அடா லவ்லேஸ்: உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர்!

அடா லவ்லேஸ்: உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர்!

கம்ப்யூட்டரின் தந்தை யார் என்று கேட்டால், பள்ளியில் படிக்கும் குழந்தைகூட சட்டென்று சொல்லிவிடும்.. ‘சார்லஸ் பாபேஜ்’ என்று. இந்த சார்லஸ் பாபேஜுக்கு நிகரான புகழுக்கு உரியவர் ‘அடா லவ்லேஸ்‘ என்ற பெண்மணி. சார்லஸ் பாபேஜ் உருவாக்கிய கம்ப்யூட்டரின் ஆதி வடிவத்துக்கு அடிப்படையான முதல் நிரலை உருவாக்கியவர்தான் அடா லவ்லேஸ்.

உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர் ஒரு பெண் என்ற காரணத்தினாலே, மிகவும் தாமதமாக அடையாளம் கண்டு அவரை இந்த உலகம் கொண்டாடத் தொடங்கியது. அதன் வருடாந்திர அடையாளமான ‘அடா லவ்லேஸ் தினம்’ இன்று கொண்டாடப்படுகிறது.

அன்றாடத்தில் பிணைந்திருக்கும் கணினி

கம்ப்யூட்டர் என்ற வஸ்துவைத் தவிர்த்துவிட்டு, இன்றைய அன்றாடத்தை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது அந்த அளவுக்கு நம் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் அது பின்னிப் பிணைந்திருக்கிறது. கடந்த தலைமுறைவரை தனி கருவியாகப் பழகி வந்த கம்ப்யூட்டர், இன்று எல்லா பயன்பாடுகளிலும் கரைந்துபோயிருக்கிறது. கம்ப்யூட்டரின் நுட்பங்கள், அதன் எளிய நிரல்கள் இல்லாத உபகரணங்களை இன்று விரல்விட்டு எண்ணிவிடலாம். கம்ப்யூட்டரின் இந்த மாயாஜால சாதனைக்கு, அதனது ஹார்ட்வேர் கட்டமைப்பு எவ்வளவு முக்கியமானதோ அதற்கு நிகரானது, அந்தக் கம்யூட்டரைப் பயன்படுத்துவோரின் தேவையை நுணுக்கமாக நிறைவேற்றும் சாஃப்ட்வேர்! இந்த சாஃப்ட்வேரில், இன்று வகைதொகையாய் நாம் அடைந்திருக்கும் உயரத்துக்கு வித்திட்டவர்தான் அடா லவ்லேஸ்.

கணினி நிரல்களுக்கு அடித்தளம் தந்தவர்

ஒரு சிறு உதாரணமாக, இந்தக் கட்டுரை தட்டச்சு செய்யப்படும் கணினியில் தொடங்கி மறுமுனையில் அதை வாசிப்பவர் உபயோகிக்கும் சாதனம், இடையில் அவற்றைச் சாத்தியமாக்கும் எண்ணற்ற மென்பொருட்கள், அதையெல்லாம் ஒருங்கிணைக்கும் வலைப்பின்னல்கள்... என இந்த ஒற்றை உபயோகத்தில் மட்டுமே எத்தனை நிரல்கள் அலையடித்துக்கொண்டிருக்கின்றன என்பதைச் சற்று உற்று கவனித்தால், கணினி நிரல்களின் பிரம்மாண்டம் புரியும். இன்னும் வர்த்தகம், பங்குச் சந்தை, போக்குவரத்து, மருத்துவம் எனப் பல்வேறு துறைகளில் பாய்ச்சல் காட்டிவரும் இன்றைய கணினி நிரல்களுக்கு, சுமார் 200 வருடங்களுக்கு முன்பே அடா அடித்தளம் தந்திருக்கிறார்.

கவிஞர் பைரன்
கவிஞர் பைரன்

வித்தில் ஊறிய கற்பனை

அடா லவ்லேஸின் தந்தை புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர் பைரன். உலகமகா படைப்பாளர்களின் மண வாழ்க்கை உடைந்துபோவதன் வரிசையில், கவிஞர் பைரனும் அடக்கம். பெற்றோர் விவாகரத்தால், தாய் இஸபெல்லாவின் வசம் அடா லவ்லேஸ் வளரத் தொடங்கினார். அடாவைப் பார்க்கும்போதெல்லாம் அவர் தாய்க்குக் கணவர் மீதான கோபம் கரைபுரண்டெழும். அப்பாவைப் போல பெண்ணும் இலக்கியத்தில் விழுந்துவிடக் கூடாது என்பதில் தாய் கவனமாக இருந்தார். இலக்கியத்தின் சுவடும் தந்தை பைரனின் அடையாளமும் வீட்டில் இல்லாது பார்த்துக்கொண்டார் இஸபெல்லா. ஆனால் வித்தில் தொடங்கி ரத்தத்தில் ஊறியது வரை உள்ளுக்குள் திளைத்திருக்கும் அப்பாவை அப்படி எளிதில் பிரித்துவிட முடியுமா? இலக்கியத்துக்கு எதிர்திசை என அறிவியல் மற்றும் கணிதத்தைப் பிரதானமாகக் கொண்ட படிப்புகள் மகளுக்குக் கிடைக்குமாறு இஸபெல்லா பார்த்துக்கொண்டார். ஆனால், அடாவின் கவிதை மனம் அந்த அறிவியல்-கணிதத்திலும் கற்பனையை சிருஷ்டிக்கத் தொடங்கியது.

அடா லவ்லேஸ்
அடா லவ்லேஸ்

முடங்கிய பட்டாம்பூச்சியின் கனவுகள்

பிறந்த சில நாட்களிலேயே பிரிந்து சென்ற தந்தை பைரனை, மகள் அடா அதன் பிறகு தரிசித்ததே இல்லை. தந்தை இல்லாத இடத்தை நிரப்ப வேண்டிய தாயும் கணவன் மீதான தாங்கலில் மகளை விட்டேத்தியாய் நடத்தினார். தந்தை, தாய் அரவணைப்பின்றி பாட்டி ஜூடித் பராமரிப்பில் அடா வளரத் தொடங்கினார். அவரது பாசத்துக்கான ஏக்கமும் தவிப்பும் பிஞ்சு உடலைப் பாதிக்க ஆரம்பித்தது. அடிக்கடி நோயில் விழுவார். எழுந்த பிறகும் அதற்கான அடையாளமின்றி தனிமையில் துவண்டு கிடப்பார். பட்டாம்பூச்சியாய் சிறகடிக்க வேண்டிய பதின்மத்தின் தொடக்கத்தில் தட்டமை தாக்கியபோது, வாதம் வந்து படுத்த படுக்கையானார். அந்தப் படுக்கைவசமான காலம் அவரது மிச்ச வாழ்க்கை உயரப் பறக்க காரணமானது. தனிமையும், நோய்மையும் தந்த அழுத்தத்திலிருந்து விடுபட கனவுலகத்தில் சஞ்சரிக்க ஆரம்பித்தார். கற்பனையின் கதவுகளை அகலத் திறந்துவிட்டவருக்குப் புதிய தரிசனங்கள் கிடைக்க ஆரம்பித்தன. அவற்றுக்கெல்லாம் தான் பயிலும் அறிவியல் மற்றும் கணிதத்தின் அடிப்படையில் உரு கொடுக்க ஆரம்பித்தார்.

ஆகாயம் முதல் ஆழ்கடல் வரை

தன்னைச் சதா சிறைப்படுத்தும் படுக்கையிலிருந்து விடுபடும் ஆவலில், பறக்கும் இயந்திரம் ஒன்றை உருவாக்குவதற்கான குறிப்புகளை எழுதினார். அந்த இயந்திரத்தின் இறக்கைகள் எப்படி அமைய வேண்டும், சமகால அறிவியல் வளர்ச்சியான நீராவியின் துணையால் அது இயங்குவது என படிப்படியாகப் பறக்கும் எந்திரத்துக்கு உயிர் கொடுத்தார். வானத்தில் பறக்கும் இந்த இயந்திரத்தின் நுட்பங்களை நீரில் மிதக்கும் உபகரணத்துக்கு உதவினால் எப்படி இருக்கும் என்பதற்கும் குறிப்புகளை உருவாக்கினார். நவீன விமானங்கள் மற்றும் படகுகள் வடிவமைப்பில் அன்றைக்கு அடா உருவாக்கிய குறிப்புகள், இன்றைக்கும் பயனாகிறது என்றால் நம்ப முடிகிறதா? இறைத்தூதர்கள், சித்தர்களுக்குக் கிடைத்த சித்திக்கு நிகரான அனுபவம், நோயிலும், தனிமையிலும் துவண்ட சிறுமிக்கு வாய்த்ததாக இன்று அடாவை அடையாளம் காண்கிறார்கள்.

குணமாக்கிய வாசிப்பு

நிஜத்தில் தொழில் புரட்சி காலத்தில் வெளியான அறிவியல் பத்திரிகைகளே, அடாவுக்கு உறுதுணை செய்திருக்கின்றன. எதை வாசிக்க நேர்ந்தாலும் அதில் வெளியான கருத்துகளுடன், தான் உள்வாங்கி செரித்த அனுபவத்தையும் செறிவான குறிப்புகளாக்கி எழுதிவைக்கும் பழக்கம் அடாவிடம் இருந்தது. பின்னாளில் கம்ப்யூட்டருக்கான அல்காரிதம் எழுத நேரிட்டபோது, அந்தக் குறிப்புகள் எழுதிய அனுபவமும், அவற்றின் உள்ளடக்கமுமே உதவின. நேசிப்புக்குரிய வாசிப்பே அடாவைப் படிப்படியாகக் குணமாக்க, அதன் பிறகு முழுமூச்சில் அவர் பாடம்பயில ஆரம்பித்தபோது, பழகிய அறிவியல் கணிதத்தின் மீது பெரும் பாய்ச்சல் நிகழ்த்தினார். தனது தேடலுக்கும் படிக்கும் பாடங்களுக்கும் இடையிலான பள்ளத்தை நிரப்புவதற்காகப் புதுப்புது தேடல்களையும் பாடங்களையும் கண்டடைந்தார்.

அடா மற்றும் பாபேஜ் -சித்தரிப்பு படம்
அடா மற்றும் பாபேஜ் -சித்தரிப்பு படம்

பாபேஜூடன் சந்திப்பு

ஆதி கம்ப்யூட்டர் என்பது பல பொறிகளின் கூட்டிணைப்பில் பெரிய அறை ஒன்றை ஆக்கிரமித்த வடிவில் இருந்தது. புரவலர்கள் சிலரின் ஆதரவுடன் ’டிஃபரன்ஸ் எஞ்சின்’ மற்றும் ’அனலிடிக்கல் எஞ்சின்’ ஆகிய பொறிகளை வடிவமைப்பதில் பல்கலைக்கழகப் பேராசிரியரான சார்லஸ் பாபேஜ் மும்முரமாக இருந்தார். பாபேஜ் நண்பரும் அடா லவ்லேஸின் ஆசிரியருமான மேரி சோமர்வில்லே, இருவர் சந்திப்புக்கும் உறுதுணையாக இருந்தார். கணிதத்தின் மீதான அடாவின் ஆர்வம், பாபேஜையும் ஈர்த்தது. தான் உருவாக்கிவந்த கணிதப் பொறியின்படி நிலைகள் மற்றும் அதன் உருவாக்கலுக்கான சவால்களை பாபேஜ் விளக்கினார். அதன்படி பாபேஜின் அனலிட்டிக் எஞ்சினுக்காக, இத்தாலிய ராணுவப் பொறியியலாளர் லூய்கி மெனாப்ரே எழுதிய கட்டுரையை எந்திர மொழியாக்கும் பணியை அடா தொடங்கினார். பெர்னௌலி எண்களை அடிப்படையாகக் கொண்டு அவர் உருவாக்கிய நிரல்கள், லூய்கி கட்டுரையின் ஆதார நிலையைவிட மேம்பட்டதாகவும், பாபேஜ் சவால்களை எளிமையாக்கும் வகையிலும் இருந்தன.

அனலிட்டிக் எஞ்சின் உடன் அடா. சித்தரிப்பு படம்.
அனலிட்டிக் எஞ்சின் உடன் அடா. சித்தரிப்பு படம்.
வரலாறு போலவே அறிவியல் உலகமும் ஆண்களின் பிடியிலேயே இருந்தது. சார்லஸ் பாபேஜூக்கு நிகரான உழைப்பை அடா லவ்லேஸ் மேற்கொண்டபோதும் பல ஆண்டுகளாக அவர் மறக்கடிக்கப்பட்டிருந்தார்.

மறக்கடிக்கப்பட்ட அடா

வரலாறு போலவே அறிவியல் உலகமும் ஆண்களின் பிடியிலேயே இருந்தது. சார்லஸ் பாபேஜூக்கு நிகரான உழைப்பை அடா லவ்லேஸ் மேற்கொண்டபோதும் பல ஆண்டுகளாக அவர் மறக்கடிக்கப்பட்டிருந்தார். 1940-களில் ஜீன் ஜென்னிங்ஸ் பார்டிக், கிரேஸ் ஹாப்பர் என பின்னாளைய கணினிக்கான நிரலாளர்களான பெண்களை உலகம் அடையாளம் கண்டபோது, அவர்களின் முன்னோடியான அடா லவ்லேஸ் வெளிச்சத்துக்கு வந்தார். கணித மேதை ராமானுஜத்தின் கணிதப் புதிர்கள் இன்றைக்கும் கணிதவியலாளர்களின் ஆய்வில் தொடர்வது போல, அடாவின் அறிவியல் குறிப்புகளின் அடிப்படையிலான ஆராய்ச்சிகள் சமகாலத்தில் நடைபெற்றுவருகின்றன. அடாவை கவுரவிக்கும் வகையில், அமெரிக்க ராணுவம் உருவாக்கிய கணினி மொழிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

சித்தரிப்பு படம்
சித்தரிப்பு படம்

இசையிலும் வசமானவர்

அறிவியல் மற்றும் கணிதத்துக்கு அடுத்து அடா இசையை அதிகம் நேசித்தார். கணிப்பொறி நிரல்கள் மூலமாக இசையைக் கோக்க முடியும் என நூறாண்டுக்குப் பிந்தைய கண்டுபிடிப்பை, அன்றே அவர் முன்மொழிந்திருந்தார். ஆனால், அப்போது கேட்பார்தான் இல்லை. அதேபோல இன்றைய நவீன கணிப்பொறியியலின் ஆதர்ச ஆய்வான ’செயற்கை நுண்ணறிவு’ குறித்தும் அவரது குறிப்புகள் வியப்புக்கு உரியவை.

அடாவின் வாழ்நாள் முழுவதும் கவனிக்கப்படாமல் இருந்த குறிப்புகள், இன்று விதந்தோதப்படுகின்றன. கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்கள் பல தலைமுறைகள் தாண்டிய பிறகே அடாவின் அன்றைய கூற்றுகள், கருதுகோள்கள் ஆராய்ந்து சிலாகிக்கப்படுகின்றன. இத்தனைக்கும் அனலிடிக் எஞ்சின் எனப்படும் பகுப்பாய்வு பொறிக்கான நிரல்களை உருவாக்கியபோது அடாவின் வயது 18 மட்டுமே!

சாவில் தந்தையைக் கண்டடைந்தார்

கணிதம், அறிவியல், இசை ஆகியவை அடாவின் நேசிப்புக்கு உரியவை என்றபோதும் அதற்கும் மேலாக, தனது வாழ்நாளில் காண வாய்த்திராத தந்தை பைரனை வெகுவாய் நேசித்தார். அடா ஒரு மாதக் குழந்தையாக இருந்தபோது அவரது பெற்றோர் விவகாரத்து பெற்றனர். 4-வது மாதம் பிரிட்டனைவிட்டே பைரன் வெளியேறி இருந்தார். அடா தனது 8 வயதில், தான் தரிசித்திராத தந்தையின் இறப்பைக் கேள்வியுற்றார். அதன் பின்னர் வளர்ந்து 20 வயதில் சொந்தக் காலிலும் அறிவிலும் சுயமாய் சுழல ஆரம்பித்தபோது, தந்தையின் முகத்தைத் தேடி ஒரு ஓவியமாகக் கண்டடைந்தார்.

படிப்பு, அறிவியல் கண்டுபிடிப்பு, 3 குழந்தைகளுடனான குடும்பம் என வாழ்க்கைப் பயணம் நெடுக தனது தந்தை உடனிருப்பதாக அடா உணர்ந்தார். அடாவின் தந்தை பைரன், தனது 36-வது வயதில் காலமானார். அதேபோல், 36-வது வயதிலேயே அடா லவ்லேஸும் கண் மூடினார். புற்றுநோய் அவரது உயிரைப் பறித்துக்கொண்டது. அவரது விருப்பப்படியே, அப்பா பைரனின் கல்லறை அருகிலேயே அடாவும் அடக்கம் செய்யப்பட்டார்.

அடா லவ்லேஸ் தினம்
அடா லவ்லேஸ் தினம்

இன்று அடா லவ்லேஸ் தினம்!

தொழில்நுட்ப உலகில் பாலினப் பாகுபாட்டினால் மறக்கடிக்கப்படும் பெண் வல்லுநர்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஒன்றாக, அடா லவ்லேஸ் இன்று நினைவுகூரப்படுகிறார். சுவ் சர்மன் ஆண்டர்சன் என்பவரது முன்னெடுப்பில், 2009 முதல் ஆண்டுதோறும் அக்டோபர் 2-வது செவ்வாயன்று அடா லவ்லேஸ் தினம் சிறப்பிக்கப்படுகிறது.

இதற்காக அவர் பிறந்த தினத்துக்கு (1815 டிசம்பர் 10) மாறாக ஒரு பொதுவான தினம் உருவாக்கப்பட்டது. கணிதம், பொறியியல், அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் சாதித்த ஒட்டுமொத்த பெண் சாதனையாளர்களை இந்த ‘அடா லவ்லேஸ் தினத்’தின் பெயரால் உலகம் நினைவுகூர்ந்து போற்றுகிறது.

Related Stories

No stories found.