
ஏற்கெனவே டி.டி தடுப்பூசியின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பார்த்திருந்த நமக்கு, தடுப்பூசிகள் தயாரிப்பு குறித்த இந்தப் புரிதலுடன் கர்ப்பகாலத்தில் வழங்கப்படும் இதர தடுப்பூசிகளின் முக்கியத்துவத்தை அறிவதும் இங்கு அவசியமாகிறது என்பதோடு கடந்த வாரம் முடித்தோம்.
இதர தடுப்பூசிகள் எனும்போது முதலாம் முக்கியத் தடுப்பூசி, ஹெபடைடிஸ் பி எனப்படும் காமாலை பி தடுப்பூசி. கல்லீரலைத் தாக்குவதால் காமாலை நோயில் தொடங்கி, அதன்பின் நாள்பட்ட கல்லீரல் நோய், கல்லீரல் புற்றுநோய் ஆகியவற்றை ஏற்படுத்திவிடும். ஒருசிலரில் கல்லீரல் செயலிழப்பு, கோமா, மரணம்வரை ஏற்படுத்தக்கூடிய இந்த ஹெபடைடிஸ் பி வகை வைரஸ் கிருமிகள், ரத்தம் மற்றும் உடலின் திரவங்கள் மூலமாகப் பரவக் கூடியது. அதிலும் சுத்திகரிக்கப்படாத ஊசிகள், பாதுகாப்பற்ற ரத்த சம்பந்தமான பொருட்கள், போதை ஊசி மருந்துகள் ஆகியவற்றின் மூலமாகப் பரவும் இந்த வைரஸ்கள் ஏற்படுத்தும் ஹெபடைடிஸ் நோயால் நமது நாட்டில் மட்டுமே ஏறத்தாழ 4.5 கோடி மக்கள் பாதிப்படைகின்றனர் என்கிறது புள்ளிவிவரங்கள்.
மேலும், இவர்களில் ஒரு கோடிக்கும் மேலானவர்களுக்குத் தீவிர பாதிப்பு ஏற்படுகிறது. இதில் பிறந்த குழந்தைகளும் அடக்கம். ஏறத்தாழ 80-90 சதவீத குழந்தைகளுக்கு, முதல் வருடத்திலேயே நாள்பட்ட கல்லீரல் நோய் ஏற்படவும், 30-50 சதவீதம் வரையான குழந்தைகளுக்கு cirrhosis என்ற கல்லீரல் சுருக்கம் மற்றும் புற்றுநோய் தோன்றவும் வாய்ப்புள்ளது என்றும் அதிர்ச்சியூட்டும் பல தகவல்களை அளிக்கிறது இந்தப் புள்ளிவிவரம்.
ஹெபடைடிஸ் பி நோயால் தாக்கப்பட்ட தாயிடமிருந்து பிரசவத்தின்போது குழந்தைக்கு (vertical transmission) பரவுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். ஆகவே கருவுற்ற தாய்க்கு நோய்த்தடுப்பு இங்கு மிகவும் அவசியமாகிறது. இதன் காரணமாகவே, கர்ப்பிணிப் பெண்கள் அனைவருக்கும் ஹெபடைடிஸ் பி ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கூடவே ஹெபடைடிஸ் பி தடுப்பூசியும் பரிந்துரைக்கப்படுகிறது. ஏற்கெனவே ஐந்து வருடங்களுக்குள் ஹெபடைடிஸ் பி தடுப்பூசி போட்டுள்ளவர்களுக்கு ஒரே ஒரு பூஸ்டர் ஊசியும், போடாதவர்களுக்கு 0, 1, 6 என்ற மாத இடைவெளிகளில் மூன்று முறையும் இந்தத் தடுப்பூசி வழங்கப்படுகிறது.
தற்சமயம் அரசு மருத்துவமனைகளில் இது வழங்கப்படுவதில்லை என்றாலும், பெரும்பான்மையான தனியார் மையங்களில் இது வழங்கப்படுகிறது. மேலும், ஹெபடைடிஸ் பி தடுப்பூசி கர்ப்பகாலத்தில் தாய்க்கு வழங்கப்பட்டிருந்தாலும், அந்த நோயெதிர்ப்பு பிறந்த குழந்தையைச் சென்றடைவதில்லை. ஆகையால் குழந்தை பிறந்தவுடன் birth dose எனப்படும் முதல் தடுப்பூசியும், பின்னர் அட்டவணைப்படியும் குழந்தைகளுக்கு இது முறையாக வழங்கப்படுகிறது. அதேசமயம், ஹெபடைடிஸ் பி நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு, நோயின் தன்மை பொறுத்து ஆன்டி வைரல் மருந்துகள் வழங்கப்படுகிறது. குழந்தைக்குப் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, தடுப்பூசி மற்றும் ஹெபடைடிஸ் பி இம்யூனோ-க்ளோபின்கள் குழந்தை பிறந்தவுடன் வழங்கப்படுகிறது.
ஆக, நமக்கு ஏற்கெனவே தெரிந்த இந்த subunit/component வகையைச் சேர்ந்த ஹெபடைடிஸ் பி தடுப்பூசியானது தாய்க்கு செலுத்தப்படும்போது அது குழந்தைக்கு எதிர்ப்பு சக்தியைத் தராவிட்டாலும் கர்ப்பகாலத்திலும், பிரசவத்தின் போதும் தாய்க்கு நோய் வராமல் தடுத்துவிடுகிறது. ரத்தம் மூலமோ மற்ற வழியிலோ குழந்தைக்கு நோய் வராமல் தடுக்கும் என்பதால்தான், இந்த ஹெபடைடிஸ் பி தடுப்பூசி, கர்ப்பகாலத்தில் முக்கியத்துவம் அடைகிறது.
(நம்பிக்கைகள் தொடரும்)
கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com