‘சரணடையமாட்டோம்... சமர் புரிவோம்!’ - ஆர்ப்பரித்த ஆப்கன் பெண்கள்

‘சரணடையமாட்டோம்... சமர் புரிவோம்!’ -  ஆர்ப்பரித்த ஆப்கன் பெண்கள்

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தையொட்டி, ஆப்கன் பெண்கள் இன்று போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.

2021 ஆகஸ்ட் 15-ல், ஆப்கானிஸ்தான் ஆட்சிப்பொறுப்பைத் தாலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து அங்கு பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

அரசுத் துறைகளில் பணிபுரிந்துவந்த பெரும்பாலான பெண்கள்பணியை இழந்திருக்கின்றனர். பலர் மிகக் குறைந்த சம்பளத்துடன் வீட்டிலிருந்தே பணிபுரிய நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண் உறவினர் இல்லாமல் பயணம் செய்ய பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வீட்டைவிட்டு வெளியில் வரும் பெண்கள் புர்கா அல்லது ஹிஜாப் அணிந்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. பூங்காக்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கை மையங்கள் போன்றவற்றுக்குச் செல்ல பெண்களுக்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

கடைகளுக்குச் சென்று சிம் கார்டுகளை வாங்க, பெண்களுக்கு அனுமதியில்லை என உருஸ்கான் மாகாண தொலைத்தொடர்பு அதிகாரிகள் அறிவித்திருக்கிறார்கள். சிம் கார்டு வாங்கும் கடைகளில் ஆண் / பெண் எனப் பிரிக்கும் வசதி இல்லை என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர்கள் விளக்கமளித்திருக்கிறார்கள்.

எல்லாவற்றையும்விட கொடுமை, பதின்மவயது பெண்கள் பயிலும் பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டிருப்பதுதான்,

கடுமையான அடிப்படைவாதத்தைப் பின்பற்றும் தாலிபான்கள் இப்படி தங்கள் உரிமைகளைப் பறித்திருப்பது ஆப்கன் பெண்களை ஆழ்ந்த வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்நிலையில், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தையொட்டி தலைநகர் காபூலில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘எங்கள் உரிமைகளுக்காக இறுதிவரைப் போராடுவோம். சரணடைய மாட்டோம்’ என்று எழுதப்பட்ட பதாகைகளைச் சிலர் ஏந்தியபடி சென்றனர். பெரும்பாலானோர் கறுப்புநிற குளிர் கண்ணாடிகள் அணிந்து, முகத்தை மறைக்கும் வகையில் துணியைச் சுற்றியிருந்தனர். சிலர் முகக்கவசம் அணிந்திருந்தனர்.

போராட்டக்காரர்களைக் கண்காணிக்க தாலிபான் உளவுப் பிரிவினர் கார்களில் வலம்வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மூவர் கைதுசெய்யப்பட்டதாகவும், அவர்கள் அவமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டதாகவும் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். பெண்களின் சிறு சிறு நடவடிக்கைகளுக்குக்கூட தாலிபான்கள் அஞ்சுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

‘தாலிபான்களின் ஆட்சியில் பெண்கள் மனிதர்களாகவே நடத்தப்படுவதில்லை. பெண்கள் இன்றைக்குப் பணிக்குச் செல்லவோ, கல்வி பயிலவோ முடியவில்லை. நிம்மதியாக சுவாசிக்கக்கூட இயலவில்லை’ என்று பெண்கள் வேதனையுடன் கூறினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in