சைக்கிள் மிதித்து அலுவலகம் வந்த ஆட்சியர்!

சைக்கிள் மிதித்து அலுவலகம் வந்த ஆட்சியர்!
மிதிவண்டியில் வரும் அருண் தம்புராஜ்

சுற்றுச்சூழல் மாசுபடுதலை தடுக்கும் விதமாக நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தனது முகாம் அலுவலகத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று சைக்கிள் மிதித்து வந்தார்.

தமிழ்நாட்டில் சுற்றுப்புற சூழல் மாசுபாட்டை தடுக்கும் விதமாக மாசற்ற அலுவலக வார பயண நாள் கடைபிடிக்கப்படுகிறது. வாகன பயன்பாட்டை பெருமளவில் குறைத்துக் கொள்ளும் விதமாக இன்று அரசு அலுவலகங்கள் வாகனப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகளை கடைபிடித்தன.

அவ்வகையில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், இன்று நாகை ஆயுதப்படை மைதானம் அருகில் உள்ள தனது முகாம் அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையில் உள்ள இரண்டரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்கிளில் வந்தார். அப்போது, இரு சக்கர வாகனங்களில் அலுவலகம் மற்றும் பள்ளி - கல்லூரிக்கு சென்றவர்கள், ஆட்சியர் சைக்கிளில் வந்ததை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆட்சியர்
மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆட்சியர்

ராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றிய அருண் தம்புராஜ் மிகவும் நேர்மையான அதிகாரி. அனைத்து விஷயங்களிலும் ஒழுங்கைக் கடைப்பிடிப்பார். மற்றவர்களும் அதைக் கடைபிடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். ஒவ்வொரு நாளும் அரசு அலுவலகங்கள் துவங்கும் முன்பாக ஏதாவது ஒரு அரசு அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகள் நேரத்திற்கு வருகிறார்களா அலுவலகம் நல்ல முறையில் நடைபெறுகிறதா? என்றெல்லாம் ஆய்வுகளை மேற்கொள்கிறார்.

இல்லம் தேடி கல்வித் திட்டத்திலும் மிகுந்த ஆர்வம் காட்டி செயல்பட்டு வருகிறார். நேற்று ( டிச 7 ) நாகப்பட்டினம் ஒன்றியம் பாலையூர் ஊராட்சி அழிஞ்சமங்கலம் என்ற ஊருக்கு இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தொடங்கி வைக்க சென்றவர், அங்கு தரையில் மாணவர்களுடன் மாணவர்களாக அமர்ந்து பாடம் நடத்தினார். ஆட்சியரின் இத்தகைய செயல்கள் பொதுமக்களால் மிகவும் வரவேற்கப்படுகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in