ஜப்பானிய ராணுவ அதிகாரிகளை அசரவைத்த அஞ்சலை பொன்னுசாமி!

ஜப்பானிய ராணுவ அதிகாரிகளை அசரவைத்த அஞ்சலை பொன்னுசாமி!
அஞ்சலை பொன்னுசாமி

நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் (ஐஎன்ஏ) பணியாற்றிய அஞ்சலை பொன்னுசாமி(102) நேற்று மலேசியாவில் காலமானார். அவரது உடல் இன்று காலை மலேசியாவின் செந்தூல் நகரில் தகனம் செய்யப்பட்டது.

மலேசியாவில் வசிக்கும் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் மத்தியில் பெரும் புகழ்பெற்றிருந்தவர் அஞ்சலை பொன்னுசாமி. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வாழும் சாட்சியமாக இருந்த அவரது மறைவு இந்தியாவுக்கே பேரிழப்பு.

அவரைப் பற்றிய சில நினைவலைகள்:

1920-ல் கோலாலம்பூரில் உள்ள செந்தூல் நகரில் பிறந்தவர் அஞ்சலை. அவரது தந்தை சுகாதாரத் துறையில் மலேரியா தடுப்பு மேற்பார்வையாளராகப் பணிபுரிந்தவர். எனினும், கல்வியைத் தொடரும் வாய்ப்பு அஞ்சலைக்குக் கிடைக்கவில்லை. அவருக்கு மட்டுமல்ல, இந்திய வம்சாவளிக் குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு அதே நிலைதான்.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில், மலேசியாவில் ஜப்பானியப் படைகள் ஊடுருவினர். அஞ்சலைக்கு வயது 21. மலேசிய மண்ணில் அணிவகுத்த ஜப்பானியப் படையினரைப் பார்த்தபோது அஞ்சலைக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. அதில் இந்தியப் பெண்கள் ராணுவ உடையுடன் கம்பீரமாக நடைபோட்டதைப் பார்த்ததும் அஞ்சலைக்குள் ஓர் உத்வேகம் உருவானது. அவர்கள் இந்திய தேசிய ராணுவத்தின் ஜான்ஸி ராணி ரெஜிமென்டைச் சேர்ந்தவர்கள்.

அஞ்சலை பொன்னுசாமி
அஞ்சலை பொன்னுசாமி

அந்தக் கணம் தன் வாழ்வையே மாற்றியமைக்கப்போகும் முக்கியமான முடிவை எடுத்தார் அஞ்சலை. ஆம், இந்தியாவை பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுக்க 1943-ல் சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய அந்தப் படையில் சேர அவர் உறுதிபூண்டார். முதலில் சிங்கப்பூருக்கு அடிப்படை ராணுவப் பயிற்சிக்காக அனுப்பப்பட்ட அஞ்சலை, அங்கு துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டார். ரைஃபிள்கள் தொடங்கி ஸ்டென் கன் வரை பல்வேறு வகையான துப்பாக்கிகளையும் கையாள்வதில் தேர்ச்சியடைந்த அவர், பின்னர் பர்மாவுக்கு (இன்றைய மியான்மர்) அனுப்பப்பட்டார்.

நாட்டுப்பற்றும் மன உறுதியும் கொண்டிருந்த அஞ்சலை, பர்மாவில் பல சவால்களுக்கு இடையில் பணியாற்றினார். நேதாஜியின் அன்பையும் அபிமானத்தையும் பெற்றிருந்த அஞ்சலை, அவரைப் பற்றிய பல்வேறு தகவல்களையும் பின்னாட்களில் பதிவுசெய்திருக்கிறார். நேதாஜி தனது படையில் இருந்த அத்தனைப் பெண்களையும் தனது சொந்த மகள்களாகவே நடத்தினார் என்று குறிப்பிட்டிருக்கிறார் அஞ்சலை.

இந்தியாவுக்கு எப்படியாவது சுதந்திரம் பெற்றுத் தர வேண்டும் எனும் லட்சிய வெறியுடன் இருந்த நேதாஜி ஜப்பானிய ராணுவத்துடன் கூட்டு வைத்திருந்தபோதிலும், அந்நாட்டு வீரர்கள் இந்தியப் பெண்களிடம் அத்துமீறி நடந்துகொள்ளாமல் தடுப்பதில் தீவிர முனைப்பு காட்டினார். அதை நேரடியாகவே பார்த்து உணர்ந்துகொண்டவர் அஞ்சலை.

சவால் விட்ட ஜப்பானியர்

இந்திய தேசிய ராணுவம் பர்மாவில் இருந்தபோது, ஜப்பானிய ராணுவத்தின் உயர்நிலை அதிகாரிகள் நேதாஜியிடம் உரையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது, ‘எதற்காகப் பெண்களை இங்கு அழைத்து வந்திருக்கிறீர்கள்? அவர்களால் என்னதான் செய்ய முடியும்?’ என்று ஜப்பானிய ராணுவ அதிகாரிகள் நேதாஜியிடம் கேட்டிருக்கின்றனர்.

மெலிதாகப் புன்னகைத்த நேதாஜி, “என்ன செய்ய முடியும் என்று அவர்களிடமே கேளுங்கள். அவர்களே உங்களுக்குப் பதில் சொல்வார்கள்” என்று சொன்னார்.

உடனே ஜப்பானிய அதிகாரிகள் ஒரு சவாலை முன்வைத்தனர். இந்திய வீராங்கனைகள் குறிப்பிட்ட தூரம் வரை வேகமாக ஓட வேண்டும் என்றனர். கனமான துணியால் தைக்கப்பட்ட சீருடை அணிந்திருந்த இந்தியப் பெண்கள், சாமானியர்களால் தூக்கவே முடியாத ஆயுதங்களைச் சுமந்துகொண்டு அடர்ந்த காடுகளைக் கொண்ட மலைப் பகுதியில் உத்வேகத்துடன் ஓடினர். அதைப் பார்த்த ஜப்பானியர்கள் மலைத்து நின்றனர். அந்தப் பெண்களில் அஞ்சலையும் ஒருவர்.

அந்த அளவுக்கு இந்திய வீராங்கனைகளுக்கு உடல் வலிமை கிடைக்கச் செய்ய நேதாஜி சிறப்புக் கவனம் எடுத்துக்கொள்வார் என அஞ்சலை பதிவுசெய்திருக்கிறார். அனைவருக்கும் ஆட்டிறைச்சியும் பாலும் கிடைக்க வேண்டும் என்பதில் நேதாஜி உறுதியாக இருப்பாராம். ஒரு நண்பராகத் தங்களிடம் பழகியதாகவும், அதேசமயம் மிகவும் கண்டிப்பான ராணுவ அதிகாரியாக இருந்ததாகவும் நேதாஜி குறித்து அஞ்சலை நினைவுகூர்ந்திருக்கிறார்.

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்திய தேசிய ராணுவம் கலைக்கப்பட்டது. அதன் பின்னர் அஞ்சலையும் மலேசியாவுக்குத் திரும்பினார். 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்ததை அறிந்து பெரிதும் மகிழ்ந்த அஞ்சலை, 1957-ல் மலேசியாவும் சுதந்திரம் அடைந்ததைக் கொண்டாடினார்.

பிறருக்கு உதவும் குணம் கொண்டவராகவே இறுதிவரை இருந்தார் அஞ்சலை. அத்துடன் தனது உடல் ஆரோக்கியத்திலும் மிகுந்த கவனம் செலுத்தினார். சைவ உணவுப் பழக்கத்தைக் கொண்டிருந்த அவர், தினமும் பால் அருந்துவதை விடாமல் கடைப்பிடித்துவந்தார். தனது தாய் 105 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்ததாகப் பதிவுசெய்திருக்கிறார். ஐஎன்ஏ தொப்பியை அணிந்தபடி கம்பீரமாக சல்யூட் வைக்கும் அழகே அவரது வீர வாழ்க்கையின் முக்கிய சாட்சியமாக இருந்தது எனலாம்.

நன்றி: ‘ஃப்ரீ மலேசியா டுடே’ (ஆங்கில மற்றும் மலேயா மொழி இணைய இதழ்)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in