கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விக் கட்டணம்: தகவல் சேகரிக்கும் அரசு

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விக் கட்டணம்: தகவல் சேகரிக்கும்  அரசு

இந்தியாவில் கரோனா வைரஸ் இப்போது கட்டுக்குள் வந்துள்ளது. நேற்று கரோனாவால் உயிரிழப்பு எதுவுமே பதிவாகவில்லை. கரோனா கட்டுப்பாடுகளும் தமிழகத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விக் கட்டணம் செலுத்தப்பட்ட விவரம், அவர்களின் தேவைகள் ஆகியவை குறித்த விவரங்களை தமிழக அரசு சேகரித்து வருகிறது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் உயிர் இழந்தனர். கரோனா வைரஸ் தொற்றால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் தங்கள் பெற்றோரையும் இழந்தனர். மத்திய அரசு கரோனா வைரஸ் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா பத்து லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கியது. மாநில அரசோ, கரோனா தொற்றில் பெற்றோர் இழந்த குழந்தைகளுக்கு 5 லட்ச ரூபாயும், பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு தலா 3 லட்ச ரூபாயும் நிவாரணமாக வழங்கியது.

மாநில அரசின் குழந்தைகள் நலக்குழுமத்தின் சார்பில் கரோனா வைரஸ் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளும் தொடர்ந்து பின்தொடரப்படுகிறார்கள். அந்தவகையில் நடப்புக் கல்வியாண்டு முடிவடையும் சூழலில் பள்ளிகளில் கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விக் கட்டணம், அதில் எவ்வளவு கட்டப்பட்டுள்ளது? பாக்கி எவ்வளவு இருக்கிறது? என்பது போன்ற தகவல்களை குழந்தைகள் நலக்குழுமத்தின் வாயிலாக தமிழக அரசு பெற்றுவருகின்றது. இதன் மூலம் பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் இந்தக் குழந்தைகளின் கல்விக் கட்டணத்திற்காக நிதி ஒதுக்கப்படும் எனவும் தெரிகிறது. தமிழக அரசின் இந்த நன்முயற்சி கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வியில் வெளிச்சம் பாய்ச்சியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in