பறவைகளுக்கு உணவு, தண்ணீர் வைத்தால்தான் ஜாமீன்!

திருச்சி நீதிமன்றத்தின் வித்தியாசமான நிபந்தனை
பறவைகளுக்கு உணவு
பறவைகளுக்கு உணவு

”பல விசித்திரமான வழக்குகளை இந்த நீதிமன்றம் சந்தித்திருக்கிறது” என்ற பராசக்தி பட வசனத்தை நினைவுபடுத்துவது போல, தற்போது நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்குவதற்கு பல விசித்திரமான நிபந்தனைகளை விதிக்கின்றன. குடிபோதையில் நண்பனை பீர்பாட்டிலால் குத்தியவருக்கு, ‘இனி குடிக்க மாட்டேன்’ என்று பிரமாணப்பத்திரம் வழங்கினால் ஜாமீன் வழங்கப்படும் என்று சென்னை நீதிமன்றம் அண்மையில் நிபந்தனை விதித்தது. அதுபோல பறவைகளுக்கு உணவும், தண்ணீரும் வைக்கவேண்டும், காவல் நிலையத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளின் பேரில் ஜாமீன் வழங்கியிருக்கிறது திருச்சி நீதிமன்றம்.

பறவைகளுக்கு உணவு, தண்ணீர்
பறவைகளுக்கு உணவு, தண்ணீர்

திருச்சியில் திருவெறும்பூர் உட்பட பல பகுதிகளில் குட்கா விற்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், திருவெறும்பூர் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது ரவிக்குமார் என்பவரது டீக்கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள குட்காவும், காட்டூரில் காளியம்மாள் பெட்டிக் கடையில் ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள குட்காவும் கைப்பற்றப்பட்டன. இருவர் மீதும் வழக்குப் பதிந்த போலீஸார், கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீன்கோரினர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படும் என்று உறுதியளித்த நீதிமன்றம் அதற்காக விதித்த நிபந்தனைதான் அசத்தல் ரகம். 20 நாட்களுக்கு தினந்தோறும் காவல் நிலைய வளாகத்தைச் சுத்தம் செய்ய வேண்டும். மேலும், அந்த வளாகத்தில் உள்ள மரங்களில் தங்கியிருக்கும் பறவைகளுக்கு உணவும், தண்ணீரும் அளிக்க வேண்டும் என்ற 2 நிபந்தனைகளின் பேரில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

காவல் நிலைய வளாகத்தை சுத்தம் செய்யும் போது..
காவல் நிலைய வளாகத்தை சுத்தம் செய்யும் போது..

இதைத் தொடர்ந்து இன்று திருவெறும்பூர் காவல் நிலையத்துக்கு வந்த அவர்கள் இருவரும் நிலைய வளாகத்தை சுத்தம் செய்தனர். மேலும், அங்குள்ள பறவைகளுக்கு உணவளிக்கும் விதமாக, மரத்தில் மண்சட்டிகளை தொங்கவிட்டு, அதில் உணவும் நீரும் வைத்தனர்.

திருச்சியில் பல்வேறு குற்றவாளிகள் மாமியார் வீட்டுக்கு வருவது போல பந்தாவாக வந்து காவல்நிலையத்தில் கையெழுத்திட்டுச் செல்லும் நிலையில், காவல் நிலையத்தை சுத்தம் செய்தால் மட்டுமே ஜாமீ ன் என்ற நிபந்தனையை விதித்து, அவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது திருச்சி நீதிமன்றம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in