பார்வையற்றோர் வாழ்வில் ஒளியேற்றிய பிரெய்லி

ஜன.4: உலக பிரெய்லி தினம்
பார்வையற்றோர் வாழ்வில் ஒளியேற்றிய பிரெய்லி

பார்வையற்றோர் மற்றும் பார்வைத் திறன் குறைந்தோரும், மற்றவர்களைப் போல இயல்பாக எழுதப் படிக்க முடியுமா? 2 நூற்றாண்டுகளுக்கு முன்னர் பிறந்த லூயிஸ் பிரெய்லி, இந்த சவாலை சாத்தியமாக்கினார். பிரான்ஸை சேர்ந்த இவரின் பிறந்தநாளையே ‘பிரெய்லி தினமாக’ இன்று(ஜன.4) உலகம் அனுசரிக்கிறது.

1809ல் பிறந்த லூயிஸ் பிரெய்லி, பிறவியிலேயே பார்வையற்றவர் அல்ல. குழந்தை பிராயத்தில் அவர் எதிர்கொண்ட விபரீத விளையாட்டு, அடுத்தடுத்து இரு கண்களின் பார்வையையும் பறித்தது. முழுமையான பார்வைத் திறனுடன் பிறந்தவர், திடீரென பார்வையை இழந்ததன் வேதனையை அவர் உணர்ந்தார். இதனால் மீண்டும் பார்வையை மீளப்பெற வேண்டும் அல்லது அதற்கு இணையான வாய்ப்புகளை பெற வேண்டும் என்பதில் இளம் வயது முதலே தீரா ஆர்வம் கொண்டிருந்தார்.

பார்வையற்றோருக்கான பள்ளியில் லூயிஸ் சேர்க்கப்பட்டபோதும், அங்கே பார்வையற்றோர் பயிலும் வகையிலான சிறப்பு எழுத்துகளோ, எழுதப் படிக்கும் முறைகளோ அப்போது இல்லை. இதனால் லூயிஸ் பிரெய்லி உள்ளிட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் கடும் இன்னலுக்கு ஆளானார்கள். அப்போது ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ரகசியக் குறியீட்டு முறையான கிரிப்டோகிராஃபி குறித்து பிரெய்லி அறிந்தார். அந்த முறையில் வாசிப்பதும், எழுதுவதும் தனக்கு இயல்பாக கூடி வந்ததை அறிந்து ஆனந்தமடைந்தார்.

பார்வையற்ற சக மாணவர்களுக்கு அந்த எழுத்துக்கள் மற்றும் வாசிப்பு குறித்து பிரெய்லி எடுத்துச் சொன்னபோது அவருக்கு வயது 15. தீவிர ஆராய்ச்சி மற்றும் கடுமையான உழைப்பின் பயனால், உலகின் முதல் பார்வையற்றோர் எழுத்துக்களை உருவாக்கினார் பிரெய்லி. 20 வயதில் அவரது கண்டுபிடிப்பு பிரான்சில் பார்வையற்றோர் மத்தியில் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. தடித்த புள்ளிகளை விரலால் தொட்டுத் துலங்குவதன் மூலம், பல்வேறு பாடங்களையும் கற்க பிரெய்லி எழுத்துக்கள் உதவ ஆரம்பித்தன.

லூயிஸ் நினைவை போற்றும் வகையில் இந்தியா வெளியிட்ட அஞ்சல் தலை
லூயிஸ் நினைவை போற்றும் வகையில் இந்தியா வெளியிட்ட அஞ்சல் தலை

காப்பிரைட் பிரச்சினைகளால் பிரான்ஸில் லூயிஸ் பிரெய்லி உருவாக்கிய பிரெய்லி எழுத்து முறைகள் உலகமெங்கும் பரவுவதில் தடைகள் எழுந்ததன. தன்னார்வ அமைப்புகளின் உதவியால், அந்த தடைகள் உடைக்கப்பட்டதில் பிரான்சுக்கு அப்பாலும் பிரெய்லி புரட்சி பரவியது. இன்று தமிழ் உட்பட உலகின் பெரும்பாலான மொழிகளில் பிரெய்லி மூலம் அறிவுக் கண்கள் மலர்ந்த பார்வையற்றோர் அதிகம். சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் மட்டும் சுமார் 2500 பிரெய்லி நூல்கள் உள்ளன.

லூயிஸ் பிறந்ததினத்தை நன்றியோடு உலக பிரெய்லி தினமாக பார்வையற்றோர் கொண்டாடுகிறார்கள். பிரெய்லி எழுத்துக்கும் அப்பால், பார்வையற்றோர் குறித்த விழிப்புணர்வுக்காகவும், அவர்களுக்கான இடையூறுகளை கடப்பதற்கு உதவியாகவும் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு, அரசு சாரா அமைப்புகள் மட்டுமன்றி தனிமனிதர்களும் இன்றைய தினத்தில் இதன்பொருட்டு ஓரடி எடுத்துவைக்க முற்படுவோம்.

இந்த உலகம் அனைவருக்குமானது.

Related Stories

No stories found.