மகளிர் தினத்தில் இளம்பெண்ணை நெகிழவைத்த விஜய் மக்கள் இயக்கம்

மகளிர் தினத்தில் இளம்பெண்ணை நெகிழவைத்த விஜய் மக்கள் இயக்கம்

வாழ்வாதாரம் இன்றி தவிப்பவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தரும் வகையில் தையல் இயந்திரங்களை அளிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கும் பட்டுக்கோட்டை நகர விஜய் மக்கள் இயக்க தலைவர் ஆதி.ராஜாராம் இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு மேலும் ஒரு தையல் இயந்திரத்தை வழங்கியிருக்கிறார்.

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பட்டுக்கோட்டையில் இன்று மகளிர் தின விழா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் விஜய் மக்கள் இயக்கத்தின் பட்டுக்கோட்டை மகளிர் அணியினர் கலந்து கொண்டனர். நகர தலைவர் ஆதி.ராஜாராம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். மகளிர் தின விழாவின் ஒரு பகுதியாக வறியவர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கக்கூடிய வகையில் ஆதிராஜாராம் செய்துவரும் தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

விஜய் பிறந்தநாள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் மற்றும் மகளிர் தினம் உள்ளிட்டவற்றில் கணவனை இழந்த பெண்கள், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்கள் ஆகியோருக்கு அவர்கள் வாழ்க்கையில் சுய தொழில் மூலம் முன்னேறும் வகையில் தையல் எந்திரம் வழங்கி பொருளாதார ரீதியாக மேம்படுவதற்கான செயலை ஆதி.ராஜாராம் வழக்கமாக செய்து கொண்டுள்ளார்.

அதன்படி இன்று பட்டுக்கோட்டை தேரடி தெருவில் வசிக்கும் தந்தையை இழந்த சத்யபிரியா என்ற பட்டதாரி பெண்ணுக்கு வீடு தேடி சென்று தையல் மிஷின் வழங்கப்பட்டது. நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வரும் சத்யபிரியா போதுமான வருமானம் இல்லாமல் சிரமப்படுவதை அடுத்து அவருக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டதாக ஆதி.ராஜாராம் தெரிவித்தார்.

பட்டுக்கோட்டை நகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்த பெண், மறைந்த ஒன்றியக் குழு உறுப்பினரின் மனைவி உட்பட இதுவரை 20 பேருக்கு ஆதிராஜாராம் தையல் இயந்திரங்களை வழங்கியிருக்கிறார். மகளிரை மாண்புறச் செய்யும் அவரது இந்த மனிதாபிமானம் மிக்க செயல் மேலும் தொடர வேண்டும் என்று மகளிர் பலரும் மனமார வாழ்த்தினர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in