கர்ப்பகாலத்தில் கரோனா தடுப்பூசி பாதுகாப்பானதா?

கர்ப்பகாலத்தில் கரோனா தடுப்பூசி பாதுகாப்பானதா?
தடுப்பூசி -மாதிரி படம்

சாதாரணமாகவே கர்ப்பகாலத்தில் நுரையீரல்களின் செயல்பாடு மாறுபட்டு, கர்ப்பிணிப் பெண்களில் மூச்சிரைப்பு அதிகம் இருக்கும். அப்படியிருக்க, இந்த சமயத்தில் கோவிட் மற்றும் ஃப்ளூ தடுப்பூசிகளை ஏன் போடச் செய்கிறார்கள் மருத்துவர்கள்?

உண்மையில் கோவிட் மற்றும் ஃப்ளூ ஆகிய இரண்டும் வைரஸ்கள். தம்மைத்தாமே மாற்றிக் கொள்ளும் ஆர்என்ஏ வைரஸ்கள். அதிலும், இவை இரண்டும் முக்கியமாக நுரையீரல்களில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. அப்படிப்பட்ட வைரஸ்களிலிருந்து பாதுகாக்க வழங்கப்படும் கோவிட் மற்றும் ஃப்ளூ தடுப்பூசிகளை கர்ப்பகாலத்தில் எதற்குப் போட வேண்டும்? அப்படிப் போடப்படும் தடுப்பூசிகளால் தாய்க்கும், சேய்க்கும் பாதிப்புகள் எதுவும் ஏற்படுமா என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன், கர்ப்பகாலத்தில் ஏற்படும் நுரையீரல் மாற்றங்களை நாம் முதலில் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

பொதுவாகக் கர்ப்பகாலத்தில், நுரையீரல்களில் ’டைடல் வால்யூம்’ அதிகரித்தல் (tidal volume), ’ரெசிடியுவல் கபாசிட்டி’ குறைதல் (residual capacity) போன்ற காரணங்களால் நுரையீரல்களின் இயல்பான செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. இதன் காரணமாக, அதிக ஆக்சிஜன் பரிமாற்றத்துக்கு உதவும் விதமாக ஆரம்ப நாட்களிலேயே கர்ப்பிணியின் மூச்சின் அளவு சற்று கூடுதலடைவதுடன், நுரையீரலின் ரத்த நாளங்கள் சற்றே விரிவடையவும் செய்கின்றன. அத்துடன் கருவைத் தாங்கி வளரும் கருப்பையின் அளவும், அதனால் வயிற்றுப்பகுதியும் பெரிதாகி வரும் பிந்தைய மாதங்களில், அந்த வளர்ச்சி தரும் அழுத்தத்தை சரிசெய்யும் வகையில், கீழ் விலா எலும்புகள் சிறிது விரிவடைவதுடன், டயாஃபரம் என்ற உதரவிதானம் (diaphragm) நான்கு சென்ட்டிமீட்டர் வரை மேலே தள்ளப்படுகிறது. இத்தகைய மாறுதல்கள் மட்டுமன்றி, கர்ப்பகாலம் முழுவதிலும் அதிகம் சுரக்கும் ப்ரொஜஸ்டிரான் ஹார்மோன்கள், மூளையின் மூச்சு மையத்தில் ஏற்படுத்தும் மாறுதல்களாலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுதல் அதிகரிக்கிறது.

இப்படி இயல்பாகவே நுரையீரல் செயல்பாடுகள் மாறுபடக்கூடிய கர்ப்பகாலத்தில், நுரையீரல்களைக் குறிப்பாகப் பாதிக்கும் கோவிட் மற்றும் ஃப்ளூ வைரஸ்கள், வெகு சுலபமாகக் கர்ப்பிணிப் பெண்களைத் தாக்கும்போது, அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உருவாகிறது.

ஏற்கெனவே இரண்டாவது உயிரைத் தாங்கிக் கொண்டிருக்கும் தாய்க்கு இந்த வைரஸ் தொற்றுகளின் தாக்குதல் ஏற்படும்போது, அதிகப்படியான மூச்சுத்திணறல், நுரையீரல்கள் பாதிப்பு ஏற்படக்கூடும். மேலும் நிமோனியா, நுரையீரல்கள் செயலிழப்பு, அதன் காரணமாக இதயம், சிறுநீரகம், கருப்பை உள்பட்ட மற்ற உறுப்புகள் பாதிப்பு ஏற்படலாம். அத்துடன் குறைப்பிரசவம், வயிற்றுக்குள் குழந்தை இறக்க நேரிடுதல், அதீத ரத்தப்போக்கு, சமயங்களில் மகப்பேறு உயிரிழப்பு போன்ற பலவிதமான பாதிப்புகளையும் சந்திக்க நேரிடவும் வாய்ப்பிருக்கிறது.

இத்தகைய காரணங்களினால்தான் இரு உயிர்களையும் காத்திட கர்ப்பகாலத்தில் இந்தத் தடுப்பூசிகள் மிகவும் அவசியமாகிறது.

இவற்றுள் ஃப்ளூ தடுப்பூசியானது, நோய்த்தொற்று அதிகமுள்ள இடங்களிலும், மற்றும் மாறும் காலநிலைக்கேற்பவும் (செப்டம்பர், அக்டோபர் போன்ற மழை மாதங்கள்) ஒருமுறை மட்டும், கர்ப்பகாலத்தில் வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் இது தற்சமயம் வழங்கப்படுவதில்லை என்றாலும், தனியார் மையங்களில் இந்தத் தடுப்பூசி வழங்கப்படுகிறது. குறிப்பாக மேற்கத்திய நாடுகள் அனைத்திலும், கர்ப்பகாலத்தில் இந்தத் தடுப்பூசி அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

ஆரம்பத்தில் ஃப்ளூ தடுப்பூசி மட்டும்தான் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்குவது வழக்கமாக இருந்தது. கடந்த இரண்டு வருடங்களாக கோவிட் எனும் நோய் அரக்கன் இந்த உலகத்தையே தலைகீழாகப் புரட்டிப் போட்டது. இது வயதானவர்கள், வாழ்க்கை முறை நோயுடன் இருந்தவர்கள், நோயெதிர்ப்புத் திறன் குறைந்தவர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் என அனைவரையும் தாக்கியது போலவே, கர்ப்பிணிப் பெண்களையும், அவர் வயிற்றுக்குள் வளர்ந்து கொண்டிருந்த சிசுக்களையும் பாதிக்கத் தொடங்கியபோதுதான் கோவிட் தடுப்பூசி வழங்குவதன் அவசியமும் உடன் சேர்ந்தது.

உண்மையில், இந்தியாவில் வழங்கப்படும் 'கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின்' ஆகிய இரு ஊசிகளும், கர்ப்பகாலத்திலும், பாலூட்டும் போதும் பாதுகாப்பானவையே. சரியான இடைவெளிகளில் இரண்டு முறை, கோவிஷீல்ட் அல்லது கோவேக்சின் என, அதே தடுப்பூசியை மருத்துவரின் ஆலோசனையுடன் கர்ப்பிணிப் பெண் செலுத்திக் கொள்வது நல்லது.

ஏற்கெனவே இரண்டு முறை தடுப்பூசி செலுத்தியுள்ளவர்கள் கர்ப்பம் தரித்தால், மற்ற அனைவருக்கும் போலவே 'பூஸ்டர் ஊசி' சரியான இடைவெளியில் இவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இனிவரும் காலங்களில் கோவிட் தடுப்பூசியின் அவசியம் குறைந்து போகலாம் என்றாலும், இப்போதைய சூழலில் தாய்-சேய் பாதுகாப்பு கருதி, கோவிட் தடுப்பூசியை ஏற்றுக்கொள்வது அவசியமாகிறது. பொதுவாக, தடுப்பூசிகள் வழங்கப்பட்ட இடத்தில் ஓரிரு நாட்கள் வலி ஏற்படுவதுடன், லேசான காய்ச்சல், உடல்வலி, சோர்வு ஆகியன கர்ப்பகாலத்திலும் தோன்றக் கூடும். தேவைப்படும்போது மருத்துவ ஆலோசனை பெறுவதும் அவசியம். இவற்றை கர்ப்பிணிப் பெண்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

மொத்தத்தில், டிடி, டிடேப், ஹெபடைடிஸ் பி, ஃப்ளூ வேக்சின், கோவிட் வேக்சின் என, கர்ப்பகாலத்தில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகள் அனைத்தும் அவசியமே.

Related Stories

No stories found.