மூர்ச்சையான குரங்குக்கு மூச்சு தந்தவருக்கு முதல்வர் பாராட்டு!

மூர்ச்சையான குரங்குக்கு மூச்சு தந்தவருக்கு முதல்வர் பாராட்டு!
பிரபுவை வாழ்த்தும் முதல்வர்

மூர்ச்சையான குரங்கு குட்டிக்கு தன் மூச்சைத் தந்து உயிரைக் காப்பாற்ற முயன்ற கார் ஓட்டுநருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்டம், ஒதியம் பகுதியில் கடந்த வாரம், கார் ஓட்டுநரான பிரபு என்பவர் அடிபட்டுக்கிடந்த குரங்குக் குட்டியை அடையாளம் கண்டார். 8 மாத வயதுடைய அந்தக் குரங்குக் குட்டி, தெரு நாய்கள் துரத்தி கடித்ததில் காயம்பட்டு நினைவிழந்து கொண்டிருந்தது.

அதை மீட்டு உடனடியாக பெரம்பலூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முயன்றார் பிரபு. பாதி வழியிலேயே குரங்கு மயங்கிப் போனதை அறிந்தார். இதயத்துடிப்பும் குறைந்து வந்தது. கைவசமிருந்த தண்ணீர் குடுவை மூலம் நீர் புகட்ட முயற்சித்தார். ஆனால், நீர் இறங்கவில்லை. கிட்டத்தட்ட இறக்கும் நிலையிலிருந்த குரங்கு குட்டியின் உயிரைக் காக்க மனிதர்களுக்கு வழங்கப்படுவது போல, இதயச் செயல்பாட்டைத் தூண்டுவதற்கான சிபிஆர் முதலுதவி முயற்சிகளை மேற்கொண்டார். தொடர்ந்து மூர்ச்சை அடைந்த குரங்கின் உயிரை மீட்க, வாயோடு வாய் வைத்து தனது மூச்சைத் தந்தார்.

முறைப்படி முதலுதவி வழங்குவதற்கான பயிற்சிகள் பெற்றிருந்த பிரபுவின் முயற்சிக்குப் பலன் கிடைத்தது. குரங்குக் குட்டி உயிர் மீண்டது. பெரம்பலூர் கால்நடை மருத்துவமனையில் சேர்த்ததுடன், வனத் துறையினருக்கும் தகவல் தந்தார்.

பிரபுவின் மூச்சினால் உயிர் மீண்ட குரங்குக் குட்டி பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்துபோனது. குரங்கின் உயிர் காக்க, பிரபு மேற்கொண்ட கடைசி நேரப் போராட்டத்தை அவரது நண்பர் வீடியோ எடுத்திருந்தார். அது சமூக ஊடகங்களில் பரவி பிரபுவுக்கு பாராட்டுகளை வாரி வழங்கியது. இதுகுறித்து கேள்வியுற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரபுவை நேரில் வரவழைத்து வாழ்த்தினார்.

மூச்சு தந்தும் குரங்கு குட்டியின் உயிரைக் காப்பாற்ற முடியாத துயரத்திலிருந்த பிரபு, தன் மூலம் விலங்கு நேயம் பலரையும் சென்று சேர்ந்ததிலும், முதல்வரின் பாராட்டிலும் திருப்தியடைந்திருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in