மாற்றுத் திறனாளிகளின் பயணம் சுகமாவது எப்போது?

அரசின் இலவசப் பயண அறிவிப்பில் நீடிக்கும் சிக்கல்கள்
மாற்றுத் திறனாளிகளின் பயணம் சுகமாவது எப்போது?

அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என அறிவித்த கையோடு நகரப்பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள், அவர்களுக்கு துணைக்கு வரும் பயணத்துணைவர் ஒருவருக்கும் கட்டணமில்லை என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால், மாற்றுத்திறனாளிகளின் இலவசப் பயணத்தில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் இதன் நோக்கத்தையே சிதைக்கின்றன.

மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்கள் பணி செய்யும் இடத்துக்கு இலவசமாகச் சென்றுவரும் வகையில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் வாயிலாக இலவசப் பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத் திறனாளி அவர் பணி செய்யும் அரசு அல்லது தனியார் நிறுவனத்தில் இருந்து, தொழில் நிமித்தமாக தினசரி பயணம் செய்வதற்கான சான்றிதழை வாங்கிக் கொடுத்து இந்த விலையில்லா பயண அட்டையை பெறவேண்டும். இந்த இலவச பேருந்து பயண அட்டை ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படவும் வேண்டும்.

இந்த நடைமுறை தினசரி பேருந்துப் பயணத்தில் வேலைக்குச் செல்லும் மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமே பயன்பட்டு வந்தது. அதேநேரம், சாதாரண பயணங்களுக்குச் செல்வோர் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகலைக்கொடுத்து சலுகைக் கட்டணத்தில் அரசுப்பேருந்தில் பயணித்து வந்தனர். இந்நிலையில் தான், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநகர, நகர அளவில் குறிப்பிட்ட பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என அரசாணை வெளியிட்டார். ஆனால், இதில் சில சிக்கல்கள் இருப்பது தொடர்கதையாகி வருகிறது.

கண்ணன்
கண்ணன்

இதுகுறித்து பேராசிரியரும், பார்வை மாற்றுத் திறனாளியுமான கண்ணன் நம்மிடம் கூறும்போது, “மாற்றுத் திறனாளியும், ஏழ்மையும் ஒட்டிப் பிறந்த குழந்தைகள் போலவே இருக்கிறது. முறையான கல்வித் தகுதி பெற்றும், நிரந்தரப் பணி இடம் கிடைக்காமல் ஏற்கெனவே மிகுந்த சிரமத்தில் பல மாற்றுத் திறனாளிகள் இருக்கிறார்கள். இந்நிலையில் தான், தமிழக முதல்வர் தாயுள்ளத்தோடு மாற்றுத் திறனாளிகளுக்குப் பேருந்துப் பயணம் இலவசம் என அறிவித்தார். அதை மிகவும் வரவேற்கிறோம்.

அதேநேரத்தில் இதற்குப் போக்குவரத்துக் கழகங்கள் சில வரையறைகள் வைத்துள்ளது. பெண்களுக்கு இலவசம் என பதாகை வைத்திருக்கும் லோக்கல் பேருந்துகளில் மட்டுமே மாற்றுத் திறனாளிகளுக்கும் இலவசம் எனச் சொல்கிறார்கள். மற்றப் பேருந்துகளில் தவறுதலாக ஏறிவிட்டால், அதற்குரிய டிக்கெட் கட்டணத்தை வசூலித்துவிடுகின்றனர்.

பார்வை மாற்றுத் திறனாளி ஒருவர், முன்னால் இருக்கும் பேருந்தின் பெயர்ப்பலகையை இன்னொருவரிடம் கேட்டோ, அல்லது தானே மிகவும் சிரமப்பட்டோ தான் வாசிக்க முடியும். இந்தச் சூழலில் பார்வையற்ற மாற்றுத் திறனாளி இது இலவசப் பேருந்தா சாதாரண பேருந்தா என்பதை எப்படி அறிந்து ஏறமுடியும். நானே பலமுறை தவறுதலாக ஏறி கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்று பயணிக்கும் சூழலுக்குள் சிக்கினேன்.

இதேபோல், கால் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி ஒருவர் பேருந்துக்காக நிற்கிறார். அவரால் ஏற்கெனவே நிற்கமுடியாது. இதனால் வரும் பேருந்துகளையெல்லாம் நிராகரித்துவிட்டு அவர் இலவசப் பேருந்துக்காக காத்திருக்க வேண்டும். இது எவ்வளவு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்? விகிதாச்சார அடிப்படையில் ஆண்களுக்குச் சமமாகப் பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் மாற்றுத் திறனாளிகள் அப்படி இல்லை. அவர்கள் எப்போதும் பயணித்துக்கொண்டே இருக்கவும் மாட்டார்கள். எனவே அரசு, மாற்றுத் திறனாளிகளின் நிலையைக் கருத்தில்கொண்டு அனைத்துப் பேருந்துகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசம் என அறிவிக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in