கோவையில் திருமணத்திற்குப் பின்னர் மாட்டு வண்டியில் உற்சாகமாக பயணித்த தம்பதிகளுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ப்ரீவெட்டிங் மற்றும் போஸ்ட் வெட்டிங் போட்டோ ஷூட் என்பது தற்போது தவிர்க்க இயலாத நிகழ்வுகளில் ஒன்றாக மாறிவிட்டது. வித்தியாசமான முறையில் எடுக்கப்படும் இந்த புகைப்படங்கள், வீடியோக்களுக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
சமீபகாலமாக இந்தியாவிலும் இது போன்ற வெட்டிங் ஷூட்கள் பரவலாகி வருகிறது. புதிதாக திருமணம் செய்வோர், வித்தியாசமான முறையில் போட்டோக்களை எடுத்து குவிக்க ஆர்வம் காட்டுகின்றனர். சிலர், பாரம்பரிய முறைப்படி, திருமண நாளில் மாட்டுவண்டி, குதிரை வண்டிகளில் பயணிப்பது போன்றவற்றில் ஈடுபட்டு, தங்கள் வாழ்நாளில் நிகழும் முக்கிய நிகழ்வான திருமணத்தை மறக்கவே முடியாத நாளாக மாற்ற முயற்சிக்கின்றனர்.
அந்த வகையில் கோவையில், திருமணம் முடிந்ததும், மாட்டுவண்டியில் ஊர்வலமாக வீட்டிற்கு சென்ற தம்பதிகளின் செயல், கவனத்தை ஈர்த்து வருகிறது.
முகூர்த்த நாள் என்பதால் கோவை ஈச்சனாரி கோயிலில் நேற்று பல திருமணங்கள் நடைபெற்றன. இதில் கோவை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும், பௌதாரணி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பின்னர், வித்தியாசமான முறையில் ஊர்வலம் செல்ல தம்பதிகள் முடிவு செய்தனர்.
இதனையடுத்து புதுமண தம்பதிகள் மாட்டு வண்டியில் செட்டிபாளையத்தில் உள்ள ஆனந்த் வீட்டுக்கு, ஈச்சனாரி கோயிலில் இருந்து மாட்டுவண்டியில் சென்றனர். மாட்டு வண்டியில் சென்ற புதுமண தம்பதியினரை, சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் ஆச்சரியமாக பார்த்தனர் .
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, அவர்களுக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.