நீலகிரியில் முழு கடையடைப்பு

பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் மறைவுக்கு அஞ்சலி
நீலகிரியில் முழு கடையடைப்பு

முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக, நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று கடையடைப்பு நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் ராணுவ மையத்தோடு, முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியும் அமைந்துள்ளது. இங்கு இந்தியாவின் நட்பு நாடுகளாகக் கருதப்படும் 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ராணுவப் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களில் 10 சதவீதத்தினர் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா, ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தோராவர்.

இந்த ராணுவ மைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் நினைவு அருங்காட்சியகத்தைத் திறப்பதற்காகவும், பயிற்சி ராணுவ அதிகாரிகளுக்கான சிறப்பு அரங்கைத் திறந்துவைக்கவும் நேரம் ஒதுக்கியதோடு, பயிற்சி அதிகாரிகளுக்கான விரிவுரையாற்றவும் பிபின் ராவத் ஒப்புக்கொண்டுள்ளார்.

இவர், ஏற்கெனவே வெலிங்டன் ராணுவ மையத்துக்கு வந்துள்ள நிலையில், 3-வது முறையாக வருவதற்கு ஒப்புக் கொண்டிருந்தபோது தான், இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த நிலையில், கேப்டன் வருண் சிங் தீ காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு உயர் சிகிச்சைக்காக பெங்களூரு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

வெலிங்டன் எம்ஆர்சி ராணுவ முகாமில் நேற்று(டிச.9) காலை உயிரிழந்தோரின் உடல்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அனைவரது உடல்களும் டெல்லி கொண்டு செல்லப்பட்டன.

கடையடைப்பு

இந்நிலையில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று கடையடைப்பு நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் 2,500 கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் அனைத்தும் இன்று காலையில் இருந்தே மூடப்பட்டிருக்கின்றன. உதகை நகராட்சி மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளுமே அடைக்கப்பட்டிருக்கின்றன. அதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மார்க்கெட் பகுதி ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

உதகை கமர்சியல் சாலையில் உள்ள 300-க்கும் அதிகமான கடைகளும் இன்று அடைக்கப்பட்டதால், இந்தப் பகுதியே மிகவும் அமைதியாக உள்ளது.

குன்னூர் மற்றும் கோத்தகிரி சுற்றுப்புறப் பகுதிகளான அருவங்காடு, பர்லியார், ஓட்டுப்பட்டரை, டெட்போர்டு, சேலாஸ், எலநள்ளி, கொடநாடு, கட்டபெட்டு, கொட்டகெம்பை, கீழ் கோத்தகிரி, சோலூர் மட்டம், குஞ்சப்பனை உள்ளிட்ட பகுதிகளிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

மாவட்டத்தின் பிற பகுதிகளான மஞ்சூர், பந்தலூர், கூடலூர் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகா பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள், வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் உட்பட அனைவரும் கூடலூர் நகராட்சி அலுவலகம் அருகிலிருந்து புறப்பட்டு, முக்கிய சாலைகள் வழியாக மவுன ஊர்வலமாகச் சென்று அஞ்சலி செலுத்தினர்.

தனியார் பேருந்துகள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்களும் இயங்கவில்லை.

மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசுப் பேருந்துகள் மட்டுமே வழக்கம்போல் இயங்கின. அதேநேரம் இன்று சுற்றுலாப் பயணிகளின் வருகையும் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in