பிறந்த குழந்தைக்கும் சர்க்கரை நோய் வருமா?

அவள் நம்பிக்கைகள்-8
பிறந்த குழந்தைக்கும் சர்க்கரை நோய் வருமா?

“அதான் கர்ப்பத்தை கன்ஃபர்ம் பண்ணி, கரு உள்ளே நல்லா வளருதுன்னு சொல்லியாச்சே… இப்ப எதுக்காக ரத்த டெஸ்ட் எடுக்கணும் டாக்டர்?”

கர்ப்பத்தை உறுதி செய்தவுடன் மருத்துவர் சில ரத்தப் பரிசோதனைகளைப் பரிந்துரை செய்ததும் எழும் முதல் கேள்வி இதுதான். பொதுவாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் இந்தப் பரிசோதனைகளில் ரத்த க்ரூப், ஹீமோகுளோபின் அளவு, உப்பு அளவு, தைராய்டு அளவு போன்ற விபரங்களை முக்கியமாகக் கேட்பதுடன், Glucose Challenge Test (GCT) என்ற பரிசோதனையைப் பரிந்துரைத்திருப்பார்கள்.

குளுக்கோஸ் சேலஞ்ச் டெஸ்ட்டில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு 75 கிராம் குளுக்கோஸ் கரைத்த நீரைக் குடிக்கச் சொல்லப்படும். 2 மணிநேரம் கழித்து, ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு இருக்கிறது என்பது சோதிக்கப்படும். ஒரு பெண்ணின் கர்ப்பகாலத்தில் இரண்டு, ஐந்து மற்றும் எட்டாவது மாதம் என குறைந்தது 3 முறையாவது பார்க்கப்படும் டெஸ்ட் இது. இயல்பாக ரத்தத்தில் சர்க்கரை அளவைப் பார்க்காமல், அதற்குப் பதிலாக குளுக்கோஸைக் குடிக்கவைத்து, பிறகு சர்க்கரை அளவைப் பார்ப்பதெல்லாம் சற்று விநோதமாக இருக்கும். அது ஏன் என்று தெரிந்துகொள்ளும் முன், கர்ப்பிணிப் பெண்களை சர்க்கரை எப்படிப் பாதிக்கிறது என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.

உண்மையில், Gestational Diabetes எனப்படும் கர்ப்பகால சர்க்கரை நோய், உலக அளவில் ஏழு பெண்களில் ஒருவருக்கு இருக்கிறது. இந்தியாவில் அதைவிடச் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. கர்ப்பகாலத்தில் ப்ரொஜெஸ்டிரான், ஈஸ்ட்ரோஜன் மற்றும் நஞ்சுக்கொடி ஹார்மோன் எனும் Human Placental Lactogen ஆகியவை அதிகம் சுரக்கும். இவை, இன்சுலினுக்கு எதிராக பெண்ணின் உடலில் வேலை செய்யும் குணம் கொண்டவை. அதை ஈடுகட்ட, கருத்தரித்தவுடன் இயல்பாகவே கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் இன்சுலின் சற்று அதிகமாக சுரக்கத் தொடங்கிவிடுகிறது.

ஆனால், இவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் இன்சுலின் தேவையான அளவு சுரப்பதில்லை. இதனால், சர்க்கரை அளவு அதிகமாகி கர்ப்பகாலத்தில் சில சிக்கல்களை ஏற்படுத்துவதே, கர்ப்பகால சர்க்கரை நோய் அல்லது Gestational Diabetes Mellitus (GDM- ஜிடிஎம்) எனப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்களில் அதிக உடற்பருமன், குடும்பத்தில் ஏற்கெனவே சர்க்கரை நோயுள்ளவர்கள், பிசிஓடி என்ற சினைப்பை நீர்க்கட்டி உள்ளவர்கள், முந்தைய கர்ப்பத்தில் சர்க்கரை நோய் கண்டறியப்பட்டவர்கள் போன்றவர்கள் இதில் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.

இப்படி இன்சுலின் குறைந்து தாயின் ரத்தத்தில் கூடும் சர்க்கரை அளவு, தொப்புள்கொடி வழியாக குழந்தைக்கு நேரடியாக சென்றடையும்போது கருச்சிதைவு, குழந்தைக்குப் பிறவி ஊனங்கள், இருதயம், மூளை, சிறுநீரகம், முதுகுத் தண்டுவடம் மற்றும் பிற உறுப்புகளில் குறைபாடுகளை ஏற்படுத்திப் பிறக்கும் குழந்தையை நிரந்தர ஊனமாக்கிவிடலாம். தாய்க்கு பனிக்குட நீர் அதிகரிப்பு, கர்ப்பகால ரத்த அழுத்தம், குறைப்பிரசவம், நிறைமாத சிசு இறப்பு, அதிக எடையுள்ள குழந்தைப் பிறப்பு, அதனால் அதிகரிக்கும் சிசேரியன் பிரசவங்கள் போன்ற சிக்கல்களை தாய்க்கும் ஏற்படுத்தக்கூடும். மேலும் பிரசவத்துக்குப் பின்பும் அதிக ரத்தப்போக்கு, தாய்ப்பால் சுரப்பின்மை, கிருமித்தொற்று போன்றவற்றுடன் 50 சதவீதப் பெண்கள் பிரசவத்துக்குப் பிறகு நிரந்தர சர்க்கரை நோயாளிகளாகவே மாற்றிவிடும் அபாயமும் இதில் உள்ளது.

இவையனைத்துக்கும் மேலாக, இந்த அதிக அளவு சர்க்கரை தாயின் கணையத்துடன் சேர்த்து குழந்தையின் கணையத்தையும் இயக்கத் தூண்டுவதால், கருவிலேயே குழந்தைக்கு இன்சுலின் சுரந்து அதன் சர்க்கரை அளவுகள் மாறி மாறி, கருவின் வளர்ச்சியைப் பாதிப்பதுடன், குழந்தை பிறக்கும்போதே சர்க்கரை நோயாளியாகப் பிறக்கும் அபாயத்தையும் இது ஏற்படுத்துகிறது.

இப்படி கர்ப்பகாலம், பேறுகாலம் தாண்டியும், பிந்தைய வாழ்க்கையிலும் தாய் சேய் இருவரையும் சர்க்கரை நோய் பாதிக்கக் கூடும். ஆகவேதான் இந்தப் பரிசோதனை முக்கியத்துவம் அடைகிறது. அத்துடன் பெரும்பாலும் கர்ப்பகாலத்தின் ஏழு அல்லது எட்டாவது மாதங்களில் ஏற்படக்கூடிய இந்த ஜிடிஎம், ஒருசிலருக்கு ஆரம்ப மாதங்களிலேயே காணப்படுவதால், இதற்கான பரிசோதனையை இரண்டு, ஐந்து மற்றும் எட்டாம் மாதங்கள் என மூன்று முறை மேற்கொள்ள அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.

கர்ப்பகாலத்தில் ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கண்டறிய, அமெரிக்க சர்க்கரை நோய் கட்டுப்பாட்டு அமைப்பு, உலக சுகாதார அமைப்பு மற்றும் IADPSG என்ற உலக சர்க்கரை நோய் ஆய்வு அமைப்பு என ஒவ்வொன்றும் பல்வேறு வழிகளைப் பரிந்துரைக்கின்றன. இருந்தபோதிலும், இந்தியாவில் தமிழகத்தைச் சார்ந்த பேராசிரியர் டாக்டர் சேஷய்யா பரிந்துரைத்த குளுக்கோஸ் சேலஞ்ச் டெஸ்ட் வழிமுறைதான் நாடு முழுதும் பின்பற்றப்படுகிறது. DIPSI என்ற இந்திய சர்க்கரை நோய் ஆய்வு அமைப்பின் தலைவரான இவருக்குத்தான், இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருப்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும்.

இவருடைய பரிந்துரையின் மகத்துவம் என்ன தெரியுமா? ரத்தப் பரிசோதனைக்காகத் தொலைதூரத்திலிருந்து வரும் பெண்கள், வெறும் வயிற்றில் வருவது சிரமம் என்பதால், உணவு இடைவெளி எதுவாக இருந்தாலும், 75 கிராம் குளுக்கோஸ், இரண்டு மணிநேரம் கழித்து ரத்தப் பரிசோதனை என, கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்றதாக இந்தப் பரிசோதனை உள்ளது.

அப்படி இந்த குளுக்கோஸ் சேலஞ்ச் டெஸ்ட்டில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் தாய்மார்களுக்கு மட்டுமே, Fasting, Postprandial, HbA1c.., என சாப்பிடுவதற்கு முன், சாப்பிட்ட பிறகு, மற்றும் அதன் கட்டுப்பாடு அளவு என்று அவர்களை அதிக நேரம் மருத்துவமனையில் காத்திருக்க வைக்கும் அடுத்தநிலை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், சர்க்கரை அளவு 140 மில்லி கிராமுக்கு குறைவாக இருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் காரணமில்லாமல் வெறும் வயிற்றில் வருவதையும், வந்து நீண்ட நேரம் மருத்துவமனையில் காத்திருப்பதையும் குறைப்பதே குளுக்கோஸ் சேலஞ்ச் டெஸ்ட்டின் முக்கியமான வேலையாகும்.

மேலும், குளுக்கோஸ் சேலஞ்ச் டெஸ்ட் மற்றும் அதன் இதர பரிசோதனைகளின் மூலம் கர்ப்பகால சர்க்கரை நோய் உறுதி செய்யப்பட்டால், இவர்களுக்கு எம்என்டி (Medical Nutrition Therapy) என்ற உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியும், அதில் சர்க்கரை அளவு குறையாதபோது, இன்சுலின் அல்லது மருந்துகள் ஆகிய சிகிச்சை முறைகளும் தேவைப்படலாம்.

ஆரம்பத்தில் முதியோருக்கு மட்டுமே வந்த சர்க்கரை நோய், வாழ்க்கைமுறை மாற்றம் காரணமாக முப்பது வயதை எட்டியவர்களுக்குக்கூட வர ஆரம்பித்துவிட்டது. இனிவரும் காலங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய் வந்துவிடாமல் தடுக்கவே, இந்தப் பரிசோதனையும், அதற்கான சிகிச்சைகளும் கர்ப்பகாலத்திலேயே தொடங்கப்படுகிறது.

ஆக, GCT எனும் எளிய பரிசோதனை கர்ப்பிணிப் பெண்களின் சர்க்கரை அளவை எளிதாகக் காண்பித்துக் கொடுப்பதுடன் அவர்களது சந்ததியினர் ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம் அளித்துக் காக்கிறது என்பதே உண்மை.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
பிறந்த குழந்தைக்கும் சர்க்கரை நோய் வருமா?
கரோனா பாதித்தால் கருச்சிதைவு ஏற்படுமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in