குழந்தைகளோடு பழகுவதும் ஒரு பெரிய கலை!

அமெரிக்காவில் இருந்து கொண்டு அசத்தும் மோனிஷா
மோனிஷா
மோனிஷா

மெத்தப் படித்து, நல்ல வேலை கைகூடி வெளிநாடு சென்றுவிட்டால் நம் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பலரும் மறந்துவிடுகின்றனர். ஆனால், மோனிஷா மணிகண்டராஜன் இதில் சற்றே வித்தியாசமானவர்.

மகளுக்குப் பாடம் சொல்லும் மோனிஷா...
மகளுக்குப் பாடம் சொல்லும் மோனிஷா...

நாகர்கோவிலைச் சேர்ந்த மோனிஷா மணிகண்டராஜன் பொறியியல் பட்டதாரி. அமெரிக்காவில் எம்.பி.ஏ., படித்த இவர், திருமணத்துக்குப் பிறகு தனது கணவர் கார்த்திகேயனுடன் அமெரிக்காவில் வசித்துவருகிறார். இருவருமே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலைசெய்கிறார்கள். கார்த்திகேயன் மென்பொறியாளர், மோனிஷா புராடெக்ட் மேனேஜர்.

மோனிஷாவுக்கு, தான் படித்த படிப்பைத் தாண்டி குழந்தைகளின் ஆழ்மனதைப் புரிந்துகொள்வதிலும், அவர்களோடு தொடர்ச்சியாக உரையாடுவதிலும் கொள்ளைப் ப்ரியம். அதற்காகவே, சென்னை இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணியில் இருந்தபோதே சுயவிருப்பத்தில் மாண்டிசோரி கல்விமுறையைக் கற்றார். அந்தப் படிப்புடன் தனது அனுபவத்தில் தெரிந்துகொண்ட சில நுட்பங்களையும் புகுத்தி தன் குழந்தையை வளர்த்து வருகிறார். மிக முக்கியமாக, எந்த நாட்டில் இருந்தாலும், நம் சொந்த மண்ணின் கலாச்சாரமும், பண்பாடும் குழந்தைகளுக்குத் தெரியவேண்டும் என்பதில் இவர் காட்டும் அக்கறை அதிசயிக்க வைக்கிறது.

அதுபற்றி நம்மிடம் பேசிய மோனிஷா, ”குழந்தைகளோடு பழகுவதும், அவர்களை சரியானபடிக்கு அணுகுவதும் பெரிய கலை. எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்பதுபோல், நம் வயதை முன்னிறுத்தி குழந்தைகள் செய்வது தவறு என்று அவர்களிடம் பேசவேகூடாது. அவர்களை நாம் மதித்தாலே அவர்களுக்கும் ஒரு பொறுப்புவரும். குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது என பெற்றோரே முடிவுக்கு வருவது மிகவும் அபத்தமானது. அவர்களுக்கு உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சற்று தயக்கம் இருக்குமே தவிர மற்றபடி அனைத்தும் தெரியும். டயாபர் மாற்ற வேண்டும் என்றால்கூட, 'உங்கள் டயாபர் நனைந்துவிட்டது; மாற்றலாமா செல்லம்?' என குழந்தைகளிடம் அனுமதி கேட்டுவிட்டுச் செய்துபாருங்கள்; அவர்களின் வளர்ச்சியில் பெரிய மாற்றத்தைக் காணலாம்.

’தவழும் பிள்ளை உயிரை எடுக்கும்’ என கிராமத்துப் பக்கம் சொல்வார்கள். அந்த நிலையில் இருக்கும் குழந்தையிடம் அதைத் தொடாதே... இதைத் தொடாதே எனச் சொல்லும் பெற்றோரும் இருக்கிறார்கள். குழந்தை எதையாவது எடுத்து வாயில் போட்டுக் கொண்டால் நம்மை திருத்திக் கொள்ளாமல், அதைக் கடிந்து கொள்கிறோம். உண்மையில், குழந்தை இருக்கும் இடத்தைச் சுற்றி பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு பெற்றோருக்குத்தானே இருக்கிறது” என குழந்தை வளர்ப்பில் இருக்கும் நுணுக்கங்களை அடுக்கினார்.

குழந்தை வளர்ப்பை மையப்படுத்தி, ‘தமிழ் மாண்டிசோரி’ என்னும் பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைத்திருக்கும் மோனிஷா, இதற்காக தனியாக வெப்சைட் ஒன்றையும் நடத்திவருகிறார். இதன் வழியாக தமிழ் கலாச்சாரத்தை ஆங்கில வழியில் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கிறார்.

தமிழ் கலாச்சாரத்தை ஏன் ஆங்கில மொழியில் சொல்கிறீர்கள் என்று கேட்டால், “85-க்கும் அதிகமான நாடுகளில் இருப்பவர்கள் இன்ஸ்டாகிராமில் என்னைப் பின்தொடர்கிறார்கள். இதில் தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு தமிழகம் பூர்விகமாக இருந்தாலும், இவர்களுக்குள் தமிழை பரவலாக அறியாத ஒரு தலைமுறையும் உருவாகிவிட்டது. அவர்களுக்கும் நம் கலாச்சாரத்தின் அருமை, பெருமைகள் தெரியவேண்டும். அதனால் தான் ஆங்கிலத்தில் இதை சொல்லிவருகிறேன்” என்கிறார் மோனிஷா.

முழுக்க முழுக்க குழந்தைகளுக்காகவே ‘பொங்கலோ பொங்கல்’, ‘வாழை இலை விருந்து’ என்ற இரண்டு நூல்களையும் எழுதி இருக்கிறார் இவர். சித்திரங்களுடன் பொங்கல் பண்டிகையின் வரலாற்றையும், தமிழரின் உணவுக் கலாச்சாரத்தையும் குழந்தைகள் மொழியில் இந்த நூல்கள் பேசுகின்றன. தன் மகளுக்கும் இந்தப் புத்தகத்தின் வழியாக தமிழ் கலாச்சாரத்தின் பெருமைகளைக் கற்றுக்கொடுக்கிறார்.

கிச்சனில் அம்மாவுக்கு உதவியாக மோனிஷாவின் மகள்...
கிச்சனில் அம்மாவுக்கு உதவியாக மோனிஷாவின் மகள்...

குழந்தை வளர்ப்பில் மோனிஷா முன்வைக்கும் முக்கியமான ஒரு விஷயம்... அனைத்திலும் அவர்களையும் ஈடுபடுத்திக் கொள்ளல்! “சிறுபிள்ளை விட்ட வெள்ளாமை வீடு வந்து சேராது” என பழமொழி சொல்வதைப் போல நாமே குழந்தைகளின் செயல்பாட்டைக் குறுக்கிக் கொள்ளக்கூடாது என்பதே இவரது பார்வை.

இதுபற்றியும் நம்மிடம் பேசிய அவர், “என் மகளுக்கு இரண்டே கால் வயது. ஆனாலும் வீட்டில் அத்தனை நிகழ்விலும் அவளையும் ஈடுபடுத்திக்கொள்வோம். கடந்த பொங்கலுக்கு நான் பொங்கல் வைக்கும் போது அரிசியை நான் அளந்து வைத்தேன். என் மகள் தான் அதை தண்ணீர் விட்டு அலசி தந்தார். என்னோடு சேர்ந்து என் மகள் கோலம் போட்டாள். சின்னக் குழந்தை என ஒதுக்கி நிறுத்தாமல் அத்தனையிலும் அவர்களை முன்னிலைப்படுத்தி, அவர்களையும் ஈடுபடுத்தும் போது அது குழந்தைகளை வெகுவாகவே குஷியூட்டும். பாடப் புத்தகங்களையும் தாண்டி அப்போது அந்தக் குழந்தைகளுக்கு அறிவு மேம்படும். ஆறு வயதுக்குள் குழந்தைகளின் மூளை வளர்ச்சி அபாரமாக இருக்கும். அந்த சமயத்தில் அவர்களை நாம் இப்படியான விஷயங்களில் ஈடுபடுத்தும்போது அவர்கள் இன்னும் இன்னும் மிளிர்வார்கள்.

வீட்டில் அன்றாட சமையல் பணியிலும் கூட என் மகளை பங்கெடுக்க வைப்பேன். இதெல்லாம் தான் அந்தக் குழந்தைகளுக்கு சீக்கிரம் வளரவேண்டும், நிறையச் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும். குழந்தைகள் என்பதற்காகவே அவர்களை ஒதுக்குவது அல்லது குறைத்து மதிப்பிடுவது என்ற தவறைத்தான் இன்றைக்கு பெற்றோரில் அநேகம் பேர் செய்துகொண்டிருக்கிறார்கள்” என்றார்.

சமூகத்தின் நிஜ வேர் நம் கலாச்சாரமும், பண்பாடும்தான் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர் மோனிஷா. அதனால் தான் தமிழர்களின் அடையாளமான பொங்கலையும் வாழை இலை விருந்தையும் கருவாகக் கொண்டு நூல்களை எழுதியவர், அடுத்ததாக தமிழர் கலாச்சாரத்தைத் தாங்கிய தொகுப்பு ஒன்றையும் எழுதிவருகிறார்.

நிறைவாக நம்மிடம் பேசிய மோனிஷா, ’’என்ன தான் படித்துப் பட்டம் பெற்று வசதிவாய்ப்புகளுடன் வாழ்ந்தாலும் நமது கலாச்சாரமும், பண்பாடும் தெரியும்போது தான், அதன்படி வாழும்போதுதான் ஒரு மனிதன் முழு மனிதன் ஆகிறான். அதை குழந்தைப் பருவத்திலேயே சொல்லிக் கொடுத்துவிட வேண்டும். நம் மண்ணின் வரலாற்றை போதிப்பதோடு, குழந்தை வளர்ப்பில் சில நுட்பங்களையும் கையாண்டால் குழந்தைகளின் எதிர்காலம் நாம் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் சிறப்பாக அமையும்” என்றார்.

பணி நிமித்தம் கணினியையே சுற்றிவந்தாலும் நமது தமிழ் கலாச்சாரமும் பண்பாடும் அடுத்த தலைமுறைக்கும் அச்சுக் குலையாமல் கடத்தப்பட வேண்டும் என்பதிலும் அதீத் முனைப்பு காட்டும் மோனிஷாவை நாமும் பாராட்டுவோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in