அகற்றப்படாத டாஸ்மாக், புயலான இளந்தென்றல்!

ஆட்சியர் அலுவலகம் வந்த இளந்தென்றல், தமிழரசன்
ஆட்சியர் அலுவலகம் வந்த இளந்தென்றல், தமிழரசன்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்நாளில், மனு கொடுக்க கூட்டமான கூட்டம் வரிசையில் நின்றது. அந்த வரிசையில் 6-ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி இளந்தென்றலும், 4-ம் வகுப்பு படிக்கும் அவளது தம்பி தமிழரசனும் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். ’இவங்க என்னத்துக்குய்யா வந்திருக்காங்க?’ என்று கையில் மனுவோடு நின்றுகொண்டிருந்த இவர்களை ஆச்சரியத்துடன் பார்த்தது, மனு அளிக்க வந்திருந்த மக்கள் கூட்டம்.

அந்த மதுபானக்கடை
அந்த மதுபானக்கடை
நெறையாபேரு சாராயக் கடையை மாத்தச்சொல்லி போராட்டமெல்லாம் நடத்தியும் இன்னும் மாத்தாம வைச்சிருக்காங்க. அதான் அப்பாகிட்ட கேட்டுட்டு நாங்களே போய் கலெக்டர் ஆபீஸ்ல மனு கொடுத்தோம். மனுவை நானே என் கைப்பட மனசுல உள்ளதையெல்லாம் எழுதி எடுத்துப்போனேன். நிச்சயமா கடையை அங்கிருந்து மாத்திடுறோம்னு சொல்லியிருக்காங்க. ஒன்னாம்தேதி ஸ்கூல் திறக்கப்போறாங்க. அதுக்குள்ள அந்தக்கடையை மாத்திட்டாங்கன்னா நல்லாயிருக்கும்...

முறைப்படி தங்கள் பெயரை பதிவு செய்துவிட்டு, மனு அளிக்கச் சென்றார்கள். அங்கே ஆட்சியர் இல்லை, வரும் முன் காப்போம் திட்டத்தை தொடக்கி வைப்பதற்காகச் சென்றிருந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாபுதீன் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கிக் கொண்டிருந்தார். இந்த சிறுமியையும் சிறுவனையும் பார்த்தவர் உடனடியாக அழைத்து விசாரித்தார்.

எதுவும் பேசாத அவர்களோ தங்கள் கையில் இருந்த மனுவை அவரிடம் கொடுத்தனர். அதை வாங்கிப் படித்தவர், ஆச்சரியத்தில் உறைந்து போனார். ஏனென்றால் அவர்கள் கொடுத்த மனுவில் படிக்க உதவி வேண்டும், அவர்களின் குடும்பத்துக்கு நலத்திட்டம் வேண்டும் என்பனபோன்ற அவர்களுக்கான எந்தத் தேவையும் இல்லை. மாறாக, அரியலூர் ரயில்வே நிலையம் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடையை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்கள் அளித்த மனு.

மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளிக்கும் இளந்தென்றல், தமிழரசன்
மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளிக்கும் இளந்தென்றல், தமிழரசன்

அந்தப் பகுதியில்தான் அவர்கள் படிக்கும் ‘நிர்மலாகாந்தி அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி’ இருக்கிறது. அந்தப் பள்ளிக்கு அருகிலேயே இருக்கும் டாஸ்மாக் கடையால் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால், அந்தக் கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.

உடனடியாக டாஸ்மாக் மாவட்ட மேலாளரை அழைத்த மாவட்ட வருவாய் அலுவலர், அந்தக் கடை குறித்த விவரங்களை கேட்டறிந்தார். உடனடியாக மாற்றவும் ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தினார். ”நிச்சயமாக அந்தக் கடையை மூட நடவடிக்கை எடுக்கிறோம்” என்று சிறுமிக்கு உத்தரவாதம் அளித்து அனுப்பி வைத்தார்.

இந்தச் சிறுவயதில் தன்னைப்போன்ற மாணவ-மாணவியருக்கு இடையூறாக இருக்கும் ஒரு டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்ற உயரிய சிந்தனையோடும், துணிச்சலோடும் ஆட்சியர் அலுவலகத்தின் படியேறிய அந்தச் சிறுமி இளந்தென்றலிடம் அவளது தந்தை இளவரசன் வழியாகப் பேசினேன். ’’எங்க ஸ்கூலுக்கு பக்கத்திலேயே அந்த சாராயக்கடை இருக்கு. காலைல ஸ்கூலுக்குப் போகும்போது வழியிலல்லாம் கிளாஸ் ஓடு ஒடைஞ்சு கெடக்கும். செருப்புப்போடாம போனா கால்ல குத்தி காயமாயிடுது. சாயங்காலத்துல ஸ்கூல் விட்டு வரும்போது குடிச்சுக்கிட்டு வழியிலேயே நிப்பாங்க. பசங்க வராங்களேன்னு ஒதுங்கக்கூட மாட்டாங்க.

இளந்தென்றல்
இளந்தென்றல்

சில நேரம் அவங்களுக்குள்ள சண்டையும் போட்டுப்பாங்க. அப்பல்லாம் எங்களுக்கு பயமாயிருக்கும். நெறையாபேரு கடையை மாத்தச்சொல்லி போராட்டமெல்லாம் நடத்தியும் இன்னும் மாத்தாம வைச்சிருக்காங்க. அதான் அப்பாகிட்ட கேட்டுட்டு நாங்களே போய் கலெக்டர் ஆபீஸ்ல மனு கொடுத்தோம். மனுவை நானே என் கைப்பட மனசுல உள்ளதையெல்லாம் எழுதி எடுத்துப்போனேன். நிச்சயமா கடையை அங்கிருந்து மாத்திடுறோம்னு சொல்லியிருக்காங்க. ஒன்னாம்தேதி ஸ்கூல் திறக்கப்போறாங்க. அதுக்குள்ள அந்தக்கடையை மாத்திட்டாங்கன்னா நல்லாயிருக்கும்” என்று பெரிய மனுஷி கணக்காகப் பேசினாள்.

இளந்தென்றல் அளித்த மனு
இளந்தென்றல் அளித்த மனு

பள்ளிக்கு அருகில் இருக்கும் அந்த மதுபானக்கடையை வேறிடத்துக்கு மாற்றவேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், திமுக உள்ளிட்ட கட்சிகளும் பலமுறை போராட்டம் நடத்தி இருக்கின்றனர். இப்போது திமுக ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில், கடையை மாற்றவேண்டும் என்று ஆட்சியரிடம் இம்மாவட்ட அமைச்சர் சிவசங்கரும் வலியுறுத்தியிருக்கிறாராம்.

இந்நிலையில் இளந்தென்றல் மனுவோடு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த புகைப்படம், சமூக ஊடகங்களில் வைரலானது. அந்தப் புகைப்படம் தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கும் போயிருக்கிறது. அதை உடனடியாக அரியலூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்து, பள்ளிக்கூடம் அருகே உள்ள மதுபானக் கடையை அப்புறப்படுத்த அறிவுறுத்தியிருக்கிறார். அதன் பேரில், அந்த மதுபானக்கடை வேறு இடத்துக்கு மாற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார். கடையை மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளும் தொடங்கி இருக்கின்றன.

இக்கால சிறுவர் சிறுமியர், தாம் சார்ந்த சமுதாயம் நன்றாக இருக்கவேண்டும் என்று சிந்திக்கிறார்கள். அதற்காகப் போராடவும் செய்கிறார்கள் என்பது சமூக மாற்றத்தின் அடையாளம். போராட்டம் தொடரட்டும், மாற்றங்கள் நிகழட்டும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in