ஒரே குடும்பம்; ஒரே தேர்வு: காவலர்களாகத் தேர்வான மூன்று சகோதரிகள்!

ஒரே குடும்பம்; ஒரே தேர்வு: காவலர்களாகத் தேர்வான மூன்று சகோதரிகள்!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் இரண்டாம் நிலைக் காவலர்களாக தேர்வாகி பயிற்சியை முடித்திருக்கிறார்கள். தன்னுடைய ஆசை மகள்களால் நிறைவேறியுள்ளதாக அவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம்  அடுத்த கீழ்ஆவதம் கிராமத்தைச் சேர்ந்தவர்  வெங்கடேசன். விவசாயியான இவருக்கு ப்ரீத்தி, வைஷ்ணவி, நிரஞ்சனி என மூன்று மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ப்ரீத்திக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சகோதரிகள் மூவரும் காவல்துறையில் பணியில் சேரவேண்டும் எனத் தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இரண்டாம் நிலை காவலர் தேர்வில் கலந்துகொண்ட மூவரும், அந்த தேர்வில் தேர்வு பெற்றனர்.  திருவள்ளுவர் மாவட்டம், பொன்னேரி பகுதியில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சியை முடித்துள்ளார்கள். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பாக அந்த பயிற்சியின் நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து ஊர்திரும்பிய அவர்களுக்குக் கிராம மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து விவசாயி வெங்கடேசன் கூறுகையில், “நான் 12-ம் வகுப்பு முடித்த பிறகு போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்பது என்னுடைய ஆசையாக இருந்தது. ஆனால் காவலர்கள் தோல்வியில்  தோல்வி அடைந்ததால் அந்த ஆசை நிறைவேறாமலேயே போனது. திருமணமாகி விவசாயப் பணியைச் செய்துவந்தேன். எனக்கு மூன்று பெண் குழந்தைகள் பிறந்தது. அவர்களும் போலீஸ் ஆகவேண்டும் என உறுதியாக இருந்தார்கள். கடந்த சில வருடங்களாகவே அதற்கு அவர்களைத் தயார்படுத்திக் கொண்டு வந்தார்கள். இதற்காக எங்களின் விவசாய நிலத்தில் பயிற்சி மேற்கொண்டுவந்தனர். தற்போது மூவரும் காவலர்களாக தேர்வாகி இருக்கிறார்கள். எனது மகள்களின் மூலமாக எனது ஆசை நிறைவேறியது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது” என்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in