சிவன்தான் எனக்கு முதலாளி!- இறை வாகனப் பணியில் அபூர்வமாய் ஒரு பெண்

சிவன்தான் எனக்கு முதலாளி!- இறை வாகனப் பணியில் அபூர்வமாய் ஒரு பெண்

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

இறை வாகனங்கள் செய்வது என்பது தனிச் சிறப்பு மிக்க கலை. இந்தக் கலையில் தேர்ந்தவர் கோவை பேரூரைச் சேர்ந்த நாகேஸ்வரி. இவரும் இவரது கணவர் தங்கவேலுவும் இந்த இறைப் பணியைப் பல ஆண்டுகளாகச் செய்துவந்தவர்கள். ‘இறை வாகன கலைமாமணி' எனும் விருதைப் பெறும் அளவுக்கு இந்தப் பணியில் சிறந்து விளங்கிய தங்கவேலு, சில மாதங்களுக்கு முன்னர் காலமாகிவிட்டார். இந்நிலையில், கணவர் விட்டுச்சென்ற பணிகளைப் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தொடர்ந்துவரும் நாகேஸ்வரி, பலரின் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார். தமிழ்நாட்டில் இந்தத் திருப்பணியைச் செய்யும் ஒரே பெண் என்றும் இவர் அறியப்படுகிறார்.

நாகேஸ்வரியைச் சந்திக்க பேரூருக்குச் சென்றிருந்தேன். பேரூர் பட்டீஸ்வரர் கோயில் அருகே இருக்கும் சிற்பச் சாலையிலிருந்து நாகேஸ்வரி உட்பட நான்கைந்து பேர், இன்னும் முற்றுப்பெறாத சிம்மச் சிற்பத்தைத் தூக்கி வந்து அப்போதுதான் வாசலில் வைத்தனர். அதன் மேற்பூச்சு வேலைகளைச் செய்யத் தொடங்கிய நாகேஸ்வரியிடம் பேசினேன்.

காவி நிற ஜிப்பா, வேட்டி என சிவபக்தை போல் தோற்றமளிக்கும் 37 வயது நாகேஸ்வரி, “எனக்கு இந்த இறைப் பணியைக் கத்துக்கொடுத்த என் கணவர் தங்கவேலு காலமானது என்னைக் கலங்க வச்சுடுச்சு. அந்த வலியை மறைச்சுக்கிட்டு இறைப் பணியில முழுமூச்சா இறங்கிட்டேன்” என்றபடி பேச ஆரம்பித்தார்.

“என் அப்பாவுக்குச் சொந்த ஊர் சென்னிமலை. அம்மாவுக்கு இதே பேரூர். நான் சென்னிமலையில் படிச்சேன். உடம்புக்கு சரியில்லாததால் 6-ம் வகுப்போட படிப்பு நின்னு போச்சு. அப்புறம் என் தாய்மாமன் தங்கவேலுவுக்கே என்னைக் கட்டிக்கொடுத்தாங்க. என் கணவருக்குப் பரம்பரைத் தொழில் இதுதான். 14 வயசுல தன் அப்பாவோட கையைப் பிடிச்சுட்டு இந்தத் தொழிலுக்குப் போக ஆரம்பிச்ச என் கணவர், 54 வயசுல சாகும்வரை அயராம உழைச்சார். தமிழ்நாட்டுல அவர் போகாத கோயில் இல்லை. செய்யாத உற்சவச் சிற்பங்கள் இல்லை” என்ற நாகேஸ்வரி, இந்தப் பணிக்குத் தான் வந்த விவரத்தையும் சொல்ல ஆரம்பித்தார்.

“ஆரம்பத்துல எனக்கு இந்த வேலையை என் கணவர் நேரடியா கத்துக்கொடுக்கலை. ‘எல்லா வேலையையும் உன்னிப்பா கவனி’ன்னு சொல்வார். அப்புறம்தான் குதிரைக்கால் செய்யறது. சிம்மப் பாதம் செய்யறதுன்னு சொல்லிக் கொடுத்தார். நான் செஞ்சது தப்பாயிருச்சுன்னா அதைச் சரி செய்ய மாட்டார். ‘நீயே செய்’னு விட்டுடுவார். இப்படி கை, கால், உடம்பு, முகம்னு செய்ய ஆரம்பிச்சு முழு உருவத்தை நானே செய்ய மூணு வருஷம் ஆச்சு. இதுவரைக்கும் தனியா நான் மட்டுமே 1,500 சிலைகள் செஞ்சிருப்பேன்” என்று நெகிழ்ச்சியுடன் சொல்லும் நாகேஸ்வரிக்கு ‘சிவராட்சசி’ என்ற பட்டமும் உண்டு. மார்கழி மாதத்தில் அதிகாலை 2.30 மணிக்கெல்லாம் எழுந்து குளித்து முடித்து, பேரூர் பட்டீஸ்வரர் காலடியில் நின்று சங்கநாதம் எழுப்பி, திருப்பாவை, திருவெம்பாவை பாடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதால் அப்படியொரு பட்டப்பெயராம்.

“நாங்க செய்ற சிலைகள் 18-20 வருஷம் பழுதில்லாம தாங்கும். அப்புறம் அந்தச் சிலைகளைப் புதுப்பிக்கிற வேலைகளைச் செய்யவும் எங்ககிட்டத்தான் தேடி வர்றாங்க” என்கிறார் நாகேஸ்வரி.

பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் உள்ள வேங்கை மரத்திலான மர அனுமன், ஆனைமலை மாசாணியம்மன் கோயிலின் சிம்ம வாகனம், கோவை கோணியம்மன் கோயில், மருதமலையில் உள்ள பல்வேறு இறை வாகனங்கள் இவர்கள் செய்து கொடுத்தவை. மலேசியா, கனடா போன்ற நாடுகளுக்குக்கூட இவர்கள் செய்த சிற்பங்கள் சென்றிருக்கின்றன.

“அப்படின்னா இந்த வேலையில நல்ல வருமானம் கிடைக்குமே?” என்று நான் கேட்டதும் பதறிப்போனார் நாகேஸ்வரி.
“அது தப்புங்கய்யா. இறைவனுக்குப் பூத்தொடுத்து மாலை கட்டலாம். துணி துவைக்கலாம். கோயில் வாசல் கூட்டி கோலம் போடலாம். ஆனா, நான் செய்யும் இந்த வேலையைச் செய்யறதுக்கு ஆண்களே ஒரு அடி தள்ளித்தான் நிப்பாங்க. எனக்கு இதுக்குப் பிராப்தம் இருக்கு. ‘விட்ட பணியைச் செய்யும் ஏவல் நான்’னு சிவனோட சொல் ஒண்ணு உண்டு. சிவன்தான் எனக்கு முதலாளி. அவருக்கு நான் கூலியா இருக்கேன். இந்த பட்டீஸ்வரர் தன் காலடியில் என்னை உட்கார வச்சு இதைச் செய்ய வச்சிருக்கார்ன்னா அது எப்படிப்பட்ட பிராப்தம்?” என்று உணர்ச்சி பொங்கப் பேசியவர், பிறகு சகஜநிலைக்கு வந்து தொடர்ந்தார்.

“ஒரு நாளைக்கு 500 ரூபாய் கூலிதான் வாங்குறோம். ஊர்ல எல்லோரும் சேர்ந்து கொடுக்கிற காசுல செய்ற இறைப்பணி இது. சிவன் சொத்து குலநாசம். இதுல தேவைக்கு மேல ஒரு பைசா வாங்கக் கூடாதுன்னு பரம்பரை பரம்பரையா சொல்லி வளர்த்த முறைமை இது. அதுல நாங்க தவறுவதில்லை. இன்னிக்குக் கார்ப்பென்டர் வேலைக்கு ஒரு நாள் சம்பளம் 1,500 ரூபாய். அது நமக்குக் கட்டுபடியாகாது. அதனாலதான் நான், என் மகன், அம்மா, அப்பான்னு குடும்பமா சேர்ந்து இதைச் செய்றோம்” என்று சொல்லும் நாகேஸ்வரி, “இந்த மாதிரி இறைப் பணிக்கு அரசாங்கத்துல ஏதும் உதவி செய்வாங்களா அய்யா? எனக்குன்னு எதுவும் வேண்டாம். இந்த இறை வாகனங்களை வைக்க ஒரு நிழல் கிடைச்சா போதும். அதுக்குள்ளேயே நாங்களும் வாழ்ந்துக்குவோம்” என்கிறார் இறைஞ்சும் குரலில்.

ஆண்டவனுக்கு சேவை செய்யும் இவர்களின் கோரிக்கைக் குரல் அரசுக்கு நிச்சயம் கேட்கும்; கேட்க வேண்டும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in