‘மீண்டும் மஞ்சப்பை’ வெல்லுமா?: துணிப்பை இயக்கத்தின் முன்னோடி சொல்வதென்ன?

‘மீண்டும் மஞ்சப்பை’ வெல்லுமா?: துணிப்பை இயக்கத்தின் முன்னோடி சொல்வதென்ன?
'மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணர்வு இயக்க நிகழ்ச்சியில், அதற்கான இலச்சினையை வெளியிடும் முதல்வர்

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சள் பைகளை பயன்படுத்தும் விதமாக, ’மீண்டும் மஞ்சப்பை’ என்ற மக்கள் இயக்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(டிச.23) தொடங்கி வைத்துள்ளார். பிளாஸ்டிக் அரக்கனுக்கு எதிரான இந்த நடவடிக்கையின் அடுத்தகட்ட எதிர்பார்ப்புகள் குறித்து அறிந்துகொள்வதும், மஞ்சப்பை இயக்கத்தை முழுமையாக்க உதவும்.

ஒருமுறை பயன்படுத்தி தூக்கிய எறியப்படும் ’யூஸ் அண்ட் த்ரோ’ பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிப்புக்கு ஆளாகிறது. இதற்கு முடிவுகட்ட, இம்மாதிரி ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தடைசெய்யும் தமிழக அரசின் உத்தரவு 2019, ஜன.1 முதல் அமலில் உள்ளது. ஆனால் பொதுமக்கள் மத்தியிலான விழிப்புணர்வு இன்மையாலும், அரசு இயந்திரத்தின் நடைமுறை தொய்வுகளாலும் அந்த உத்தரவு கிடப்புக்குப் போனது.

தற்போது அதே விழிப்புணர்வை மக்கள் பங்களிப்புடன் ஒரு இயக்கமாக கட்டமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பிளாஸ்டிக் பைகளுக்கு தடை என்ற எதிர்மறை நடவடிக்கைக்கு மாற்றாக, துணிப்பை தூக்குவோம் என நேர்மறை நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, மஞ்சப்பை பயன்பாடுகளை அரசு ஊக்குவிக்க இருக்கிறது.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களால் உலகம் முழுக்கவே பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நன்னீர் நிலைகளில் தொடங்கி கடல் வரை இந்தப் பிளாஸ்டிக் கழிவுகளின் சேகரத்தால் பல தலைமுறைகளுக்கான கேடுகளை சேர்த்து வைத்திருக்கிறோம். ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறிவதில் தொடங்கி, இதர பிளாஸ்டிக் பொருட்கள்வரை பிளாஸ்டிக் அரக்கனில் பேதம் கிடையாது. படிப்படியாக எல்லா பிளாஸ்டிக் பயன்பாடுகளுக்கும் முடிவுகட்டுவதும் அதற்கான ஆய்வுகளில் ஈடுபடுவதும் தற்போதைய சூழலில் அவசியமாகிறது.

பள்ளி குழந்தைகளுக்கு துணிப்பை
பள்ளி குழந்தைகளுக்கு துணிப்பை

தமிழக அரசு தொடங்கியுள்ள மஞ்சப்பை இயக்கத்தின் முன்னோடியாக, பல வருடங்களாக தனிநபர்களும், தன்னார்வ அமைப்புகளும் தமிழகத்தில் துணிப்பை பிரச்சாரத்தை தொடர்ந்து வந்துள்ளன. அவர்களில் கடலூரை மையமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் ’தமிழ்க்காடு துணிப்பை இயக்கம்’ முக்கியமானது. பத்தாண்டுகளுக்கு முன்னர் இவர்கள் தொடங்கிய இந்த அமைப்பு, ’துணிப்பை தூக்கத் துணிவோம்’ என்ற பெயரில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ப்ளீச் செய்யப்படாத, ரசாயன சாயம் ஏற்றப்படாத, இயற்கை மையில் அச்சிட்ட துணிப்பைகளை தயாரித்து விநியோகித்து வருகிறது. இவற்றை சந்தை விற்பனைக்கான உத்தியாக அல்லாது, தங்களது சுற்றுச்சூழல் சார்ந்த இயக்கத்தின் நோக்கத்துக்காக நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். அவை குறித்தும், தமிழக அரசின் தற்போதை மஞ்சப்பை இயக்கத்தின் அடுத்தக்கட்ட எதிர்பார்ப்பு குறித்தும், தமிழ்க்காடு துணிப்பை இயக்கத்துக்கு வித்திட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் ரமேஷ் கருப்பையா, காமதேனு இணையதளத்திடம் பேசினார்.

நிகழ்ச்சி ஒன்றில் துணிப்பை வழங்கும் ரமேஷ் கருப்பையா(வலது)
நிகழ்ச்சி ஒன்றில் துணிப்பை வழங்கும் ரமேஷ் கருப்பையா(வலது)

”மறுசுழற்சிக்கு வாய்ப்பில்லாத ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக மக்களை ஒருங்கிணைக்கும் அரசின் முயற்சி வரவேற்புக்குரியது. ஆனால் நாம் செல்ல வேண்டிய தொலைவு இன்னும் அதிகம் உள்ளது. பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழிக்கு மாற்றாக, மஞ்சப்பை அறிமுகம் போல, நம்மைச் சிலந்தி வலையாய் ஆக்கிரமித்திருக்கும் இதர பிளாஸ்டிக் பயன்பாடுகளுக்கும் மாற்றுகளை உருவாக்க வேண்டும். இயற்கையில் எல்லாவற்றுக்கும் தீர்வு உண்டு. பால், எண்ணெய் பாக்கெட் தேவைக்கான பிளாஸ்டிக்குக்கு மாற்றாகவும், நம் மண்ணில் ஏராளமாகக் கிடைக்கும் வாழை நார்களில் இருந்து பைகளை உருவாக்கலாம். இன்னும் இதர பிளாஸ்டிக் பயன்பாடுகளை குறைக்கும் வகையில், சணல், பருத்தி இழைகள், மூங்கில், பனை, ஈச்சம், வைக்கோல், அழிஞ்சில் என இயற்கையில் கிடைக்கும் சூழலுக்கு பாதிப்பில்லாத பொருட்களைக் கொண்டே பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு விடை தரலாம்.

இதற்கு அடுத்தபடியாக திடக்கழிவு மேலாண்மைக்கு முக்கியத்துவம் தரவேண்டும். நெகிழிப் பைகள் மட்டுமன்றி, நுகர்வோர் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கான பிளாஸ்டிக் உறைகள், குடுவைகள் ஆகியவையே இந்த திடக்கழிவுகளுக்கு காரணமாகின்றன. திடக்கழிவு மேலாண்மையின் ஆதார நடவடிக்கையாக, அந்தக் கழிவுகளை தவிர்ப்பதற்கான நடைமுறைகளை அரசு வகுக்க வேண்டும். ஏனென்றால் மனிதர்கள் நலன் மட்டுமன்றி வனப்பகுதி, கடல்கள் என ஒட்டுமொத்த உயிர்க்கோளத்துக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் சவாலாக மாறி வருகின்றன. அதிலும் இந்தக் கரோனா காலத்தில் அதிகரித்துள்ள நெய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்களின் சேர்மானத்தால் புதிய ரக திடக்கழிவுகள் அதிகரித்துள்ளன” என்ற ரமேஷ் கருப்பையா, அரசின் தற்போதை மஞ்சப்பை இயக்கத்துக்கும் சில யோசனைகளை முன்வைத்தார்.

”கிராமம்தோறும் தையல் தெரிந்த மகளிர் மூலமாக துணிப்பைகள் தயாரித்து, சுற்றுவட்டாரப் பகுதிகளின் வணிக நிறுவனங்களின் தேவைக்கான துணிப்பைகளை விநியோகிக்கலாம். இதன் மூலம் கிராமப்புற பெண்களின் வேலைவாய்ப்பு, தற்சார்பு, உள்ளூர் தேவைகளைப் பூர்த்தி செய்வது எளிதாகும். அரசு முன்னெடுக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்களும் இதில் பங்கெடுக்கலாம். இவற்றின் மூலம் தமிழக முதல்வரின் கனவுகள் பல பரிமாணங்களில் நிறைவேற வாய்ப்பாகும்” என்றார்.

தமிழ்க்காடு துணிப்பை இயக்கம் சார்பாக இயற்கை முறையிலான துணிப்பைகளை தயாரித்து வந்தபோதும், இவர்களது நோக்கம் துணிப்பை மட்டுமல்ல. இயற்கை விவசாயம், பசுமைத் திருமணம், சூழல் பாதுகாப்பு ஆகிய மக்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவர்கள், தங்களது கோட்பாடுகளை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்காக சில புதுமையான ஏற்பாடுகளில் இறங்கினார்கள். பொது நிகழ்வுகளில் மரக்கன்று வழங்குவது போல துணிப்பை பிரச்சாரத்தை ஆரம்பித்தார்கள்.

அதற்கு வரவேற்பு அதிகரிக்கவே, துணிப்பையில் மொழி, நிலம், கலாச்சாரம், சூழல் சார்ந்த முத்திரை வாசகங்களை அச்சிட்டு வழங்கி வருகின்றனர். அவற்றுக்கு இளைஞர்கள் மத்தியிலும் வரவேற்பு அதிகரித்து வருகிறது. “சிறு குழுவினால் இவ்வளவு செய்ய இயலும் எனும்போது, அரசாங்கம் முன்னெடுக்கும் மஞ்சப்பை இயக்கம் நிச்சயம் மக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஆனால் மஞ்சப்பையோடு தேங்கி விடாது, பிளாஸ்டிக்குக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளிலும் அரசாங்கம் ஈடுபட வேண்டும்” என்ற கோரிக்கையுடன் முடித்தார் ரமேஷ் கருப்பையா.

Related Stories

No stories found.