பறவைகள் வருகையால் சீசனுக்கு முன்பே களைகட்டும் வேட்டங்குடி சரணாலயம்!

பறவைகள் வருகையால் சீசனுக்கு முன்பே களைகட்டும் வேட்டங்குடி சரணாலயம்!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்துக்கு சீசனுக்கு முன்னதாகவே வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளன.

திருப்பத்தூா் அருகே கொள்ளுகுடிப்பட்டி கண்மாயில் 38.4 ஏக்கரில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் வெளிநாடு மற்றும் வெளி மாநில பறவைகள் இனப்பெருக்கத்துக்காக ஆயிரக் கணக்கில் இங்கு வருவது வழக்கம். மீண்டும் பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் அந்தப் பறவைகள் குஞ்சுகளுடன் இருப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றுவிடும்.

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்தே அவ்வப்போது மழை பெய்து வருவதால், சரணாலயம் அமைந்துள்ள கண்மாய் முழுவதும் பசுமை போா்த்தியதுபோல் காணப்படுகிறது. இதனால் சீசனுக்கு முன்பே ஜூலை மாதத்தில் இருந்து உண்ணிகொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், நத்தை கொத்திநாரை போன்ற வெளிநாடு மற்றும் வெளி மாநில பறவைகள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளன. இதனால் சுற்றியுள்ள கிராம மக்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கொள்ளுக்குடிபட்டி கிராம மக்கள், “இந்த வருசம் எங்க பகுதியில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் ஜூலை மாத தொடக்கத்திலேயே பறவைகள் வரத் தொடங்கிவிட்டன. இந்த வருசம் இதுவரைக்கும் பாம்புதாரா, நத்தை கொக்கி நாரை, மாா்கழியன், கருநீல அரிவாள் மூக்கன் உள்ளிட்ட 10 வகையான பறவைகள் வந்துள்ளன. அவை அச்சமின்றி இனப்பெருக்கம் செய்து தங்களது இருப்பிடம் திரும்ப வசதியாக வழக்கம் போல இந்த ஆண்டும் தீபாவளியை வெடிவெடிக்காமல் கொண்டாடப் போகிறோம்” என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in