‘ஷாக்’ கொடுத்த மின்சார சட்டத்திருத்த மசோதா!

சர்ச்சையின் பின்னணி என்ன?
‘ஷாக்’ கொடுத்த மின்சார சட்டத்திருத்த மசோதா!

கடந்த சில ஆண்டுகளாக பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டுவரும் சில மசோதாக்கள் பல்வேறு தரப்பிலிருந்தும் பலத்த எதிர்ப்பைச் சந்திக்கின்றன. அந்தப் பட்டியலில் புதிதாகச் சேர்ந்திருக்கிறது மின்சார சட்டத்திருத்த மசோதா(2022).

இது மாநில உரிமையில் கைவைக்கும் சட்டம் என எதிர்க்கட்சிகளும், மானியத்தில் கைவைக்கும் சட்டம் என விவசாயிகளும், தங்கள் வேலைக்கே உலைவைக்கும் சட்டம் என மின்வாரிய ஊழியர்களுமாகப் பல்வேறு தரப்பினரைப் பதறவைத்திருக்கிறது இந்தச் சட்டம். என்ன சொல்கிறது சட்டம்? ஏன் இந்த எதிர்ப்பு?

முதலில் ஒரு சின்ன விளக்கத்தைப் பார்த்துவிடலாம். நீங்கள் செல்போன் பயன்படுத்துகிறீர்கள் அல்லவா? பெரும்பாலும் பிஎஸ்என்எல் சேவை சரியாகக் கிடைப்பதில்லை என்று தனியார் செல்போன் நிறுவனங்களையே நாடுவீர்கள். உங்களுக்குக் கட்டுப்படியாகும் வகையில் கட்டணங்களை விதிக்கும் செல்போன் நிறுவனங்களின் சேவையைத் தேர்ந்தெடுப்பீர்கள். ஒருகட்டத்தில் அந்நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தினாலும் வேறு வழியின்றி அதையே தொடரும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.

ஏறத்தாழ இதே நடைமுறை தனியார் மின் விநியோக நிறுவனங்கள் விஷயத்திலும் அமலானால் என்னவாகும்? தனியார் நிறுவனங்கள் லாபத்தை மனதில் வைத்து, அதிகக் கட்டணம் வசூலித்தால் நம் கதி என்ன? இந்தக் கேள்விகள் எல்லாம் இப்போது சாமானியர்கள், விவசாயிகள் மனதில் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. இதைத் தாண்டி இன்னும் பல சிக்கல்களும் இந்த மசோதாவில் உண்டு. அவற்றைப் பார்க்கலாம்.

அறிமுகமும் ஆட்சேபமும்

ஆகஸ்ட் 8-ம் தேதி மக்களவையில் மின்சார சட்டத்திருத்த மசோதாவை மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தாக்கல் செய்தார். இது மக்களுக்கு நன்மை செய்வதற்காகக் கொண்டுவரப்படும் சட்டத்திருத்த மசோதா என்றும் அவர் உறுதியளித்தார். மானியங்கள் நிறுத்தப்படாது என்றும் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் சூழல் உருவாகாது என்றும் கூறினார். ஆனால், இந்த மசோதா சட்டவடிவம் பெற்று அமல்படுத்தப்பட்டால் இதெல்லாம் தொடருமா எனும் கேள்விக்குத்தான் உறுதியான பதில் இல்லை.

மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங்
மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங்

எதிர்பார்த்தது போலவே இந்த மசோதாவைக் கண்டித்து தமிழகம், தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். விவசாயிகளும் இந்த மசோதாவைக் கடுமையாக எதிர்க்கின்றனர். பஞ்சாபில் விவசாயிகள் இம்மசோதாவின் நகலை எரித்து தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்தனர். காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, சிரோமணி அகாலி தளம் போன்ற பல கட்சிகள் இம்மசோதாவைக் கடுமையாக எதிர்க்கின்றன. இதையடுத்து நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு இந்த மசோதாவை அனுப்பியிருக்கிறது மத்திய அரசு. நிலைக்குழுவில் இந்த மசோதாவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு மீண்டும் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னணி என்ன?

வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில், 2003-ல் முதன்முறையாக மின்சார சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. மின்னுற்பத்தி, விநியோகம், வர்த்தகம், மின்சாரப் பயன்பாடு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக இருந்த சட்டங்களை ஒருங்கிணைத்து ஒரே சட்டமாக்குவது அதன் முதன்மையான நோக்கம். அதன்படி, மின்னுற்பத்தியில் தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் பங்கெடுக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், மின் விநியோகம் பெரும்பாலும் அரசு நிறுவனங்களின் கையிலேயே இருந்துவந்தது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில், 2007-ல் மீண்டும் அதில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. அப்போது இடதுசாரிக் கட்சிகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, ஏழை மக்களுக்கான மானியம் உறுதிசெய்யப்பட்டது. அதிகமாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள், செல்வந்தர்கள் போன்றோரிடம் வசூலிக்கப்படும் கட்டணத் தொகையை வைத்து, ஏழைகளுக்கு மானிய விலையில் அல்லது இலவசமாக மின்சாரம் வழங்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன் பின்னர், 2017, 2017, 2018, 2020-ம் ஆண்டுகளில் மின்சார சட்டத்திருத்த மசோதாவைக் கொண்டுவர மத்திய அரசு தொடர் முயற்சிகளை எடுத்தது. எனினும், பல்வேறு காரணங்களின் அடிப்படையில் அவை வரைவு மசோதாக்களாகவே இருந்தன. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த முறை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் பெரும் விவாதத்தை இம்மசோதா எழுப்பியிருக்கிறது.

ஏன் எதிர்ப்பு?

புதிய மசோதாவின்படி மின் விநியோகத்தில் பெரும் பங்கு தனியார் வசம் சென்றுவிடும் என்பதுதான் எதிர்ப்பாளர்களின் முக்கியக் குற்றச்சாட்டு. ஏற்கெனவே, பெரும்பாலான மாநிலங்களில் அரசு மின்விநியோக நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. 2020 மார்ச் 31 நிலவரப்படி, நாட்டில் உள்ள 56 மின்விநியோக நிறுவனங்களில் 36 நிறுவனங்கள் ஏறத்தாழ 32,900 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கிவருகின்றன. இந்த மசோதாவின்படி, 42-வது சட்டப்பிரிவில் திருத்தங்கள் செய்து, மின் விநியோகத்தைத் தனியாருக்குத் திறந்துவிட அரசு திட்டமிடுவதாக மின்சாரத் துறை ஊழியர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இதில் இன்னொரு பிரச்சினையும் சுட்டிக்காட்டப்படுகிறது. அதாவது, மின் விநியோகத்தில் தனியார் நிறுவனங்களுக்கு இடையில் போட்டிச் சூழல் உருவாகும் என்பதுடன், அரசு நிறுவனங்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையேயும் போட்டி உருவாகும் என்பதுதான்.

இந்த மசோதாவின்படி, மின் விநியோகத்தில் விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என அரசு நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் நிபந்தனை, தனியார் நிறுவனங்களுக்குப் பொருந்தாது. இதுபோன்ற தளர்வுகளால், குடியிருப்புப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்தாமல், லாபம் தரும் வணிக நிறுவனங்களுக்கு மின் விநியோகம் செய்வதில் தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டும். அரசு நிறுவனங்களைவிட அதிக லாபமும் பார்க்கும். அரசு நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்திக்கும். அதன் சங்கிலித் தொடர் விளைவாக மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் வேலையிழப்பார்கள்.

விளக்கமும் விமர்சனமும்

வாடிக்கையாளர்களைக் கவர தனியார் நிறுவனங்களுக்குள் போட்டி ஏற்படும்; இதன் மூலம் மின்கட்டணம் குறையும்; மக்களுக்குத் தடையில்லா மின்சாரம் கிடைக்கும் என்றெல்லாம் அரசு விளக்கம் தருகிறது. எனினும், ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களைக் கவர மலிவான கட்டணங்களை விதிக்கும் தனியார் செல்போன் நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் அந்தச் சேவைகளை முற்றிலும் சார்ந்து இயங்கும் சூழல் உருவானதும் பல்வேறு காரணங்களைச் சொல்லி கட்டணத்தைக் கடுமையாக உயர்த்தியதை மக்கள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள்.

தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டால் எல்லாம் சரியாக நடக்கும் என்று நம்புவது தவறு என ஏராளமான உதாரணங்களும் உலகமெங்கும் இருக்கின்றன. மின் விநியோகத்தைப் பொறுத்தவரை தனியார் நிறுவனங்களில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், அதைச் சார்ந்திருக்கும் மக்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள். பிரிட்டனில் இதே போல மின் விநியோகத்தில் தனியார் நிறுவனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதனால் மோசமான பின்விளைவுகள் ஏற்பட்டதையும் எதிர்ப்பாளர்கள் உதாரணமாகச் சொல்கிறார்கள்.

இந்த மசோதா அரசமைப்புச் சட்டத்துக்கே விரோதமானது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்த மசோதாவின் மூலம் கூட்டாட்சி அமைப்பையே சிதைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக அவை விமர்சிக்கின்றன. மின்சாரம் பொதுப்பட்டியலில் இருக்கிறது. எனவே, மத்திய அரசு, மாநில அரசு என இரு தரப்பும் மின்சாரம் தொடர்பான சட்டங்களை இயற்ற முடியும். ஆனால், மத்திய அரசு கொண்டுவர முயற்சிக்கும் இந்த மசோதா, மின் விநியோகத்தில் மாநில அரசுகளின் அதிகாரத்தைக் குறைத்துவிடும் என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிக்கின்றன. முக்கியமாக, மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமலேயே இந்த மசோதாவைக் கொண்டுவந்தது ஏன் என்று கேள்வி எழுப்புகின்றன.

அதுமட்டுமல்ல, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக அமலுக்கு வந்தால், மின்விநியோகம் செய்ய யாருக்கு அனுமதி வழங்குவது என்று முடிவுசெய்யும் உரிமை மாநில அரசுகள் வசம் இருக்காது. அதை மத்திய அரசு எடுத்துக்கொள்ளும். முந்தைய இரு வரைவு மசோதாக்களில் இந்த ஷரத்து இடம்பெறவில்லை. இந்த முறை இதைச் சேர்த்திருக்கிறது மத்திய அரசு. இதுவும் எதிர்க்கட்சிகளைக் கொந்தளிக்கச் செய்திருக்கிறது.

இனி என்ன?

நாடாளுமன்ற நிலைக்குழுவில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் இடம்பெற்றிருப்பதால், இதுகுறித்து முறையாக விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்கிறார் அமைச்சர் ஆர்.கே.சிங். இன்றைய சூழலில், இதில் அரசியல் ரீதியான இன்னொரு சிக்கலும் அரசுக்கு இருக்கிறது. இந்தக் குழுவுக்குத் தலைமை வகிப்பது நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் தேசியத் தலைவரான லலன் சிங். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அக்கட்சி அங்கம் வகித்தபோது இருந்த நிலை இப்போது இல்லை. என்னதான் மக்களவையில் பாஜகவுக்கு அசுர பலம் இருந்தாலும், நிலைக்குழுவின் தலைவர் எடுக்கும் முடிவே முக்கியமானது.

இந்த மசோதாவை எதிர்த்து தொழிற்சங்கங்கள் ஏற்கெனவே ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்தன. நிலவரத்தைப் பொறுத்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவும் அவை தயாராக இருக்கின்றன. மறுபுறம், ‘இப்படி எதிர்மறையான கருத்துகளை மட்டும் பார்க்கக்கூடாது; மின்னுற்பத்தி, விநியோகம், மானியம் போன்றவற்றில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம்’ எனும் குரல்களும் ஒலிக்கின்றன.

உட்கட்டமைப்பில் கோளாறுகள், திறமையற்ற நிர்வாகம் போன்ற காரணங்களால் தொடர்ந்து நஷ்டத்தை எதிர்கொண்டுவரும் மின்சாரத் துறைக்குப் புத்துயிர் ஊட்ட, இதுபோன்ற மாற்றங்கள் அவசியம் என்றும் பலர் வலியுறுத்துகிறார்கள். ஒரு துறையில் நஷ்டம் தொடர்ந்தால், புதிய திட்டங்களைக் கொண்டுவருவது, விரிவுபடுத்துவது போன்ற எந்த முயற்சிக்கும் வாய்ப்பில்லாமல் போகும் எனச் சுட்டிக்காட்டும் அரசுத் தரப்பு, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான அவசியம் அதிகரித்து வருவதையும் சுட்டிக்காட்டுகிறது.

எது எப்படி இருந்தாலும் இறுதியாக சாமானிய மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதே இவ்விவகாரத்தில் முன்வைக்கப்படும் பொதுக் கருத்து. சம்பந்தப்பட்டவர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் எனப் பார்ப்போம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in