மது போதைக்கு எதிராக இயக்கம் எப்போது முதல்வரே?

‘திருவடிக்குடில்’ சுவாமிகள் கேள்வி
மது போதைக்கு எதிராக இயக்கம் எப்போது முதல்வரே?
திருவடிக்குடில் சுவாமிகள்

‘தமிழக அரசு கரோனாவுக்கு எதிராக மிகப்பெரிய அளவிலான தடுப்பூசி முகாம்கள் நடத்தியதைப் போல, மது மற்றும் போதைப் பொருளுக்கு எதிராகவும் மிகப்பெரிய ஒரு இயக்கத்தை தொடங்க வேண்டி இருக்கிறது. அந்த நாள் எப்போது வரும் முதல்வரே’ என்று கும்பகோணம்,ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தின் நிறுவனர் ‘திருவடிக்குடில்’ சுவாமிகள் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:

’’தற்போது, தமிழகத்தில் பரவலாக போதைப்பழக்கம் பெருகிக் கிடக்கிறது. குறிப்பாக மது, பான்பராக் குட்கா மற்றும் கஞ்சா ஆகியவை தமிழகம் முழுவதும் புழக்கத்தில் உள்ளது. கோயில் நகரமான கும்பகோணத்தில் 2 தினங்களுக்கு முன்னால் 120 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேலூரை அடுத்த வாணியம்பாடியில், கஞ்சா கடத்தல் கும்பலால் சமூக ஆர்வலர் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

தஞ்சாவூரில் கடந்த வாரம் மதுபோதையில் வந்த ஆயுதப்படை காவலர்களால் உணவகம் ஒன்று சூறையாடப்பட்டு, உணவக உரிமையாளர் தாக்கப்பட்டார். இது தொடர்பாக காவலர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மது போதை உச்சக்கட்டத்தை தாண்டி அபாயத்தில் இருக்கிறது. குடும்பங்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்கால வாழ்வு மிகப்பெரிய கேள்விக்குறியாகி, நல்லொழுக்கம் என்பது கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலையில் உள்ளது. மதுவைக் கட்டுப்படுத்துவது இந்த நிலையில் இருக்கும்போது, கஞ்சா கடத்தல் கும்பல்களால் நடைபெறக்கூடிய கொடூரங்கள் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடச் சொல்லி, பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என, இன்று (13.09.2021 திங்கட்கிழமை) சட்டசபையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது.

படிப்படியாக பூரண மதுவிலக்கு என்கின்ற தமிழக அரசின் கொள்கை முடிவின் முதல்படியாக இது இருக்கும் என்று நம்புகிறோம். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 5470 டாஸ்மாக் மதுக்கடைகளில் கணிசமான கடைகள் மூடப்படுமா? என்பதையும் தமிழக முதல்வர் தெளிவுபடுத்துவார் என்பது எங்கள் எதிர்பார்ப்பு.

மதுவை கட்டுப்படுத்துவதற்காக படிப்படியாக பூரண மதுவிலக்கு என்கின்ற கொள்கை முடிவு, கடந்த ஆட்சியின் போது எடுக்கப்பட்டு தற்போதும் நடைமுறையில் இருப்பதாக நம்புகிறோம். தவறுகளே நடைபெறாமல் இருப்பதற்கு முதலில் மதுபான கடைகளையும் இதுபோன்ற கஞ்சா கடத்தல் கும்பல்களையும் கட்டுப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

இதனை சட்டபூர்வமாகத்தான் தடுக்க முடியுமே தவிர வேறு வழியில்லை. எனவே மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு மக்கள் நல்வாழ்வுத் துறை, சுகாதாரத் துறை கரோனாவுக்கு எதிராக மிகப்பெரிய அளவிலான கோவிட் தடுப்பூசி முகாம்கள் நடத்தியதைப் போல, மது போதைப் பொருளுக்கு எதிராக மிகப்பெரிய ஒரு இயக்கத்தை தொடங்க வேண்டும். அது எந்த நாள் என்பதை முதல்வர் அறிவிப்பார் என்று நம்புகிறோம்.

’அல்லவை செய்யாது நல்லவை செய்து குடிகளை காக்கும் மன்னவன்’ என்ற சிந்தனையை, நமது முதல்வர் மனதில்வைத்து தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி போதைப்பொருள் பழக்கத்தையும் குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்”

இவ்வாறு திருவடிக்குடில் சுவாமிகள் தனது கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.