மந்தை நோயெதிர்ப்பு சக்தி: உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது?

மந்தை நோயெதிர்ப்பு சக்தி: உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது?
டாக்டர் சவுமியா சுவாமிநாதன்

மந்தை நோயெதிர்ப்பு சக்தியை அடைவதன் மூலம் கரோனாவைக் கட்டுப்படுத்தலாம் எனும் கருத்தாக்கம் முட்டாள்தனமானது என்றும், அதனால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறியிருக்கிறார். இது தொடர்பாக, என்டிடிவி செய்தி சேனலுக்குப் பேட்டியளித்திருக்கும் அவர், ஒமைக்ரானின் துணைத் திரிபுகளில் பிஏ.1-ஐ ஒப்பிட பிஏ.2 வீரியமானது என்றும், மற்ற துணைத் திரிபுகளை விட அதிகமாகப் பரவக்கூடியது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒமைக்ரான் ஒரு புதிய திரிபு என்பதால் அதன் பாதிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனத்தால் இன்னமும் கருத்து சொல்ல முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஒமைக்ரான் கண்டறியப்பட்டு இரண்டு மாதங்கள்தான் ஆகின்றன என்பதால், ஒமைக்ரான் தொற்றுக்குள்ளாகி மீண்டவர்கள் மீண்டும் தொற்றுக்குள்ளாவது குறித்தும், நீண்டகால நோயெதிர்ப்பு சக்தியை அது எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றியும் உடனடியாகக் கருத்து சொல்ல முடியாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

“ஒமைக்ரான் தொற்றுக்குள்ளாகி மீண்டு, பின்னர் டெல்டா தொற்றுக்குள்ளான சிலரின் ரத்த மாதிரிகள் மீதான சில ஆய்வுகளைப் பார்த்தோம். அடுத்து வரும் திரிபுகளிலும் அதேபோன்ற நிலை காணப்படுமா என்பது எங்களுக்குத் தெரியாது” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

தடுப்பூசிகளை உருவாக்கிய காலகட்டத்தில் பரவியிருந்த திரிபுகளை ஒமைக்ரானுடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், டெல்டா உள்ளிட்ட முந்தைய திரிபுகளைவிடவும் தடுப்பூசிகள் ஒமைக்ரானை வலுவிழக்கச் செய்வதில் எதிரணுக்கள் (antibodies) அதிகப் பலனளிக்கவில்லை என்று குறிப்பிட்டார். எனினும், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மத்தியில் உயிரிழப்புகளும், மோசமான பாதிப்புகளும் குறைவு என்றும் அவர் கூறியிருக்கிறார். “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழலையும், மரணங்களையும் குறைப்பதில் தடுப்பூசிகள் சிறப்பாகச் செயலாற்றுகின்றன. முதியோரும், எளிதில் நோய்த்தொற்றுக்குள்ளாகும் சூழலில் இருப்பவர்களும் தற்போது நல்ல பாதுகாப்பைப் பெறுகிறார்கள்” என்று அவர் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in