மகளிர் இசைக்குழுவை உருவாக்கி சரித்திரம் படைத்த ஏ.ஆர்.ரஹ்மான்!

மகளிர் இசைக்குழுவை உருவாக்கி சரித்திரம் படைத்த ஏ.ஆர்.ரஹ்மான்!

“அன்பையும் மரியாதையையும் இசை எனக்கு ஈட்டித் தந்தது. ஆனால், இசைத் துறையை பணிவாழ்க்கையாக தேர்ந்தெடுக்கும் சூழல் இன்னமும் உலகெங்கிலும் உள்ள பெண்களுக்குக் கனியவில்லை...”

இப்படிச் சொன்னவர் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான். சொன்னது மட்டுமல்ல, தனது வழிகாட்டுதலில் முழுக்க முழுக்க பெண்களை மட்டுமே கொண்ட ‘ஃபிர்தாஸ் இசைக்குழு’வை உருவாக்கியுள்ளார்.

இசைத் துறையில் பெண்களை அதிகாரப்படுத்தும் முயற்சியை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் முன்னெடுத்திருப்பது போற்றுதலுக்குரியது.

மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த பெண் இசைக் கலைஞர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது இந்தக் குழு. அக்டோபர் 23 அன்று, துபாயில் நடைபெறவிருக்கும் ‘எக்ஸ்போ 2020 துபாய்’ கண்காட்சியில் ரஹ்மானுடன் இணைந்து பிரமாண்டமான இசை நிகழ்ச்சியை இக்குழுவினர் அரங்கேற்றவிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து, மேலும் 5 நிகழ்ச்சிகளை அங்கு நிகழ்த்தவிருக்கிறார்கள்.

உலகின் மிகப்பெரிய கண்காட்சியாக அறிவிக்கப்பட்டிருக்கும் ‘எக்ஸ்போ 2020 துபாய்’-ல் 23 நாடுகள் பங்கேற்கவிருக்கின்றன. கடந்த ஆண்டு நடைபெறவிருந்தது கரோனா பெருந்தொற்று காரணமாக, இந்த ஆண்டுக்குத் தள்ளிப்போடப்பட்டது.

இருப்பினும் இதன்பொருட்டு கடந்த ஜூலை மாதத்திலிருந்து துபாயில் ரஹ்மான் வசித்துவருகிறார். ஓமன், லெபனான், சிரியா, இராக், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இசை மீது பேரார்வம் கொண்ட பெண்களைத் தேர்வு செய்து அவர்களுக்குப் பயிற்சி அளித்தார். அபரிமிதமான இசை ஆற்றல் படைத்த 300 பெண்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 50 பேருக்கு, இந்த அபூர்வமான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார்.

அரேபியப் பண்பாடும் இந்திய பாரம்பரியமும் தழுவிக்கொள்ளும் உன்னதமான தருணங்களைப் பிரபல அரேபிய தாளவாத்தியங்களான கேனன், பஜக், அவுத் ஆகிவற்றுடன் சிதார் வாசிப்பதன் மூலம் உலகறியச் செய்யவிருப்பதாகவும் ரஹ்மான் அறிவித்துள்ளார்.

மொழிகளைக் கடந்த இசையை, வகைமைகளைக் கடந்ததாகவும் மாற்ற முடிவெடுத்தார். ஆகையால் இந்நிகழ்ச்சியில் இந்திய, மேற்கத்திய, அரேபிய இசை வடிவங்கள் சங்கமிக்கவிருக்கின்றன. இந்திய இசை எனும்போது செவ்வியல், நாட்டுப்புற, மக்கள் இசை என வரையறைகளைக் கடந்ததாக அமையும் என்றும் கூறியுள்ளார்.

‘மெட்ராஸ் மொசார்ட்’ என்று வாஞ்சையோடு அழைக்கப்படும் ரஹ்மானின் இந்நிகழ்ச்சியில் மோசார்ட்டின், ‘துருகிஷ் மார்ச்’ (Turkish March) இசைக்கோவையும் அரங்கேற்றப்படவிருக்கிறது. அதிலும் அரேபியத் தந்தி இசைக் கருவிகள் கொண்டு இசைக்கவிருக்கிறார்கள். இது தவிர, பீத்தோவனின் ‘மூன்லைட் சொனாட்டா’ (Moonlight Sonata), இந்தியத் திரையிசை மகாராணி லதா மங்கேஷ்கரின் பாடல்களும் இசைக்கப்படவிருக்கின்றன. அரேபியப் பண்பாடும் இந்தியப் பாரம்பரியமும் தழுவிக்கொள்ளும் உன்னதமான தருணங்களைப் பிரபல அரேபிய தாளவாத்தியங்களான கேனன், பஜக், அவுத் ஆகிவற்றுடன் சிதார் வாசிப்பதன் மூலம் உலகறியச் செய்யவிருப்பதாகவும் ரஹ்மான் அறிவித்துள்ளார்.

யாஸ்மினா ஷபா
யாஸ்மினா ஷபா
ஆயிரக்கணக்கானோருக்கு முன்னால் மேடை ஏறி கலைகளை நிகழ்த்தினால், நம்மை மற்றவர்கள் எப்படி பார்ப்பார்கள் என்கிற மனத்தடை இன்னமும் பெண்களுக்கு அகலவில்லை. அதிலும் இசை நடத்துநர் என்றாலே கோட்டு, சூட்டு அணிந்த ஓர் ஆண் மேடையில் நின்றுகொண்டு கைகளை அசைப்பது என்ற பிம்பம் ஆழப்பதிந்துவிட்டது...

பெண்கள், பொதுவெளியில் சுதந்திரமாக இயங்கக்கூடாது என்கிற கட்டுப்பெட்டித்தனம் மாறாத பிரதேசங்களுக்கு இந்த இசை நிகழ்ச்சி வலுவான சேதியைக் கடத்தும் என்று உறக்கச் சொல்லியிருக்கிறார் குழுத் தலைவி யாஸ்மினா ஷபா. ஆயிரக்கணக்கானோருக்கு முன்னால் மேடை ஏறி கலைகளை நிகழ்த்தினால் நம்மை மற்றவர்கள் எப்படி பார்ப்பார்கள் என்கிற மனத்தடை இன்னமும் பெண்களுக்கு அகலவில்லை. அதிலும் இசை நடத்துநர் என்றாலே கோட்டு, சூட்டு அணிந்த ஓர் ஆண் மேடையில் நின்றுகொண்டு கைகளை அசைப்பது என்ற பிம்பம் ஆழப்பதிந்துவிட்டது.

இந்த தேய் வழக்கையும், காம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்தின் இசை நடத்துநர் படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்ற யாஸ்மினா ஷபா மாற்றவிருக்கிறார். ஏற்கெனவே இவர், 60 உறுப்பினர்கள் கொண்ட ‘லெபினீஸ் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா’ பாடகர் குழுவுக்கு, லெபனன் நாட்டில் சிறப்பு விருந்தினராகத் தலைமை தாங்கியுள்ளார். தற்போது, ஏ.ஆர்.ரஹ்மானின் வழிகாட்டுதலில் முற்றிலும் பெண்களைக் கொண்ட இசைக்குழுவின் தலைவியாகச் செயல்படுவது, அற்புதமான உணர்வையும் படிப்பினையும் ஊட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானுடன் 2019-ல் திட்டமிடப்பட்ட இந்த இசைக்குழுவுக்கு இப்போது முழு வடிவம் கிடைத்துள்ளது. தொழில்முறையாக இந்தக் குழுவை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி இந்தக் குழுவில் இடம்பெற்றிருக்கும் இசைக் கலைஞர்களுக்கு விடுப்பு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட ஊழியர்களுக்காக தொழிற்நிமித்தமான உரிமைகள் உறுதி செய்யப்பட்டுவருகின்றன.

’எக்ஸ்போ 2020 துபாய்’ கண்காட்சி நடைபெறவிருக்கும் தளத்திலேயே, ரஹ்மான் இசைக்கூடம் ஒன்றை நிறுவியுள்ளார். தான் மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள இசைக் கலைஞர்களும், திரைத் துறையினரும், ஆவணப்பட இயக்குநர்களும் தன் கூடத்தைப் பயன்படுத்திக்கொள்ள அழைப்புவிடுத்திருக்கிறார். கரோனா ஊழிக்காலத்தில் யாவரும் முடங்கிப்போனபோதும், துபாய் சுதந்திரமான படைப்பாற்றலுக்குக் கதவுகளைத் திறந்துவிட்டிருப்பதாகவும் ரஹ்மான் தெரிவித்தார்.

அரபு மொழியில் சொர்க்கத்தைக் குறிக்கும் ‘ஃபிர்தாஸ்’ பெண் இசைக் கலைஞர்களுக்கும் உலக இசை ரசிகர்களுக்கும் புத்தம் புது இசை பூமியைச் சிருஷ்டிக்கவிருக்கிறது. இசைத் துறையில் பெண்களை அதிகாரப்படுத்தும் முயற்சியை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் முன்னெடுத்திருப்பது போற்றுதலுக்குரியது.

‘எக்ஸ்போ 2020 துபாய்’ கண்காட்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கும் ‘ஃபிர்தாஸ் ஆர்கெஸ்ட்ரா’ நிகழ்ச்சியின் முன்னோட்டத்தை காண:

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in