அழுதாம்மா...” - மகள் இறந்து மாதங்கள் இரண்டானாலும் இன்னமும் இப்படி மாய்ந்து மாய்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார் ராகவியின் அம்மா புவனேஸ்வரி. அவருக்குள் இருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லத்தான் ஆளில்லை.

சென்னை தாம்பரத்தில் வசிக்கும் சின்னா எனும் ரவிக்குமார் - புவனேஸ்வரியின் இரண்டாவது மகள் ராகவி. பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., பொருளாதாரம் இரண்டாம் ஆண்டு படிந்து வந்த இந்தப் பெண் கடந்த மார்ச் 24 அன்று வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். ராகவி மரணம் தொடர்பான உண்மைகளை விசாரித்த பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையிலான உண்மை அறியும் குழு அண்மையில் தனது அறிக்கையை வெளியிட்டது.

இதுகுறித்தான செய்தியாளர்கள் சந்திப்பில், உண்மை அறியும் குழுவில் முதன்மை பொறுப்பு வகித்த முனைவர் ப.சிவக்குமார், அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழகச் செயல்பாட்டாளர் து.கிருஷ்ணவேணி, ராகவியின் தந்தை சின்னா உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். இதன் நிறைவில், ராகவியின் குடும்பத்திற்கு கல்லூரி நிர்வாகம் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், இறுக்கமான ஆடைக் கட்டுப்பாட்டுக் கொள்கையை நிறுவனம் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் உண்மை அறியும் குழுவினரால் முன்வைக்கப்பட்டது.

உயிரிழந்த மாணவி ராகவி பட்டியலினத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை ரவிக்குமார் 'ஜெராக்ஸ்’ கடை நடத்திவருகிறார்; தாய் புவனேஸ்வரி தையல் கலைஞர். கீழ்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதும் வீட்டில் ஏசி முதற்கொண்டு ராகவிக்கு நல்ல கல்வி, வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறார் ரவிக்குமார்.

கல்லூரியில் படிக்கும் மகளுக்கு, தானே நவீன ஆடைகளைத் தானே தைத்துக் கொடுத்து அழகு பார்த்திருக்கிறார் புவனேஸ்வரி. டேக்வாண்டோ தற்காப்புக் கலையில் பிளாக் பெல்ட் வென்ற வீராங்கனையாகத் திகழ்ந்த ராகவி துணிச்சலான பெண்ணாகவே வலம் வந்தார். கல்லூரிக்கு ஜீன்ஸ் பேன்ட், லெக்கின்ஸ் உள்ளிட்ட நவீன ஆடைகளை உடுத்தும் வழக்கம் அவருக்கு இருந்துள்ளது. தலைமுடியில் வண்ணம் பூசும் வழக்கமும் இருந்துள்ளது.


இந்நிலையில், கல்லூரியில் ஆடை நெறிமுறைகளை ராகவி முறையாகப் பின்பற்றவில்லை என்று துறை ஆசிரியர்கள் சிலரால் கண்டிக்கப்பட்டிருக்கிறார். உடன்படிக்கும் சையத் மற்றும் உதயா ஆகிய இரண்டு மாணவர்கள் அவரை அடிக்கடி கேலியும் கிண்டலும் செய்துள்ளனர்.

இதனிடையே, வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பயிலும் மாணவர் உதயாவும் (வேறொரு உதயா) ராகவியும் காதலித்து வந்திருக்கிறார்கள். இது ராகவியின் குடும்பத்துக்குத் தெரிந்து அவர்கள் திருமணத்துக்குச் சம்மதம் அளித்துள்ளனர். ராகவிக்கும் உதயாவுக்கும் சேர்த்தே புவனேஸ்வரி மதிய உணவு கட்டித்தரும் அளவுக்கு இருந்திருக்கிறது அந்த நெருக்கம்.

இப்படியான சூழலில்தான் ஒருநாள், தான் கல்லூரியில் துன்புறுத்தப்படுவதாகச் சொல்லி அப்பாவையும், அம்மாவையும் உடனடியாக கல்லூரிக்கு வரும்படி அலைபேசியில் அழுதிருக்கிறார். பதறியடித்து கல்லூரிக்கு ஓடிவந்த ராகவியின் பெற்றோரிடம், “உங்கள் மகள் யாருடனும் பழகுவதில்லை. பேசுவதில்லை. வகுப்புக்கு வரும்போது உடுத்திவரும் ஆடை தொடர்பான பல்கலைக்கழக விதிகளையும் பின்பற்றுவதில்லை. இப்படி ட்ரெஸ் பண்ணி வந்தால் எல்லாரும் கிண்டல் பண்ணத்தான் செய்வாங்க... உங்கள் மகளுக்குக் குடிப்பழக்கம் உள்ளது. மாணவர்களின் கையைப் பிடித்துக் குலுக்குவது போன்ற பழக்கங்கள் உள்ளது. வாட்ஸ் - அப் ஸ்டேட்டஸ் படங்கள் சரியில்லை” உள்ளிட்ட பகீர் குற்றச்சாட்டுகளை துறை பேராசிரியர்கள் முன்வைத்துள்ளதனர். இதையெல்லாம் மறுத்து பேச இயலாமல், “டி.சி கொடுத்திடுங்க. நாங்க மகளை வேறு எங்காவது சேர்த்துவிடுகிறோம்” என்று கவலையுடன் சொல்லி இருக்கிறார் ரவிக்குமார்.

“அதெல்லாம் வேண்டாம். உங்க பெண் நல்லா படிக்கிற பெண்தான்” என்றும் ஆசிரியர்கள் அவரை சமாதானப்படுத்தியதால், மகளை வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டு ஜெராக்ஸ் கடைக்குப் போய்விட்டார் ரவிக்குமார். வீட்டுக்குப் போனதும் அம்மாவிடம் ராகவி புலம்பியதாகத் தெரிகிறது. அவரும் மகளுக்கு சமாதானம் சொல்லிவிட்டு வெளியில் போய்விட்டார். தனிமையில் இருந்த ராகவி காதலன் உதயாவிடமும் போனில் அழுதிருக்கிறார். அவர் சொன்ன ஆறுதலாலும் அமைதிகொள்ளாத ராகவி, மீண்டும் அவருக்கு போன் செய்து, “உனக்கு நான் ஒரு கடிதம் எழுதிவைத் திருக்கிறேன்” என்று மட்டும் சொல்லிவிட்டு அவரது நம்பரை ப்ளாக் செய்திருக்கிறார். பயந்துபோன உதயா ராகவியின் வீட்டுக்குச் சொல்வதற்குள் அந்தப் பெண் தூக்கில் தொங்கி தனது உயிரை மாய்த்துக் கொண்டுவிட்டார்.

கிருஷ்ணவேணி
கிருஷ்ணவேணி

இது குறித்து நம்மிடம் பேசிய உண்மை அறியும் குழுவின் து.கிருஷ்ணவேணி, “நம் சமூகத்தில் சாதிய வர்க்கக் கண்ணோட்டம் புரையோடிப்போயுள்ளது. பட்டியலினப் பெண்கள் நவநாகரிகமாக உடை அணிந்து சென்றாலே கேலி பேசுவார்கள். ராகவி பட்டியலின பெண்ணாக இருந்தபோதும் ‘ராயலாக’ ஆடை, காலணி, கைக்கடிகாரம் அணிந்து கல்லூரிக்கு வந்திருக்கிறார். டேக்வாண்டோ தற்காப்புக் கலையிலும் சிறந்து விளங்கவே தன்னம்பிக்கையோடு தென்பட்டிருக்கிறார். தன்னுடைய சமூக அடுக்கு வர்க்க நிலையை கடந்து உயர்மட்டத்துக்குச் செல்லும் வளர்ச்சி போக்கு அந்த பெண்ணிடம் காணப்படவே சில பேராசிரியர்களாலும், சக மாணவர்கள் சிலராலும் உளவியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்.

ஜீன்ஸ் பேன்ட், லெக்கின்ஸ் அணியக்கூடாது என்கிறது அந்த கல்லூரி நிர்வாகம். ஆனால், நாங்கள் கல்லூரியில் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோதே, பல்கலைக்கழகத்தின் மக்கள்தொடர்பு அதிகாரி குணசேகரனிடம் லெக்கின்ஸ் அணிந்துவந்த ஒரு மாணவி அனுமதி கடிதத்தில் கையெழுத்து வாங்கிச் சென்றார். அது குறித்து நாங்கள் கேட்டதற்கு, தான் அதை கவனிக்கவில்லை என்று விட்டேத்தியாக பதிலளித்தார் குணசேகரன். அங்கே வர்க்கப் பாகுபாடு இருந்திருக்கிறது என்பதற்கு இதைவிட சாட்சியம் தேவையில்லை” என்றார்.

இதுகுறித்து வேல்ஸ் பல்கலையின் மக்கள் தொடர்பு அதிகாரியான குணசேகரனிடம் கேட்டபோது ”நடப்பவை அனைத்துமே எங்களிடமிருந்து பணம் பறிக்க ராகவியின் பெற்றோரும் சில அரசியல் கட்சிகளும் செய்யும் பித்தலாட்டம். தற்கொலைக்குக் காரணம் காதல் விவகாரம்தான். அதனால்தான் கல்லூரிக்கு வந்தபோது எங்கள் கண்முன்னே ராகவியை அவரது தந்தை அடித்தார். தாயையும் அடிக்கச் சென்றார்” என்றார்.

சக மாணவர்கள் ராகவியைத் சீண்டி வந்ததாக உண்மை அறியும் குழுவினர் சொல்கிறார்களே எனக் கேட்டதற்கு, “ராகவி இரண்டாம் ஆண்டு மாணவி. ஆகையால் ராகிங் நடக்க வாய்ப்பில்லை” என்றார். ”அவர் ஆடைக்கட்டுப்பாடு மீறியதாகச் சொல்லப்படுகிறதே... உங்கள் கல்லூரியில் டிரெஸ் கோட் குறித்து கல்லூரி மாணவர்களுக்கான சிற்றேட்டில் குறிப்பிட்டுள்ளீர்களா? எனக்கேட்டபோது, “உள்ளது... ஆனால், அது முக்கியமில்லை” என்றார்.

சிவக்குமார்
சிவக்குமார்

கல்லூரி தரப்பின் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து உண்மை அறியும் குழுவின் கல்வியாளர் ப.சிவக்குமாரிடம் கேட்டபோது, ”கல்லூரி தரப்பு தப்பித்துக்கொள்ள, காதல் பிரச்சினை என்கிறது. ராகவியின் காதலர் உதயா அந்த குடும்பத்தில் ஒருவராக நேசிக்கப்படுகிறார். விசாரணைக்குச் சென்ற எங்களை பாதிக்கப்பட்ட பெற்றோரிடம் அழைத்துச் சென்றதே உதயா தான். இது தனிப்பட்ட ஒரு மாணவிக்கு நேர்ந்த சிக்கலாக அணுகக்கூடாது. வெளிப்படையாகச் சாதியைச் சொல்லி திட்டுவது இப்போதெல்லாம் நடப்பதில்லை. பெண்ணாகச் சீண்டப்படுவது வேறு. பட்டியலினப் பெண்ணாக சீண்டப்படுவது வேறு. வியாபார உத்தியாக பிரம்மாண்ட வளாகம் கட்டிவைத்துக் கொண்டு கடும் ஒழுக்க விதிகளை விதிக்கும் கல்வி நிறுவனங்கள் நல்லவையாகப் பார்க்கப்படுவது அடுத்த துரதிருஷ்டம்.

மாணவர்களை நோட்டம் பார்க்கவே தனியாக ஆட்கள் இங்கெல்லாம் நியமிக்கப்படுகிறார்கள். உண்மையில் நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் ஆடைக்காட்டுப்பாடு விதிப்பதில்லை. அங்கு மாணவர்கள் சுதந்திரமாகவும் படைப்பாற்றலோடும் திகழும் சூழல் ஏற்படுத்தித் தரப்படுகிறது. நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட தனியார் கல்வி நிறுவனங்களை அரசு கண்காணிக்க வேண்டும். முதல் தலைமுறை பட்டதாரியாக வர எத்தனித்த பட்டியலின மாணவி ராகவி மரணம் தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும்” என்றார் அவர்.

கல்வி நிலையங்கள் கொடுக்கும் அழுத்தத்தால் பட்டியலின மாணவர்கள் பலியிடப்படுவது நெடுங்காலப் பெருந்துயரம். ஆனால், இத்தகைய மரணங்கள் நிகழும்போதெல்லாம் பாதிக்கப்பட்டவரின் மன உறுதி கேள்விக்குள்ளாக்கப்படுகிறதே தவிர நிறுவனப்படுத்தப்பட்ட சாதிய பாகுபாடு கேள்விக்கு உட்படுத்தப்படுவதில்லை என்பதுதான் ஆகப்பெரும் துயரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in