இந்த நேரத்தில் கருத்தரிப்பைத் தள்ளிப்போடுவது நல்லது!

அவள் நம்பிக்கைகள்-24
இந்த நேரத்தில் கருத்தரிப்பைத் தள்ளிப்போடுவது நல்லது!

முழுமையோ, பகுதி கர்ப்பமோ எதுவாக இருந்தாலும் முத்துப்பிள்ளை கர்ப்பம் என்றால், கருக்கலைப்பு மேற்கொள்வதுதான் இதற்கான சிகிச்சைமுறை என மருத்துவர்கள் சொல்வதாகக் கடந்த வாரம் பார்த்தோம். மற்ற கருச்சிதைவு போல அல்லாமல் முத்துப்பிள்ளை கர்ப்பத்தில் அதிக கவனம் தேவைப்படுகிறது என்றும் கூறுகின்றனர். அவை என்னவென்று தொடர்ந்து பார்ப்போம்.

முதலாவதாக, கருச்சிதைவின்போது இப்பெண்களுக்கு அதிக ரத்த இழப்பு ஏற்படக்கூடும். ஆகையால் ரத்த சோகை மற்றும் பிற பாதிப்புகளைத் தவிர்க்க, முன்னெச்சரிக்கையாக ரத்தம் செலுத்துவதற்கு இவர்களைத் தயார்ப்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. மேலும் கரு வெளியேறிய பிறகும், ஒரு சிலரில் அது தங்கியிருக்கவும், சிலரில் கோரியோ கார்சினோமா (Chorio-carcinoma) எனும் புற்றுநோயாக மாறக் கூடிய வாய்ப்பும் 2 சதவீதம்வரை உள்ளது. மருத்துவரின் அறிவுறுத்தலின்படி, முன்னர் கூறிய ஹெச்.சி.ஜி. ஹார்மோனின் அளவை, வாரம் ஒருமுறை அல்லது இரு வாரங்களுக்கு ஒருமுறை என்று தேவைக்கேற்ப தொடர்ந்து மேற்கொள்வதும், ஒரு வருடம்வரை தொடர்கண்காணிப்பில் இருப்பதும் இங்கு அவசியமாகிறது.

ஹெச்.சி.ஜி. அளவு முற்றிலும் குறைந்து, முத்துப்பிள்ளை கர்ப்பமும் முற்றிலும் நீங்கியது உறுதியான பிறகும் ஓரிரு வருடங்கள் கருத்தரிப்பைத் தள்ளிப்போடுவது நல்லது. அப்படி அதற்கு முன்னர் அடுத்த கருத்தரிப்பு நிகழும்போது, இந்த கோரியோ கார்சினோமா ஏற்படும் வாய்ப்புகளும், மீண்டும் முத்துப்பிள்ளை உருவாகும் வாய்ப்புகளும் அதிகம்.

இப்பெண்களுக்கு, துரதிர்ஷ்டவசமாக கோரியோ கார்சினோமா ஏற்படுமேயானால், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புற்றுநோய்க்கான மருந்துகளுடன் கீமோதெரபி பரிந்துரைக்கப்படுகிறது. சமயங்களில், கர்ப்பிணிப் பெண்ணின் வயது கூடுதலாகவும், எதிர்காலத்தில் கருத்தரிக்கும் எண்ணமும் இல்லை எனும்போது, கர்ப்பப்பையை அகற்றுவதும் பரிந்துரைக்கப்படுகிறது. அத்துடன், முத்துப்பிள்ளை கர்ப்பம் என்றால் அது கர்ப்பப்பையில் மட்டும்தான் இருக்கும். ஆனால், அதுவே கோரியோ கார்சினோமா புற்றுநோயாக அது மாறினால் நுரையீரல், கல்லீரல், மூளை என எங்கு வேண்டுமானாலும் பரவி, பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்பதால், இதில் மருத்துவ கவனம் பொதுவாகவே அதிகம் தேவைப்படுகிறது.

சாதாரணமாக நிகழும் ஒரு கருத்தரிப்பு இவ்வளவு பாதிப்புகளைக் கூட ஏற்படுத்துமா என்ற பயம் இப்போது நம்மிடையே எழுகிறதல்லவா? உண்மையில் சாதாரணக் கருத்தரிப்பு, மைதிலி போன்ற ஒருசிலரில் முத்துப்பிள்ளையாகவும், அதிலும் சிலரில் புற்றுநோயாகவும் மாறக்கூடிய அபாயங்கள் உண்டு. இருப்பினும் தக்க சமயத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளால், பாதிக்கப்பட்ட பெண் முழுமையாகக் குணமடைந்து விடுவாள் என்பது தான் முத்துப்பிள்ளை கர்ப்பத்தின் மிகப்பெரிய ஆறுதல்.

உண்மையில், மைதிலி உள்ளிட்ட பல பெண்களுக்கும் முத்துப்பிள்ளை கர்ப்பத்திற்குப் பிறகும், முத்தான மகப்பேறு அறிவியலில் சாத்தியம் தான் என்ற ஆறுதல் அளிக்கும் நம்பிக்கையுடன் அவள் நம்பிக்கைகள் தொடரும்.

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
இந்த நேரத்தில் கருத்தரிப்பைத் தள்ளிப்போடுவது நல்லது!
தாயின் க்ரோமோசோம் இல்லாதுபோனால் முத்துமுத்தாக கர்ப்பம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in