புற்றுநோயாளிகளுக்குக் காய்கறி இலவசம்!

கருணை உள்ளத்துடன் சேவை செய்யும் சேவியர்
புற்றுநோயாளிகளுக்குக் காய்கறி இலவசம்!

உதவி செய்வதற்கு பெரிய அளவில் பணம்தான் வேண்டும் என்று இல்லை. மற்றவருக்கு உதவி செய்ய வேண்டும் என்னும் மனம் இருந்தாலே போதும்.

அப்படியான நல் மனதோடு தன் கஷ்டப்பாடுகளுக்கு மத்தியிலும் தன் சேவையால் கவனிக்க வைக்கிறார், கேரளத்தின் ஆலுவாவைச் சேர்ந்த ஜெபி சேவியர். ஆலுவாவில் காய்கறி, பழக்கடை போட்டிருக்கும் இவர், புற்றுநோயாளிகளுக்கு இலவசமாகவே காய்கறிகளைக் கொடுக்கிறார்.

ஜெபி சேவியர்
ஜெபி சேவியர்

இதுகுறித்து ஜெபி சேவியர் ‘காமதேனு’விடம் விரிவாகவே பேசினார். “ஆலுவாவில் ஐந்து இடங்களில் காய்கறிக் கடை நடத்திவருகிறேன். இந்த ஐந்து கடைகளிலும் புற்றுநோயாளிகளுக்கு காய்கறி இலவசமாக வழங்குகிறோம். வாரத்துக்கு ஒருமுறை 400 ரூபாய் மதிப்பிலான காய்கறித் தொகுப்பைப் புற்றுநோயாளிகளுக்கு இலவசமாக வழங்குவோம். புற்றுநோயாளிதான் என்று இல்லை அவரது குடும்பத்தினர், உறவினர் என யார் வேண்டுமானாலும் வந்து இலவச காய்கறியைப் பெற்றுச் செல்லலாம். வாரத்துக்கு 600 புற்றுநோயாளிகளின் குடும்பத்தினர் இதன் மூலம் காய்கறி பெற்றுச் செல்கின்றனர்.

மற்ற எந்த நோய்களையும்விட கொடூரமானது புற்றுநோய். அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் ரீதியாகச் சந்திக்கும் வேதனைகள் ஒருபக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் அவர்களது குடும்பத்தினர் பொருளாதார ரீதியாகச் சந்திக்கும் சிக்கல்கள் மிக அதிகம்” என்ற சேவியர், தனக்கு இந்த எண்ணம் தோன்ற என்ன காரணம் என்றும் விளக்கினார்.

“ஒருநாள் இரவு நான் கடையை அடைத்துக்கொண்டிருந்தேன். அப்போது என் கடைவாசலில், அழுகிப்போனதாக நாங்கள் ஏற்கெனவே தூக்கி வீசியிருந்த காய்கறிகளை ஒரு நடுத்தர வயதுக்காரர் பொறுக்கிக்கொண்டிருந்தார். நான் முதலில் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றுதான் நினைத்தேன். அவரிடம் பேச்சு கொடுத்தபோது, அவர் தன் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் விஷயத்தைச் சொன்னார். அவருக்கான மருத்துவச் செலவைப் பார்த்துவிட்டு குடும்பத்தையும் நடத்த முடியாத பொருளாதார நெருக்கடியைப் பற்றிச் சொன்னார். வீட்டில் குழந்தைகள் பசியோடு இருப்பதாகவும் அவர்களுக்குச் சமைத்துக் கொடுக்க, இந்தக் காய்கறிகளைப் பொறுக்குவதாகவும் சொன்னார்.

உடனே, அவர் கீழே கிடந்து பொறுக்கிய காய்கறிகளைத் தூக்கிப் போடச் சொல்லிவிட்டு, நல்ல காய்கறிகளைக் கொடுத்தேன். இது நடந்து 5 வருடங்கள் ஆகிவிட்டன. அப்போது ஒரு கடையாக இருந்த என் காய்கறிக் கடைக்கு இப்போது 5 கிளைகள் வந்துவிட்டன. அப்போதிருந்தே வாரத்துக்கு 600 புற்றுநோயாளிகளுக்கு இலவசமாக 400 ரூபாய் மதிப்புள்ள காய்கறித் தொகுப்பை வழங்கிக்கொண்டிருக்கிறேன். ஏறத்தாழ இது எனது மொத்த லாபத்தில் பாதித் தொகை. ஆனால், இதில் கிடைக்கும் மனநிறைவு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் நோய் எதிர்ப்புசக்தியைப் பெற சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டியது அவசியம். இதேபோல் இறைச்சிக் கடைக்காரர்களும் மனது வைத்தால், புற்றுநோயாளிக்கு சரிவிகித ஊட்டச்சத்து உணவு கிடைக்கும். இதுகுறித்தும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்துவருகிறேன்” என அடுத்தவர்களின் வலியை உணர்ந்தவராகப் பேசுகிறார் ஜெபி சேவியர்!

இந்தக் கருணை உள்ளத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்தானே?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in